“பில்லியனர்களே இருக்க கூடாது..” நியூயார்க் மேயரின் புதிய கொள்கை! விமர்சிக்கும் வலதுசாரிகள்
நியூயார்க்: எதிர்வரும் நவம்பர் மாதம் நியூயார்க் நகரத்திற்கான மேயர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இடதுசாரியாக அறியப்படும் 'சோஹ்ரான் மம்தானி' வெற்றி பெற்றிருக்கிறார். இந்நிலையில் அவர் கொண்டு வரவுள்ள கொள்கை மாற்றங்கள் குறித்து அமெரிக்க பணக்காரர்கள் புலம்பி தள்ளியுள்ளனர்.
காலங்காலமாக வலதுசாரிகளால் ஆளப்பட்டு வரும் நியார் நகரத்தில், முதன்முறையாக ஒரு இடதுசாரி நபர் ஆட்சியாளராக வர இருப்பதை அமெரிக்க பணக்காரர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் அவர்கள் மம்தானியின் பொருளாதார கொள்கைகளை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அதாவது மம்தானி, தான் மேயராக வரும்போது, இரண்டு முக்கியமான கொள்கைகள் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
1. பில்லியனர்கள் இருக்கவே கூடாது
2. வெள்ளையர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வரிகளை அதிகரிக்க வேண்டும்
முதல் விஷயத்தை பற்றி பார்ப்போம். உலகம் முழுவதும் குறிப்பிட்ட அளவில்தான் செல்வம் இருக்கிறது. அதனை எடுத்து அனைவருக்கும் பகிர்ந்தால், எல்லோரும் நன்றாக இருப்பார்கள். ஆனால், சிலர் மட்டும் பிறர் உழைப்பை சுரண்டி, செல்வத்தை ஒரே இடத்தில் குவித்து வைத்திருக்கிறார். இதனால்தான் உலகில் சமத்துவமின்மை ஏற்பட்டிருக்கிறது என்பது மம்தானியின் கருத்து.
எனவே பில்லியனர்களே இருக்கக்கூடாது என்பதுதான் அவரது நிலைப்பாடாக இருக்கிறது. பில்லியன் என்றால் 100 கோடி என்று பொருள். ஆக 100 கோடி டாலர்களுக்கு அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களை மம்தானி எதிர்க்கிறார். இதைதான் தனது கொள்கையாக முன்வைத்திருக்கிறார்.
பேட்டி ஒன்றில், "நமக்கு பில்லியனர்கள் இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், வெளிப்படையாகச் சொன்னால், இவ்வளவு பெரிய சமத்துவமின்மை நிலவும் நேரத்தில் அவர்களிடம் அதிக பணம் இருப்பது சரியல்ல. சமூக சமத்துவமின்மையை குறைத்து அனைவருக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய வேண்டும் " என்று பதிலளித்திருந்தார். இதுதான் பணக்காரர்களிடையே கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, வெள்ளையர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வரிகளை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பதும் பணக்காரர்களால் சர்ச்சையாக்கப்பட்டிருக்கிறது.
மேலோட்டமாக பார்த்தால் வெள்ளையின மக்களுக்கு எதிரான நடவடிக்கையாக இது தோன்றலாம். ஆனால், அமெரிக்காவை பொருத்தவரை, எங்கு வெள்ளையின மக்கள் அதிகம் வசிக்கிறார்களோ அங்குதான் வருவாய் அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவில் பொருளாதார ரீதியாக வளமான பகுதிகள் அனைத்தும் வெள்ளையின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளாகத்தான் இருக்கின்றன.
ஏன் வெள்ளையின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி மட்டும் வளர்ந்தது என்பதற்கு வரலாற்று காரணம் இருக்கிறது. 1930களில் அமெரிக்க வீட்டு சந்தைகளில் ஏற்றத்தாழ்வுகள் தொடங்கின. அதாவது வங்கிகள் அமெரிக்காவின் சில பகுதிகளை அபாயகரமானவை என்று வெளிப்படையாக அறிவித்தது. இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு வீட்டு கடன் கொடுக்கப்படாது. இப்படி முத்திரை குத்தப்பட்ட பகுதிகள் அனைத்தும் கறுப்பின மக்கள் வாழும் பகுதிகாளக இருந்தது.
அதேபோல வீடுகளை விற்கும்போதும், வாங்கும்போது அவை வெள்ளையின மக்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் கைமாற்றப்பட்டது. இதற்காக இடையில் ஏஜென்ட்டுகளும் இருந்தனர். இது இன்று வரையிலும் கூட தொடர்கிறது. எனவே கருப்பின மக்கள் முக்கியமான நகர்புறப் பகுதிகளில் வீடுகளை வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
எனவேதான் வெள்ளையின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்றும் மம்தானி கூறியுள்ளார். இதுவும் வெள்ளையின பணக்காரர்களால் பிரச்சனையாக்கப்பட்டு வருகிறது.
இந்த மாற்றங்கள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே! இந்தியாவிலும் இப்படி ஏதாவது மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? கமென்ட்டில் சொல்லுங்கள்.












Click it and Unblock the Notifications