சீனா மீதான வரியை குறைங்க.. டிரம்பிடம் வெடித்த எலான் மஸ்க்! பின்னனி இதுதான்! அதிபரின் பதில் தெரியுமா?
நியூயார்க்: அமெரிக்கா - சீனா ஆகிய நாடுகள் மாறி மாறி வரியை விதித்து வருகின்றன. ஏற்கனவே சீனாவுக்கு அமெரிக்கா 54 சதவீத வரியை விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக சீனாவும் 34 சதவீத வரியை அமெரிக்காவுக்கு விதித்துள்ளது. இந்த கூடுதல் வரியை சீனா இன்றைக்குள் நீக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் 50 சதவீத வரியை போடுவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையே வர்த்தக போர் வெடித்துள்ள நிலையில் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் அமெரிக்க வரி விதிப்புக்கு எதிராக பேசி வருவதோடு, சீனா மீதான அதிகப்படியான வரியை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக சொல்லப்படும் நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்கா.. சீனா.. இரு நாடுகளும் வல்லரசாக வலம் வருகின்றன. இந்த நாடுகள் இடையே யார் பெரியவர்கள் என்ற அதிகார போட்டி நிலவி வருகிறது. இதனால் அமெரிக்கா, சீனா ஆகியவை எதிரெதிர் துருவங்களாக உள்ளன. வல்லரசு நாடான ரஷ்யாவை அமெரிக்கா எதிர்க்கும் நிலையில் சீனா ஆதரித்து வருகிறது.

இப்படி அமெரிக்கா, சீனா ஆகியவை தொடர்ந்து எதிரெதிர் நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. அதோடு உலகம் முழுவதும் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கில் சீனா பல நாடுகளில் முதலீடு செய்து வருகிறது. இது அமெரிக்காவுக்கு சிக்கலாக மாறி உள்ளது. இதனால் அமெரிக்கா - சீனா இடையேயான மோதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
அமெரிக்கா - சீனா பதிலடி வரிகள்
குறிப்பாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதல் இருநாடுகளுக்கு இடையேயான விரிசல் என்பது இன்னும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதற்கு டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு முறை தான் காரணமாகும். அதாவது அமெரிக்காவின் பொருட்களுக்கு ஒவ்வொரு நாடுகளும் விதிக்கும் வரிகளை போல் அமெரிக்காவும் அந்த நாடுகளுக்கு விதிக்க தொடங்கி உள்ளது. அதன்படி டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு சீனாவுக்கு அடுத்தடுத்து தலா 10 சதவீத வரி என்று மொத்தம் 20 சதவீத வரியை விதித்தார். அதன்பிறகு கடந்த 2ம் தேதி பல நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்தார். அப்போதும் சீனாவை அவர் விடவில்லை. சீனாவுக்கு கூடுதலாக 34 சதவீத வரிகளை விதித்தார்.
இதற்கு பதிலடியாக சீனாவும் வரிகளை விதிக்க தொடங்கி உள்ளது. முதலில் சீனா அமெரிக்காவின் சோயா பீன்ஸ், மாட்டு இறைச்சி, பழங்கள், காய்கறிகள், பால் பொருட்களுக்கு 10 சதவீதமும் கோதுமை, மக்காச்சோளம், பருத்தி, கோழி இறைச்சிக்கு 15 சதவீதமும் வரி போட்டது. அதன்பிறகு கடந்த 2 ம் தேதி டிரம்ப் அறிவித்த புதிய வரிக்கு பதிலடியாக கூடுதலாக 34 சதவீத வரியை சீனா அறிவித்தது. இது இருநாடுகள் இடையே வர்த்தக போரை உருவாக்கி உள்ளது.
இன்றுடன் முடியும் காலக்கெடு
இதனால் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப், சீனா அமெரிக்காவுடன் மோத வேண்டாம். சீனா இன்றை தினத்துக்குள் 34 சதவீத கூடுதல் வரியை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்கா, சீனாவுக்கு 50 சதவீத வரியை விதிக்கும் என்று மிரட்டி உள்ளார். இதற்கு சீனா தரப்பில் இன்னும் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால் சீனா அமெரிக்கா மீதான வரியை குறைக்கிறதா? இல்லாவிட்டால் அமெரிக்கா இன்னும் 50 சதவீத வரியை சீனாவின் பொருட்களுக்கு விதிக்கிறதா? என்ற கேள்வி என்பது எழுந்துள்ளது.
இதற்கிடையே தான் தற்போது முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சீனா மீதான வரியை குறைக்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்பிடம் கூறி உள்ளாராம். எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே நல்ல உறவு உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் பிரசாரத்துக்கு நிதி உதவிகளை எலான் மஸ்க் அள்ளி வழங்கினார். இதற்கு கைமாறாக டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க்கிற்கு முக்கிய பொறுப்பு வழங்கினார். அதன்படி அமெரிக்காவின் திறன் மேம்பாட்டு துறை தலைவராக நியமித்தார். இருவரும் சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
சீனா வரியை குறைக்க மஸ்க் டிமாண்ட்
இந்நிலையில் தான் சீனா மீதான வரியை குறைக்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்பிடம், எலான் மஸ்க் தனிப்பட்ட முறையில் பேசி உள்ளார். ஆனால் டொனால்ட் டிரம்ப் அவரது பேச்சுக்கு செவிசாய்க்கவில்லை. அதாவது சீனா மீதான பரஸ்பர வரியை குறைக்க டொனால்ட் டிரம்ப் மறுத்துவிட்டார்.
