சூரியனுக்கு பக்கத்து தெரு.. ரொம்ப கிட்ட போய் ஆய்வு செய்த அமெரிக்க செயற்கைக்கோள்!
நியூயார்க்: சூரியனுக்கு மிக நெருக்கமாக பறந்து சென்று அமெரிக்காவின் செயற்கைக்கோள் ஆய்வு செய்திருக்கிறது. இதற்கு முன்னர் வேறு எந்த செயற்கைக்கோளும் இவ்வளவு நெருக்கமாக சென்றதில்லை என்று நாசா கூறியிருக்கிறது.
கடந்த 2018ம் ஆண்டு சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, பார்க்கர் சோலார் ப்ரோப் எனும் செயற்கைக்கோளை அனுப்பி வைத்தது. இதன் நோக்கம் சூரியனை எவ்வளவு நெருங்க முடியுமோ, அவ்வளவு நெருங்குவதுதான். ஆனால் அது அவ்வளவு சுலபம் கிடையாது. இருப்பினும் அந்த வேலையை சிறப்பாக வெற்றிகரமாக இந்த செயற்கைக்கோள் செய்து முடித்திருக்கிறது.

என்ன செய்தது பார்க்கர் சோலார் ப்ரோப்?: இந்த செயற்கைக்கோள் சூரியனை 38 லட்சம் கி.மீ அளவுக்கு நெருக்கமக சென்றிருக்கிறது. சூரியனின் மேற்புற வெப்பம் சுமார் 6000 டிகிரி செல்சியஸ். அதாவது பூமியில் கிடைக்கும் உலோகங்களில் மிகவும் கெட்டியானது டான்டலும்தான்(Tantalum). இதை உருக்குவது ரொம்ப கஷ்டம். ஆனால் இப்படியான உலோகமே சூரியனுக்கு பக்கத்தில் போனால் ஆவியாகிடும். அப்படி என்றால், சூரியனை ஆய்வு செய்வதும், அதன் பக்கத்தில் போவதும் எந்த அளவுக்கு கஷ்டமான வேலை என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஏன் சூரியன் குறித்த ஆய்வு முக்கியம்?: மேலே குறிப்பிட்டதை போல சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 6000 டிகிரி செல்சியஸ். ஆனால், அதன் உள் பகுதியில் சில இடங்களில் வெப்பம் குறைவாகத்தான் இருக்கும். இது அதிசயமான ஒன்று, எனவே இது குறித்து ஆய்வு செய்ய பல்வேறு நாடுகளும் முயன்று வருகின்றன. மறுபுறம் சூரியனிலிருந்து வெளிவரும் சூரிய புயல்களும் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே அது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சூரிய புயல்: கடந்த 1859, 1989 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் பூமியை சூரிய புயல்கள் தாக்கியுள்ளன. இதனால் பல பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. 1859ம் ஆண்டு வந்த சூரிய புயல், இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக சக்திவாய்ந்த புயலாக கருதப்படுகிறது. தி கேரிங்டன் நிகழ்வு என்று அழைக்கப்படும் இந்த சம்பவத்தில் அப்போது இருந்த தந்தி சேவையை கடுமையாக பாதித்தது.
இதற்கடுத்து 1989ம் ஆண்டு லேசான சூரிய புயல் தாக்கம் ஏற்பட்டது. இதனை கியூபெக் பிளாக்அவுட் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த புயல் காரணமாக கனடாவில் சுமார் ஒன்பதரை மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது.
மூன்றாவதாக 2003ல் ஏற்பட்ட நிகழ்வை தி ஹாலோவீன் புயல் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் யுலிஸஸ் விண்கலம், தகவல் தொடர்பு, ஜிபிஎஸ் அமைப்புகள் மற்றும் செயற்கைக்கோள் சில பாதிக்கப்பட்டன.
அச்சம் ஏன்?: அப்போது புயல்கள் வந்தபோது எந்த பிரச்னையும் இருக்கவில்லை. ஆனால் இன்றைய தேதியில் இப்படியான புயல்கள் தாக்கினால், கடும் பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக அணு உலைகள் பல மின்சார சாதனங்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகின்றன. இந்த புயல்கள் தாக்கினால் அணு உலைகள் கட்டுப்பாட்டை இழந்து வெடிக்க தொடங்கிவிடும். உலகில் எந்த எலக்ட்ரானிக் பொருட்களும் வேலை செய்யாது. இப்படி ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய நமக்கு நூற்றாண்டு காலம் வரை கூட ஆகலாம். இதனால்தான் சூரிய புயல்கள் ஆபத்தானதாக கருதப்படுகின்றன.
இந்த புயல்களை பற்றி புரிந்துக்கொள்ளவும், அது குறித்து ஆய்வை மேற்கொள்ளவும் பார்க்கர் சோலார் ப்ரோப் சூரியனுக்கு மிக நெருக்கமாக சென்று வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications