தொகுதி பங்கீடு.. 1 மணி நேரம் ஆலோசித்த எல்.முருகன் - தங்கமணி.. பின்னணியில் நடந்தது என்ன?
நாமக்கல்: நாமக்கல்லில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனுடன், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி ஒரு மணி நேரம் தனியாக சந்தித்து ஆலோசித்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆலோசனையின் போது பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி மார்ச் மாதத்தில் 3 முறை தமிழ்நாடு வருகிறார். மார்ச் 1ஆம் தேதி மதுரையிலும், மார்ச் 6ஆம் தேதி வேலூரிலும், மார்ச் 11ஆம் தேதி திருச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை
இதனிடையே அதிமுக - பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்க டெல்லி மேலிடம் அறிவுறுத்தி இருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் நாளை முதல் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்பட உள்ளது. இந்த தொகுதிப் பங்கீட்டை பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்கவும் திமுக தலைமை திட்டமிட்டிருக்கிறது.
பாஜக கணக்கு
இதனால் அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீட்டு குழுவை அமைக்க பாஜக தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே மறைமுகமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும், அதனை இறுதி செய்ய பாஜகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக இம்முறை 35 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்று தீவிரமாக உள்ளது.
எல்.முருகன் - தங்கமணி சந்திப்பு
ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்வாரா என்பதே கேள்வியாக இருக்கிறது. இதனிடையே தேமுதிக கூட்டணிக்கு வராததால், அந்த தொகுதிகளை பாமக மற்றும் அமமுக கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் பாஜகவும் கூடுதல் தொகுதிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சந்தித்திருக்கிறார்.
சந்திப்பின் பின்னணி என்ன?
அதிமுகவில் தங்கமணி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இடையில் நல்ல நட்பு இருக்கிறது. தமிழ்நாடு உதய் மின் திட்டத்தில் இணைவதற்காக பியூஷ் கோயல் அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியுடன் நெருக்கம் காட்டினார். இதனால் பியூஷ் கோயல் வலியுறுத்தலின் பெயரில் தான் எல்.முருகன் தங்கமணி இடையிலான சந்திப்பு நடந்ததாக சொல்லப்படுகிறது.
1 மணி நேரம் ஆலோசனை
சுமார் ஒரு மணி நேரம் வரை இவர்களின் சந்திப்பு நடந்திருக்கிறது. இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணம் மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. கடந்த முறை தொகுதி பங்கீட்டுக் குழுவில் தங்கமணியும் இருந்தார். இதன் காரணமாகவே இந்த சந்திப்பு நடந்திருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications