அடுத்தடுத்த விமர்சனம்.. கொரோனா குறித்து உளறி கொட்டிய டிரம்ப்.. முக்கிய விதியை மாற்றிய வெள்ளை மாளிகை
கொரோனா குறித்த கேள்விகள் எதற்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் பதில் அளிக்க மாட்டார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
நியூயார்க்: கொரோனா குறித்த கேள்விகள் எதற்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் பதில் அளிக்க மாட்டார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா காரணமாக அமெரிக்கா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தம் கொரோனா காரணமாக 925,232 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 52,193 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனாவால் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை அதிபர் டிரம்ப் சரியாக எதிர்கொள்ளவில்லை என்று விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. முக்கியமான அவரின் செய்தியாளர் சந்திப்புகள் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

பேட்டி அளித்தார்
கொரோனா தொடர்பான அமெரிக்க அதிபர் டிரம்பின் பேட்டிகள் எல்லாம் பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. முக்கியமாக கொரோனாவிற்கு தீர்வு சொல்கிறேன் என்று டிரம்ப் கூறிய விஷயங்கள் எல்லாம் பெரிய காமெடியாக மாறி உள்ளது. முதலில் கொரோனாவிற்கு ரெமிடிஸ்வர் மருந்து பலன் அளிக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டார். அடுத்து வெயில் காலம் வந்தால் கொரோனா காணாமல் போகும் என்று டிரம்ப் கூறினார்.

டிரம்ப் சொல்லும் மருத்துவம்
அதேபோல் ஈஸ்டர் வந்தால் கொரோனா மொத்தமாக குணமடையும் என்று கூறி விமர்சனங்களை சந்தித்தார். அதோடு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை சாப்பிட்டால் கொரோனா குணமடையும் என்றும் கூறி நம்பிக்கை அளித்தார். ஆனால் ஹைட்ராக்சிகுளோரோகுயின் காரணமாக அமெரிக்காவில் பெரிதாக யாரும் குணமடையவில்லை. மாறாக அங்கு பலி எண்ணிக்கை அதிகரிக்க ஹைட்ராக்சிகுளோரோகுயின்தான் காரணமும் என்றும் கூறுகிறார்கள்.

நேற்று என்ன சொன்னார்
இந்த நிலையில் நேற்று டிரம்ப் கொடுத்த பேட்டிதான் பெரிய சர்ச்சையானது . சூரிய ஒளியிலும், புற ஊதா கதிரிலும் கொரோனா குணமடையும் என்று அமெரிக்காவில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக பேசிய டிரம்ப், சூரிய ஒளி மூலம் கொரோனா பலியாகும் என்பது பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கிறது. அதனால் நம்முடைய உடலில் அதிக அளவு ஒளியை செலுத்தினால் ஒருவேளை கொரோனா குணமடைய வாய்ப்பு உள்ளது.

என்ன பேட்டி கொடுத்தார்
அதேபோல் கிருமி நாசினியும் கொரோனாவை கொல்கிறது. அதனால் உடலுக்குள் கிருமி நாசினியை செலுத்தி கொரோனாவை கொல்ல வேண்டும். நமது உடலுக்குள் புற ஊதா கதிர்கள் கொண்ட ஒளிகள் அல்லது அதிக சக்தி வாய்ந்த ஒளிகளை செலுத்தி கொரோனாவை கொல்ல வேண்டும். நமது உடலுக்கு உள்ளேயோ அல்லது உடலின் மேற்பரப்பிலோ இப்படி நாம் அதிக சக்தி வாய்ந்த ஒளியை அனுப்ப வேண்டும், என்று டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார்.

கடும் விமர்சனம்
டிரம்பின் இந்த பேட்டி கடும் விமர்சனங்களை சந்தித்தது. மருத்துவர்கள் உட்பட கிருமி நாசினி நிறுவனங்கள் வரை டிரம்பின் இந்த பேட்டியை பலர் விமர்சனம் செய்ய தொடங்கினார்கள். இதையடுத்து இன்று பேட்டியில் விளக்கம் அளித்த அதிபர் டிரம்ப், நான் அந்த பேட்டியை சீரியஸாக கொடுக்கவில்லை. கிண்டல் செய்யும் விதமாக காமெடியாக குறிப்பிட்டேன் என்று கூறினார். பெரும் விமர்சனத்தை தொடர்ந்து டிரம்ப் இப்படி சமாளிப்பதாக கூறுகிறார்கள்.

என்ன முடிவு
டிரம்ப் வேண்டும் என்றே தற்போது சமாளிக்க தொடங்கி உள்ளார் என்கிறார்கள். கொரோனா காரணமாக அதிபர் டிரம்பின் மதிப்பு பெரிய அளவில் சரிந்து உள்ளது. வரும் அதிபர் தேர்தலில் அவருக்கான புள்ளிகள் பெரிய அளவில் சரிய தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக டிரம்ப் கொடுத்து வரும் பேட்டிகள் அவருக்கு மேலும் அவமானத்தை தந்து உள்ளது. இதனால் அவர் தேர்தலில் தோல்வி அடைய கூட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

இனி பேச மாட்டார்
இதனால் கொரோனா குறித்த கேள்விகள் எதற்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் பதில் அளிக்க மாட்டார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கொரோனா குறித்து செய்தியாளர் சந்திப்பை மட்டும் நடத்துவார். ஆனால் கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டார். துணை அதிபர் மைக் பாம்பியோ அல்லது செய்தி தொடர்பாளர் குழுவில் இருந்து யாராவது கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications