சீக்கிய தலைவரை கொல்ல பேசப்பட்ட பலே ஆஃபர்! அமெரிக்காவிடம் சிக்கிய இந்தியர்? வெளியான ஷாக் தகவல்கள்
நியூயார்க்: அமெரிக்க குடியுரிமை கொண்டுள்ள சீக்கிய பிரிவினைவாதி தலைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் அந்நாட்டு போலீசால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலையை செய்ய அவருக்கு வழங்கப்பட்ட ஆஃபர்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கனடாவில் சீக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் சர்வதேச அளவில் இந்தியாவின் பெயர் அடிப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இதேபோல சீக்கிய பிரிவினைவாதி தலைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் இந்தியாவை சேர்ந்த 52 வயதான நிகில் குப்தா என்பவர் அந்நாட்டு போலீசால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரராக அறியப்படுகிறார். இவருக்கு பின்னணியில் இந்திய அரசு ஊழியர் ஒருவர் இருப்பதாகவும் அமெரிக்கா கூறியிருக்கிறது.

அதாவது இந்திய அரசு ஊழியர் கொலைக்காக குப்தாவை அணுகியதாக சொல்லப்படுகிறது. இந்த கொலைக்காக இந்தியாவில் குப்தா மீது இருக்கும் கிரிமினல் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று பேரம் பேசப்பட்டிருக்கிறது என அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். இவர்கள் யாரை கொலை செய்ய முயன்றனர் என்பது குறித்த விவரங்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் நீதிக்கான சீக்கியர்கள் (SFJ) தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் என்பவரைத்தான் இவர்கள் கொலை செய்ய திட்டமிட்டதாக தகவல் கசிந்திருக்கிறது.
திட்டத்தின்படி இந்திய அரசு ஊழியர் குப்தாவை இந்த கொலைக்கு பயன்படுத்தியிருக்கிறார். குப்தா மட்டும் இந்த வேலையை தனியாக செய்ய முடியாது என்பதால் அவருடன் ஒரு நம்பிக்கையான கூட்டாளியை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே குப்தா அமெரிக்காவின் லோக்கல் 'கை' ஒருவருடன் பேரம் பேசியிருக்கிறார். கொலைக்காக ரூ.83 லட்சம் வரை பேரம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் குப்தா யாரை லோக்கல் 'கை' என நம்பினாரோ அவர் அமெரிக்க அரசாங்கத்தின் ரகசிய ஏஜென்ட் என்பதுதான் இதில் டிவிஸ்ட்.
இந்த ஏஜென்ட் மொத்த விஷயத்தையும் போலீசிடம் புட்டு புட்டு வைக்க, செக் குடியரசில் தங்கியிருந்த குப்தாவை அலேக்காக தூக்கியது அமெரிக்க போலீஸ். தங்கள் நாட்டின் குடிமகனை கொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறி குப்தா மீதும், இவரை இயக்கிய இந்திய அரசு ஊழியர் மீதும் அந்நாட்டு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கொலைக்காக குப்தாவுக்கு பேசப்பட்ட ஆஃபர் குறித்த விவரங்களை அமெரிக்க வழக்கறிஞர்கள் வெளியிட்டுள்ளனர்.
அதாவது குஜராத்தில் குப்தா மீது பதியப்பட்டிருக்கும் கிரிமினல் வழக்கு ரத்து செய்யப்படும் என இந்திய அரசு ஊழியர் பேரம் பேசியிருக்கிறார். இந்த ஆஃபருக்கு ஒப்புக்கொண்டுதான் குப்தா கொலை முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்தியாவின் அரசு ஊழியரும், குப்தாவும் டெல்லியில் சந்தித்து இந்த கொலை திட்டத்தை தீட்டியிருக்கிறார்கள். பின்னர் இவர்கள் இருவரும் தொலைபேசி மூலம் ரகசியமாக தகவல்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். அதில், கடந்த மே மாதம் 12ம் தேதி அரசு ஊழியர் அனுப்பிய செய்தி முக்கியமானது. அதாவது குப்தா மீதான கிரிமினல் வழக்கு ரத்து செய்யப்படுவது குறித்து துணை போலீஸ் கமிஷ்னர் மட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு தயார் செய்யப்பட்டிருக்கிறது என அரசு ஊழயர் கூறியிருக்கிறார்.
இது இந்த வழக்கின் முக்கியமான விஷயம் என அமெரிக்க வழக்கறிஞர்கள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளனர். கொலை முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு, சதி திட்டம் தீட்டியதாக இந்தியர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருப்பது இந்திய-அமெரிக்க உறவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குப்தாவின் குற்றத்திற்காக அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications