கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா.. டாஸ்மாக் கடைகளை ஆகஸ்ட் 1 முதல் 3 வரை மூட கலெக்டர் உத்தரவு
நாமக்கல்: கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில், சங்க காலத்தில் புகழ்பெற்ற கடை ஏழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், கொடையையும் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆடி மாதம் 17, 18 தேதிகளில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் அரசின் பல்துறை பணிவிளக்க கண்காட்சி, பல துறைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலர் கண்காட்சி, மூலிகைச் செடிகள் கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளது.
இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் குடும்பத்துடன் கொல்லிமலை பகுதிக்கு வருகை புரிந்து சிறப்பிக்க உள்ளதால், வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி, மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஒருநாள் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை அறிவிப்பு, வங்கிகளுக்கு பொருந்தாது.
கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழாவிற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறைத் தலைவர்கள், அனைத்து பணியாளர்களும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கம், வல்வில் ஓரி சிலை, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் ஆகிய இடங்களில் வல்வில் ஓரி விழாவிற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கொல்லிமலை செம்மேடு, சோளக்காடு, செங்கரையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications