”பயங்கரவாதத்தின் பட்டத்து இளவரசன்”.. உயிரோடு இருக்கும் ஒசாமாவின் மகன் ஹம்சா?மேற்கத்திய நாடுகள் ஷாக்!
நியூயார்க் : அமெரிக்காவால் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் 2019 ஆம் ஆண்டு கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் உயிரோடு இருப்பதாகவும் அல்கொய்தாவின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளதாக புதிய தகவல் வெளியாகி மேற்கத்திய நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் பயங்கரவாத அமைப்புகளை மீண்டும் ஒருங்கிணைத்து தாக்குதல் நடத்த தயாராகி வருவதாகவும் உளவுத்துறை அறிக்கைகள் கூறுகின்றன..
உலக அளவில் பிரபலமான அதே நேரத்தில் பயங்கரவாதிகளில் ஒருவரான ஒசாமா பின்லேடன் அல்கொய்தா அமைப்பின் தலைவராக இருந்து உலகின் பல்வேறு நாடுகளில் தாக்குதல் திட்டங்களை நடத்தி முடித்து பலரது உயிரைப் பறிக்க காரணமாக இருந்திருக்கிறார்.

குறிப்பாக 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில் நடத்திய தாக்குதலை உலகம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் விமானத்தை மோத விட்டு நடத்திய தாக்குதலில் 3000 மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதை எடுத்து உலக அளவில் வாண்டட் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஒசாமா பின்லேடனை கொல்வதற்கு அமெரிக்கா பல நாடுகளில் தீவிர தேடுதல் வேட்டி நடத்தியது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அமெரிக்க கடற்படையின் ’சீல்’ சிறப்பு பிரிவினர் ஹெலிகாப்டர் மூலம் அங்கே புகுந்து ஒசாமை சுட்டுக் கொன்றனர்.
இதை அடுத்து அந்த காட்சிகளை நேரில் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தொடர்ந்து அந்த வீடியோக்களையும் அமெரிக்கா வெளியிட்டது. இந்த நிலையில் கொல்லப்பட்டதற்கு பிறகு அவரது மகன் ஹம்சா பின்லேடன் தீவிரவாத குழுக்களின் தலைமை பொறுப்பை ஏற்றார். மேலும் பின்லேடனின் மரணத்திற்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக பல தீவிரவாத குழுக்களை ஒன்றிணைத்து வந்ததாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து வீடியோ மற்றும் ஆடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், ஹம்சா பின்லேடனை ஒழித்துக் கட்ட முடிவு செய்த அமெரிக்கா அவரை கடந்த 2017 ஆம் ஆண்டு சர்வதேச தீவிரவாதியாகவும் அவரை தேடி வருவதாகவும் அறிவித்தது,
அல் கொய்தா அமைப்பின் முக்கிய தலைவராக ஹம்சா பின் லாடன் வளர்ந்து வரும் நிலையில், அவரைப் பற்றி தகவல் கூறுபவர்களுக்கு 7 கோடி ரூபாய் வரை சன்மானமாக வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்தது. அதே நேரத்தில் ஹம்சாவை கொல்வதற்காக முழு வீச்சில் தேடுதல் பணிகளையும் அமெரிக்கா தீவிரமாக மேற்கொண்டு வந்தது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகளில் அவரை தீவிரமாக தேடி வந்தது.
இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொல்லப்பட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அல்கொய்தா பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் அமெரிக்க பயங்கரவாத தடுப்பு பிரிவின் தாக்குதலில் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் ஆப்கான் எல்லையில் ஹம்சா கொல்லப்பட்டதாகவும், அவரது மரணம் அல் கொய்தாவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும்.. இனி அந்த இயக்கத்தின் செயல்பாடுகள் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என அறிவித்தது.
இந்த நிலையில் 2019-ம் ஆண்டு கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ஒசாமா பின்லாடின் மகன் ஹம்சா பின்லேடன் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார் என புதிய உளவுத்துறை அறிக்கை வெளியாகி இருக்கிறது. மேலும் அல் கொய்தாவின் தலைமை பொறுப்பை ஹம்ஸா ஏற்றுள்ளதாகவும், அவரது தலைமையின் கீழ் பல தீவிரவாத குழுக்களை ஒன்றிணைத்து மீண்டும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதலுக்கு தயாராகி வருவதாக உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.
”பயங்கரவாதத்தின் பட்டத்து இளவரசராக” அழைக்கப்படும் ஹம்ஸா 2019ஆம் ஆண்டு சிஐஏ நடத்திய வான்வழி தாக்குதல் இருந்து தப்பியதாகவும் ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் அவர் அல்கொய்தாவுக்கு தொடர்ந்து கட்டளையிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சி அமைந்த பிறகு, ஹம்சாவின் நடவடிக்கைகள் தீவிரமாக இருப்பதாகவும், மூத்த தாலிபன் பிரமுகர்களை அவர் ரகசியமாக சந்தித்து அல் கொய்தாவுக்கும் தாலிபானுக்கும் இடையே உறவை வலுப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அல் கொய்தாவின் மறுபிரவேசத்தை தீவிரமாக திட்டமிட்டு வருவதாகவும், மீண்டும் மேற்கத்திய நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக 'தி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications