களைகட்டிய திருக்குறள் நிகழ்ச்சி! பங்கேற்பாளர்களை கவுரவப்படுத்தியது குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை
நியூயார்க்: 'அதிகாரம் ஏழு மக்கட்பேர்' எனும் தலைப்பில் 'குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை அமெரிக்கா' சார்பில் தந்தையர் தின கொண்டாட்டம் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் கதை, கட்டுரை, கருத்தரங்கம் நிகழ்ச்சிகள் நெகிழ்ச்சியடையவைத்தன.
இந்நிகழ்ச்சிகளில், டாக்டர் அப்பனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர் திருக்குறள் சார்ந்து தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். மட்டுமல்லாது ஏராளமான அமைப்புகளுக்கும் தொண்டு செய்திருக்கிறார். ஹூஸ்டன் மாநகருக்கு டாக்டர் அப்பன் நன்கு பரிட்சியம். எனவே அவருக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த தந்தையர் விருது கொடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இவருக்கு ஏற்கெனவே 'குறலாற்று தந்தை' பட்டத்தை கூடல் அமைப்பு வழங்கி கவுரவித்துள்ளது.

எந்த அமைப்பானாலும், எந்த சேவை வேண்டுமென்றாலும் இவர் முதலிடத்தில் நின்று அதற்கு உதவி செய்வதில் இவருக்கு நிகர் இவரே! இவரை தெரியாதவர்களே இங்கு இருக்க முடியாது அனைவருக்கும் பிடித்தமான ஒரு நல்ல மாமனிதர் என்று இவரை போற்றாதவர்களே இல்லை. பாரி வள்ளல், பிதாமகன், தெய்வத்தந்தை என்று அனைவராலும் போற்றப்பட்டாலும் குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை இவரை கௌரவித்து "குறலாற்று தந்தை" பட்டத்தை அளிப்பதில் மிகப் பெருமை அடைகிறது.
அதேபோல, ஹூஸ்டன் மாநகரில் வசித்து வரும் கருமலர் செல்வன், தமிழ் மீது மிக ஆர்வம் கொண்டு தமிழுக்காக பல தொண்டுகள் செய்து வருகிறார். அவர் சமீபத்தில் 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்புவித்து அதில் சாதனை படைத்துள்ளார். அது மட்டுமல்லாது அதை எப்படி எளிமையாக கற்றுக் கொள்வது என்ற வித்தைகளை பலருக்கும் சொல்லிக் கொடுத்து பலரையும் ஊக்கப்படுத்தி திருக்குறளை பயின்று கொள்ள உதவி செய்து வருகிறார். அவரை குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை வாழ்த்தி "குறள் வித்தகர்" என்று பட்டமளித்து பெருமை அடைகிறது.
மேலும், இந்நிகழ்ச்சிகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாய் அமைந்தது 'பேசு மனமே பேசு' எனும் நிகழ்வுதான். 'அதிகாரம் ஏழு மக்கட்பெரு' எனும் தலைப்பை மையமாக கொண்டு அதன் பொருளை விலக்கி பலரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை திருக்குறளோடு ஒப்பிட்டு பகிர்ந்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வை 'நீயா நானா', 'பேசு தமிழா பேசு' போன்ற நிகழ்ச்சியின் சாயலில் நடத்தி அனைவரையும் மனம் விட்டுப் பேசும் ஒரு வாய்ப்பை பார்த்திபன் ரவிக்குமார் ஏற்படுத்தினார். அவரை பாராட்டி குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளையின் 'அம்பாசிடர் & கிரியேட்டிவ் ஹெட்' என்று தலைப்பில் அவரை கௌரவப்படுத்தியது.
இந்த நிகழ்வுகளை தொடர்ந்து 1330 திருக்குறளையும் ஆதி கோபால் இசை வடிவில் பாடினார். இவர் 'குரலுக்கு ஓர் கீதம்' என்ற தலைப்பில் கடந்த வருடம் ஜூன் மாதம் சென்னையில் இசை வெளியீட்டு விழாவில் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல காரைக்கு டியில் இருந்து இங்கு வந்திருந்த வினைதீர்த்தான் பல பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் 'மோட்டிவேஷனல் ஸ்பீச்' கொடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்தி அதன் வழியாக தமிழுக்கும், திருக்குறளுக்கும் மிகவும் தொண்டாற்றி வருகிறார். அவரையும் கூடல் அறக்கட்டளை கவுரவப்படுத்தியது.
இந்த குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளையின் தலைவர் செம்மொழி மாலா கோபால், மற்றும் நிர்வாக குழுவினர்கள் அனைவரும் சேர்ந்து நன்றி கூறி இந்த விழாவை சிறப்புடன் முடித்து வைத்தனர். இந்த விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் சிற்றுண்டி, உணவு, தேநீர் வழங்கி அவர்களை மகிழ்விக்கப்பட்டது. அதேபோல திருக்குறளின் மேல் உள்ள தங்களின் பற்றை வெளிப்படுத்தி அனைவரும் மகிழ்ந்தார்கள்.
உலகப் பொதுமறையாம் திருக்குறள்! பழமையான நம் தமிழுக்கே பெருமை தரக்கூடிய இந்த திருக்குறளை பலருக்கும் கொண்டு சேர்த்து அதனால் பயனடைய செய்வதே குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளையின் நோக்கமாகும்.












Click it and Unblock the Notifications