73 வயதில் "மீண்டும் பூத்த" உண்மை காதல்.. இணையத்தை கலக்கும் ப்யூட்டி பாட்டியின் லவ் ஸ்டோரி!
73 வயது பாட்டி ஒருவர், காதலர் தினத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
நியூயார்க்: அமெரிக்காவில் 70 வயதில் விவாகரத்தான வயதான பெண்மணி ஒருவர், தனது 73 வயதில் காதலில் விழுந்து, மறுமணம் செய்த சம்பவம், காதலுக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறது.
"காதலுக்கு கண் இல்லை" என்பதுதான் வழக்கமாகக் கூறப்படும் பழமொழி. ஆனால் காதலுக்கு வயதும் ஒரு தடையில்லை என்பதை அவ்வப்போது சில உண்மைக் காதலர்கள் மெய்யாக்கி வருகின்றனர். வயதாகி விட்டால் காதலிக்கக்கூடாது என்ற கட்டாயமில்லை, எந்த வயதிலும் தனக்கான துணையை, மனதுக்கு பிடித்த இணையைத் தேர்வு செய்து கொள்ளும் உரிமை எல்லோருக்குமே உள்ளது. இந்த பக்குவத்தை உணர்ந்தவர்கள் தங்களது வாழ்க்கையை எந்தவொரு கட்டத்திலும் சந்தோசமானதாக மாற்றிக் கொள்ள இயலும். இதை உண்மை என மெய்ப்பிக்கும் வகையில் அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸை சேர்ந்த 73 வயதான பாட்டி கரோல். செவிலியரான இவர்தான் தற்போது சமூகவலைதளங்களில் அதிகம் பேசப்படும் நாயகியாக வலம் வருகிறார். தனது 73 வயதில் கரோல் காதல் திருமணம் செய்து கொண்டதுதான் இதற்கு காரணம். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவுதான் அவரை இந்தளவிற்கு பிரபலமாக்கி விட்டது.

மீண்டும் பூத்த காதல்
காதலர் தினத்தன்று அவர் வெளியிட்ட அப்பதிவில், "வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. கிட்டத்தட்ட 40 வருட மணவாழ்க்கைக்குப் பின்னர் என்னுடைய 70-வது வயதில் நான் மீண்டும் சிங்கிளாவேன் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அதேபோல, என்னுடைய 73-வது வயதில், அதுவும் உலகமே கொரோனா போன்றதொரு பெருந்தொற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் இடைபட்ட காலத்தில், எனக்கான ஒரு உண்மையான காதலை நான் கண்டறிவேன் என நான் நினைக்கவேயில்லை. ஆனால் அது நடந்துவிட்டது' என நெகிழ்ச்சியுடன் கரோல் கூறியுள்ளார்.

குவிந்த விமர்சனம்
கரோலின் இந்தப் பதிவைக் கண்டதும் வழக்கம்போலவே நேர்மறையான மற்றும் எதிர்மறையான கமெண்ட்டுகள் குவியத் தொடங்கின. சிலர், கரோலின் இந்த முடிவை வரவேற்று, வாழ்த்துக்களைத் தெரிவிக்க, மேலும் சிலரோ, 'இந்த வயதில் இதெல்லாம் தேவையா?' என விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். எனவே இதற்கும் விளக்கமளித்து கரோல் பதிவு வெளியிட்டுள்ளார்.

கரோலின் விளக்கம்
அதில், "இது மிகவும் ஆச்சர்யமளிக்கும் நிகழ்வுதான். உங்கள் அனைவரது வாழ்த்துக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலரும் என்னுடைய முதுமை, அதனால் எனக்கு உள்ள மனநிலை மாற்றங்கள், பொருளாதார நிலைப்பாடு, பாலியல் சார்ந்த விஷயங்கள் குறித்தெல்லாம் கணித்து பேசுவதை காணமுடிகிறது. என்னை பற்றி பிறர் யூகங்களில் பேசுவது, எனக்கு வேடிக்கையாக இருக்கிறது" என கரோல் தெரிவித்துள்ளார்.

நமக்கான பாடம்
ஊர் என்ன சொல்லும், உலகம் என்ன சொல்லும் என நினைத்துக் கொண்டிருந்தால், நமக்கு கிடைத்த இந்த ஒரு வாழ்க்கையை நம்மால் சந்தோசமாக வாழ முடியாது. 'என்ன வேணா நடக்கட்டும்.. நான் சந்தோசமா இருப்பேன்.. உசிருக்கு வேறென்ன வேணும்..' என தனுஷ் பாடல் மாதிரி, கிடைத்த வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து தீர்த்து விட வேண்டும் என்பதுதான் இதுபோன்ற சம்பவங்கள் நமக்குச் சொல்லும் பாடம்.












Click it and Unblock the Notifications