மைக்ரோசாஃப்ட் பஞ்சாயத்து.. சிக்கலில் விமான பயணிகள்! பாதுகாப்பு முக்கியம்.. மத்திய அமைச்சர் உத்தரவு
நியூயார்க்: மைக்ரோசாஃப்ட் ப்ளூ ஸ்கிரீன் பிரச்னை காரணமாக இந்தியாவில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பயணிகளுக்கு அடிப்படை வசதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மைக்ரோசாப்ட் பயனர்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் இருக்கின்றனர். இப்படி இருக்கையில், இன்று காலை சுமார் 11 மணியளவில் ஏறத்தாழ 50 கோடி கம்ப்யூட்டர்கள் சட்டென முடங்கின. எல்லா கம்ப்யூட்டர்களிலும் ப்ளூ ஸ்கிரீன் தெரிந்திருக்கிறது. பின்னர் ரீஸ்டார்ட் ஆகியிருக்கிறது. ஆனாலும் மீண்டும் ப்ளூ ஸ்கிரீன் விழுந்திருக்கிறது. எனவே, கம்ப்யூட்டர்களை பயன்படுத்த முடியாமல் பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் தவித்து வருகின்றனர்.

இந்த பிரச்னையை 'ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத்' என தொழில்நுட்ப வல்லுநர்கள் விளக்கியுள்ளனர். சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட அனைத்து மைக்ரோசாஃப்ட் கணினிகளிலும் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.
இதனால் கனடாவை உள்ளடக்கிய வடஅமெரிக்கா, ஜெர்மன், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட பகுதிகளில் விமான சேவை, ஐடி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. பெர்லின் விமான நிலையம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. அமெரிக்காவில் டெல்டா, யுனைடைட் உள்ளிட்ட விமானங்கள் இயக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் தற்போது பறந்துகொண்டிருக்கும் விமானம் பத்திரமாக தரையிறங்கும் என்றும், ஆனால் மற்ற விமானங்கள் புறப்படுவது சந்தேகம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை இண்டிகோ, ஆகாசா ஏர், ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, முன்பதிவு செய்தவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும் என்றும் விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. மேலும் கம்ப்யூட்டர்கள் செயல்படாததால் கைகளால் எழுதப்பட்ட போர்டிங் பாஸை நிறுவனங்கள் பயணிகளுக்கு வழங்கி வருகிறது.
மறுபுறம் மருத்துவ சேவைகளும் இந்த தொழில்நுட்ப பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனை எவ்வளவு விரைவாக சரி செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக சரி செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
இப்படி இருக்கையில், இந்தியாவில் ஐடி துறை 'ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத்' பிரச்னையால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் ஐடி ஹப்-ஆக இந்தியா இருந்து வருகிறது. இச்சூழலில், 'ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத்' பிரச்னை இந்த துறையை பெரிய நெருக்கடிக்குள் தள்ளுவதற்கு முன்னர் சரி செய்யப்பட வேண்டும் என்று துறை சார்ந்தவர்கள் கூறி வருகின்றன.
இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து மத்திய அரசு தீவிர கவனம் எடுத்திருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். அதாவது, "மைக்ரோசாஃப்ட் உடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. என்ன பிரச்னை என்பதை கண்டுபிடித்திருக்கிறோம். விரைவில் சரி செய்யப்படும். இந்த பிரச்னையால் என்ஐசி இணைப்புகள் பாதிக்கப்படவில்லை" என்று கூறியுள்ளார். என்ஐசி என்பது அமைச்சரவை தகவல்களை சேகரித்து வைத்திருக்கும் சர்வர். இதன் மூலம் அமைச்சர்களுக்கு தகவல்களை அனுப்பவும் பெறவும் முடியும்.
மறுபுறம் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, "விமானம் புறப்பாடு தாமதத்தால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு கூடுதல் இருக்கை, தண்ணீர் மற்றும் உணவு வசதி செய்து தருமாறும், பயணிகளுடன் கனிவாக நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் இழப்பீட்டை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். கவலைகளை புரிந்துகொண்டு, பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதிசெய்ய நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். உங்கள் பொறுமை மற்றும் ஒத்துழைப்பு அவசியமானதாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
தற்போது வரை மைக்ரோசாஃப்ட பஞ்சாயத்து காரணமாக உலகம் முழுவதும் சுமார் 1300க்கும் அதிகமான விமானங்கள் தங்கள் சேவையை நிறுத்தி வைத்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications