ஆஸி. பிரதமர் பொய் சொல்கிறார்.. பிரான்ஸ் அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு.. மோதலில் வல்லரசுகள்!
நியூயார்க்: பிரான்சுக்கு ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான சின்ன கருத்து வேறுபாடு கொஞ்சம் கொஞ்சமாக மோதலாக வெடிக்க தொடங்கி உள்ளது. அமெரிக்கா போட்ட ஒப்பந்தம் காரணமாக மிகப்பெரிய சர்வதேச மோதல் ஒன்று உருவாகி உள்ளது. இந்த நிலையில்தான் ஆஸ்திரேலிய பிரதமர் பொய் சொல்வதாக பிரான்ஸ் அதிபர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஆஸ்திரேலியாவுடன் அமெரிக்கா அணு ஆயுத நீர்முழ்கி கப்பலுக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் சேர்ந்து இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன. இதற்கு AUKUS ஒப்பந்தம் என்று பெயர் வைக்கப்பட்டது.
ஆங்கிலம் பேசும் நாடுகள் இணைந்து செய்த இந்த ஒப்பந்தம் பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவிற்கு அமெரிக்கா அணு ஆயுத நீர்முழ்கி கப்பல் தொழில்நுட்பத்தை வழங்க முடிவு செய்துள்ளது.

நீர் மூழ்கி
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் மூன்று நாடுகள் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் பணிகளை மேற்கொள்ளும். இதனால் ஆஸ்திரேலியா அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை கொண்ட நாடாக உருவெடுக்கும். இது நல்ல ஒப்பந்தம் தானே.. இதற்கு ஏன் பிரான்ஸ் கோபம் அடைகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால் உண்மையில் முதலில் இந்த ஒப்பந்தத்தை பிரான்ஸ்தான் ஆஸ்திரேலியாவுடன் செய்தது.

பிரான்ஸ் ஒப்பந்தம்
2016ல் ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் இடையே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி பிரான்ஸ் அதிபர் மேக்ரூன் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசனுக்கு நீர் மூழ்கி கப்பல்களை கொடுப்பதாக உறுதி அளித்து ஒப்பந்தம் செய்தார். பிரான்ஸ் இதை பெரிதாக நம்பியது. ஆனால் பிரான்ஸை ஏமாற்றிவிட்டு அந்த ஒப்பந்தத்திற்கு பதில் அமெரிக்கா, பிரிட்டனுடன் ஆஸ்திரேலியா ஒப்பந்தம் செய்துள்ளது.

விமர்சனம்
இதை ஆஸ்திரேலியா எங்களின் முதுகில் குத்திவிட்டது என்று பிரான்ஸ் விமர்சனம் செய்தது. அமெரிக்கா மீதும் பிரான்ஸ் விமர்சனம் வைத்தது. பல நூறு ஆண்டு பழமையான ஆஸ்திரேலியா பிரான்ஸ் உறவில் இதனால் மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்டு தலைவர்களும் மாறி மாறி விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.இந்த ஒப்பந்தமே மிகவும் ரகசியமாக.. உலக நாடுகளுக்கும், பிரான்சுக்கு தெரியாமல் நடந்துள்ளது. இதுதான் பிரான்ஸை அதிக கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

பேட்டி
பிரான்ஸை ஆஸ்திரேலியா ஏமாற்றிவிட்டதாக பிரான்சு ஊடகங்கள் புகார்கள் எழுந்துள்ளன. முக்கியமாக பிரான்ஸ் அதிபர் மேக்ரூனிடம் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பொய் சொல்லிவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பிரான்ஸ் அதிபர் மேக்ரூன் அளித்த பேட்டியில், அமெரிக்காவுடன் செய்யப்படும் ஒப்பந்தம் குறித்தும் எதுவும் சொல்லாமல் ஆஸ்திரேலியா எங்களை ஏமாற்றிவிட்டது.. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் என்னிடம் பொய் சொல்லிவிட்டார் என்று மேக்ரூன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

நம்பிக்கை
மேக்ரூன் அளித்த பேட்டியில், இரண்டு நாட்டு உறவில் நம்பிக்கை இருக்க வேண்டும். உண்மை இருக்க வேண்டும். உண்மை இருந்தால்தான் உறவு நிலையானதாக இருக்கும். நீங்கள் கொடுத்த வாக்கை காக்க வேண்டும். அந்த நம்பிக்கையை ஆஸ்திரேலியா முறித்துவிட்டது. இது உறவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று மேக்ரூன் குறிப்பிட்டுள்ளார்.

பாதிப்பு
இதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அளித்த பேட்டியில், நான் அந்த புகாரை ஏற்றுக்கொள்ள மாட்டேன். நாங்கள் பொய் சொல்லவில்லை. நாங்கள் ஏமாற்றவில்லை. பிரான்சுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் எங்களின் நீர் மூழ்கி கப்பல் தேவையை பூர்த்தி செய்யாது என்று ஏற்கனவே நாங்கள் குற்றஞ்சாட்டி இருந்தோம். அமெரிக்காவுடன் நாங்கள் ஒப்பந்தம் செய்ததற்கு ஏன் பிரான்ஸ் இப்படி ரியாக்சன் கொடுக்கிறது என்று தெரியவில்லை, என்று மோரிசன் விமர்சனம் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications