கைவிட்டு போன அமெரிக்கா? டிரம்ப்பின் மூளையை தட்டி தூக்கியது இந்தியா.. களமிறக்கப்பட்ட லாபியிஸ்ட்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூளையாக கருதப்படும் மூத்த ஆலோசகரான ஜேசன் மில்லரை தனது லாபி பணிகளுக்காக இந்திய அரசாங்கம் களமிறக்கி உள்ளது. அமெரிக்காவில் இந்தியாவிற்கு சாதகமாக லாபி செய்வதற்காக இவரை களமிறக்கி உள்ளனர். இந்தியாவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து டிரம்பின் முன்னாள் மெய்க்காப்பாளரான கீத் ஷில்லரை அமெரிக்காவில் தனது பிரதிநிதியாக பாகிஸ்தான் நியமித்துள்ளது.
சர்வதேச அளவில் மேற்கு உலகில் இந்தியாவின் உற்ற நண்பன் என்று கருதப்பட்ட நாடு அமெரிக்கா. இந்தியா பாகிஸ்தான் போர் வந்தால் சீனா பாகிஸ்தான் பக்கம் நிற்கும். அமெரிக்கா இந்தியா பக்கம் நிற்கும் என்றே கருதப்பட்டது. ஆனால் அப்படிப்பட்ட அமெரிக்கா முக்கியமான நேரத்தில் இந்தியாவின் முதுகில் குத்திவிட்டது.
அத்துமீறும் அமெரிக்கா
இந்திய அமெரிக்கா போர் பற்றி சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், இந்தியா - பாக். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். என் தலையீட்டால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள், இரண்டு நாடுகளுமே நிறைய அணு ஆயுதங்களை கொண்டுள்ளன. ஆனால் அணு ஆயுதப் போர் நிறுத்தியது நான் தான் என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்வதில்பெருமைப்படுகிறேன். அவர்கள் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம், உறுதி தங்களுக்கு இருக்கிறது என்ற நிலைபாட்டில் இருந்தார்கள். ஆனால் நாங்கள் நிறைய உதவினோம், என்று கூறினார்.

சண்டையை நிறுத்தினால் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம் என்று இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் சொன்னேன். போரை நிறுத்தாவிட்டால் நாங்கள் எந்த வர்த்தகத்தையும் செய்யப் போவதில்லை என்று சொன்னேன். உடனடியாக நாங்கள் போரை நிறுத்துவோம் என்று சொன்னார்கள்., என்று கூறி உள்ளார்.
சாதகமான ஆட்களை களமிறக்க முடிவு
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு இந்தியா - பாக். தாக்குதல் நிறுத்தம் குறித் பேச்சுவார்த்தையில் வர்த்தகம் பற்றி பேசப்படவில்லை என இந்திய வெளியுறவுத் துறை விளக்கமளித்த பிறகும், வர்த்தகத்தை முன்னிறுத்தி போரை நிறுத்தியதாக சவுதி முதலீட்டாளர் மாநாட்டில் மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அமெரிக்காவை உண்மையான நண்பனாக கருதலாமா? டிரம்ப்பை நம்பலாமா என்ற சந்தேகம் டெல்லியில் உள்ள டாப் லெவல் வெளியுறவு அதிகாரிகளுக்கு வந்துள்ளதாம். அதோடு வெள்ளை மாளிகையில் இந்தியாவிற்கு சாதகமான பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற திட்டமும் டெல்லி அதிகாரிகளுக்கு வந்துள்ளதாம். அதாவது டிரம்ப்பை தேவையான நேரங்களில் இந்தியாவிற்கு சாதகமாக மாற்றும் வகையில் அங்கே அதிகாரிகளை களமிறக்க டெல்லியில் உள்ள டாப் லெவல் வெளியுறவு அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளார்களாம்.
மூளையை பிடித்த இந்தியா
இதையடுத்தே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூளையாக கருதப்படும் மூத்த ஆலோசகரான ஜேசன் மில்லரை வாஷிங்டனில் தனது லாபி பணிகளுக்காக இந்திய அரசாங்கம் களமிறக்கி உள்ளது. ஜேசன் மில்லர் அமெரிக்க தகவல் தொடர்பு லாபியிஸ்ட் ஆவார். அரசியல் ஆலோசகர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். அரசியல் ரீதியாக பல லாபி வேலைகளை செய்ய கூடியவர். டொனால்ட் டிரம்ப் 2016 அதிபர் தேர்தலில் பிரச்சாரம் செய்ய திட்டங்களை வகுத்தவர் இவர்தான். அந்த தேர்தலில் டொனால்ட் டிரம்பின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஆக இவர் செயலாற்றிய விதம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
2010 முதல் 2016 வரை, மில்லர் ஜேம்ஸ்டவுன் அசோசியேட்ஸில் பார்ட்னராகவும் நிர்வாக துணைத் தலைவராகவும் இருந்தார். அதன்பின் அதிபர் டிரம்பின் தனிப்பட்ட ஆலோசகராகவும் செயலாற்றி வருகிறார். இவரைத்தான் அதிபர் டிரம்ப்பிடம் லாபி செய்வதற்காக இந்தியா களமிறக்கி உள்ளது. காஷ்மீர் விவகாரம், சர்வதேச அரசியல், விசா, வரி விதிப்பில் இந்தியாவிற்கு சாதகமாக முடிவுகளை எடுப்பதற்கு வசதியாக இவர் களமிறக்கப்பட்டு உள்ளார். இந்தியாவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து டிரம்பின் முன்னாள் மெய்க்காப்பாளரான கீத் ஷில்லரை அமெரிக்காவில் தனது பிரதிநிதியாக பாகிஸ்தான் நியமித்துள்ளது.












Click it and Unblock the Notifications