காதை கிழிக்கும் ஹாரன் சத்தம்.. கழட்டுறியா இல்லையா? வண்டிகளை நிறுத்தி சம்பவம் செய்த பெண் ஆர்.டி.ஓ!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தனியார் பேருந்துகள், காதை கிழிக்கும் வகையில் ஏர் ஹாரன் அடித்துச் செல்வது பொதுமக்களை தொந்தரவுக்கு உள்ளாக்கி வந்த நிலையில், பேருந்து நிலையத்திற்குள் சென்று தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்களை அதிரடியாக கழற்ற வைத்துள்ளார் பெண் ஆர்.டி.ஓ.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தனியார் பேருந்துகள் அதிக அளவில் ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்துவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையிலும், தனியார் பேருந்து ஓட்டுநர்கள், அதனை அகற்றுவதாக இல்லை. இந்நிலையில் தான் ராசிபுரம் பேருந்து நிலையத்திற்கு சென்ற மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா, தனியார் பேருந்துகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது விதியை மீறி பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்களை உடனடியாக கழற்றுமாறு உத்தரவிட்டார். பேருந்து நிலையத்தில் ஒவ்வொரு தனியார் பேருந்துகளையும் சோதனை செய்து அதிலிருந்த ஏர் ஹாரன்களை அகற்ற வைத்தார். மேலும், பேருந்து ஓட்டுநர்களிடம், "அடுத்த முறை ஆய்வுக்கு வரும்போது இந்த ஏர் ஹாரனை யூஸ் பண்றதை பார்த்தேன் அவ்வளவுதான்" என எச்சரித்தார்.
ஆர்டிஓ நித்யா எச்சரித்தும் சில ஓட்டுநர்கள் ஏர் ஹாரனை கழற்ற மறுத்த நிலையில் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார். இன்னும் சில தனியார் பேருந்து ஓட்டுநர்களோ, ஆர்டிஓ ஹாரன் குறித்து ஆய்வு மேற்கொள்வதை அறிந்து அவர் கண்ணில் படுவதற்கு முன்பாகவே ஹாரன்களை கழற்றிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த பெண் ஆர்டிஓ நித்யா, "பொறுமையா கழட்டுங்க. ஒண்ணும் அவசரம் இல்ல. நான் பொறுமையாதான் வரேன். வெரி குட். இப்படித்தான் இருக்க வேண்டும்" எனக் கூறினார்.

மேலும், ஏர் ஹாரன்களை பயன்படுத்தும்போது வேக்கம் பிரஷர் குறைந்து பேருந்தின் பிரேக் சரியாக பிடிக்காது என தெரிந்தும் ஏன் நீங்கள் இப்படி இதை பயன்படுத்துகிறீர்கள். இது உங்கள் உயிருக்கு நீங்களே வைத்துக்கொள்ளும் உலை. சூசைடு செய்து கொள்வதற்கு சமம். இனி யாருமே ஏர் ஹாரன்களை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. அடுத்த முறை சிக்கினால் லைசென்ஸை பறிமுதல் செய்துவிடுவேன் என என ஓட்டுநர்களிடம் கண்டிப்போடு தெரிவித்தார்.
சில பேருந்து ஓட்டுநர்கள் ஏர் ஹாரன்களை கழற்றி, பேருந்து நிலையத்தில் இருந்த டீக்கடைகள், பெட்டிக்கடைகளில் பதுக்கி வைத்திருந்தனர். ஆர்டிஓ, போன பின்பு அதனை எடுத்து மாட்டிக் கொள்ளலாம் என நினைத்தனர். அதனை அறிந்த ஆர்டிஓ நித்யா, அந்த ஹாரன்களைக் கைப்பற்றி தனியார் பேருந்துகளின் சக்கரத்திலேயே ஏற்ற வைத்து நசுக்க வைத்தார்.

பேருந்து ஓட்டுநர்களிடமே, பைப் ஹாரன்களை கொடுத்து, "டயருக்கு அடியில எலுமிச்சம் பழம் வைப்பீங்கள்ல.. அந்த மாதிரி போய் வைங்க.. போங்க" எனக் கூறி, ஏர் ஹாரன்களை நசுக்க வைத்தார். பெண் ஆர்.டி.ஓவின் அதிரடி நடவடிக்கையால் ராசிபுரம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.













Click it and Unblock the Notifications