இருப்பினும் டிரம்பின் நிலைப்பாட்டை மாற்ற எலான் மஸ்க் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒரு தொழிலதிபராக அவர் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறார். ஆனால் சீனா மீதான டொனால்ட் டிரம்ப்பின் கோபம் இன்னும் தணியவில்லை. இதனால் எலான் மஸ்க்கின் இந்த முயற்சி வெல்லுமா? என்பதை நாம் அறிய இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.
எலான் மஸ்க்கின் எக்ஸ் பதிவு
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக எலான் மஸ்க் பேசுவது இது முதல் முறையல்ல. சீனா மீது 50 சதவீத வரியை விதிப்பதாக நேற்று டிரம்ப் அறிவித்தார். இந்த சமயத்தில் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொருளாதார நிபுணர் மில்டன் பிரிட்மேன் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில் வரி விதிப்பு என்பது சர்வதேச வர்த்தகத்தால் ஏற்படும் நன்மை பற்றியும், ஒரு பென்சில் தயாரிக்க பல நாடுகளின் பொருட்கள் தேவைப்படுகிறது என்பது பற்றியும் விளக்கி இருந்தார். இதன்மூலம் எலான் மஸ்க், வரி விதிப்புக்கு எதிராகவும், சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். அதோடு அந்த வீடியோவை பகிர்ந்து இருப்பதன் மூலம் அமெரிக்காவின் வரி விதிப்பு என்பது உலகலாவிய வர்த்தகத்தை பாதிக்கும் என்று தெரிவித்து இருந்தார்.
வரி விதிப்பு ஆலோசகருடன் மோதல்
அதுமட்டுமின்றி சமீபத்தில் எலான் மஸ்க் அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அட்வைசராக உள்ள பீட்டர் நாவரோ என்பவரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த பீட்டர் நாவரோ யார் என்றால் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு வரி கொள்கைகளை வகுத்து கொடுக்கும் அட்வைசராக உள்ளார். இவரை எலான் மஸ்க், ‛‛ஹார்வர்ட் பல்கலைக்கழத்தில் பொருளாதாரத்தில் பிஎச்டி படிப்பு படித்திருப்பது நல்ல விஷயமாக இல்லை. அது கெட்ட விஷயம்'' என்று கூறினார்.
அதாவது பீட்டர் நாவரோ, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் பிஎச்டி படிப்பை முடித்திருந்தார். ஆனால் அவரது வரி கொள்கைகள் என்பது மிகவும் தவறானதாக உள்ளதை தான் எலான் மஸ்க் தனது கருத்தில் தெரிவித்து இருந்தார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே மோதல் என்பது நீடித்து வருகிறது.
டிரம்ப் வரி விதிப்பை மஸ்க் எதிர்ப்பது ஏன்?
சரி இது இருக்கட்டும். எலான் மஸ்க் ஏன் தொடக்கம் முதலே டிரம்பின் வரி விதிப்பு முறையாக எதிராக இருக்கிறார்? என்று உங்களுக்கு கேள்வி எழலாம். இதற்கு பதில் என்பது எலான் மஸ்க் அடிப்படையில் ஒரு தொழிலதிபர், டெஸ்லா நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன் சிஇஓவாக உள்ளார். அவரது கார் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவர் தனது தொழில்களை வேறு நாடுகளில் தொடங்க திட்டமிட்டுள்ளார். இப்படியான சூழலில் டொனால்ட் டிரம்ப் உள்பட பிற நாடுகளின் பரஸ்பர வரி விதிப்பு என்பது எலான் மஸ்க் மட்டுமின்றி தொழிலதிபர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
அதுமட்டுமின்றி தற்போதைய வர்த்தகம் சார்ந்த வரி விதிப்பு முறையால் மார்க்கெட் நிலவரம் மோசமாகி உள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் நேற்று 2.5 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்தது. 233.29 அமெரிக்க டாலர் அளவில் முடிவடைந்தது. அதுமட்டுமின்றி அவரது நிறுவனத்தின் மதிப்பு இந்த ஆண்டு முதல் சரிவை கண்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் அவரது நிறுவனத்தின் மதிப்பு என்பது 38 சதவீதம் வரை சரிந்துள்ளது. இது எலான் மஸ்க்கிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில் தான் சீனா மீதான அதிகப்படியான வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் சீனாவுக்கு ஆதரவாக எலான் மஸ்க் இப்படி பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த 2020ம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தபோது சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்க அதிக வரிகளை விதித்தது. அப்போது டொனால்ட் டிரம்பின் முடிவை எதிர்த்து எலான் மஸ்க் நீதிமன்றத்தை நாடினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications