ரஷியாவின் வீட்டோ “பவர்”.. ஐநாவே “டம்மி”தான்! பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஆதங்கம்
நியூயார்க்: ரஷியா தன்வசம் வைத்திருக்கும் வீட்டோ அதிகாரம் காரணமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் எடுக்கப்படும் முடிவுகள் வலுவற்றதாகி விடுவதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்து இருக்கிறார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேரில் கலந்துகொண்டு, ரஷியாவின் தொடர் அத்துமீறல்களை கண்டித்து பேசி உள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி தனிப்பட்ட முறையில் நேரில் கலந்துகொண்டது இதுவே முதல் முறை.

அவர் இந்த சிறப்பு கூட்டத்தில் ரஷ்யாவின் வீட்டோ அதிகாரம் உலக அமைப்பை திறனற்றதாக்கி உள்ளதாக கூறினார். ஐநா பலவீனமாக உள்ளது என்றால் அதற்கு காரணம் என்ன என்பதை உலகில் உள்ள அனைவரும் உணர முடியும் என அவர் கூறினார். சோவியத் யூனியன் பிரிந்த பிறகு, சூழ்ச்சிகளின் காரணமாக சட்டவிரோதமாக ரஷ்யா பாதுகாப்பு கவுன்சில் இருக்கையை ஆக்கிரமித்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ரஷ்யா மேற்கொண்டு உள்ள இந்த ஆக்கிரமிப்பையும் இனப்படுகொலையையும் நியாயப்படுத்த பொய்யர்கள் இங்கு அமர்ந்து இருக்கிறார்கள் என ஜெலன்ஸ்கி சாடினார். தொடர்ந்து பேசிய அவர், "ஒரு சில நாடுகள் மட்டுமே வைத்திருக்கும் வீட்டோ அதிகாரம் ஐநாவின் அதிகாரத்தை மேலும் குறைக்கிறது. ரஷ்யா மட்டுமே வீட்டோ அதிகாரத்தை மற்ற அனைத்து ஐநா உறுப்பினர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறது.
ஐநாவை சீர்திருத்த பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஐநாவை சீர்திருத்துவது என்பது ஒரு செயல்முறையாக மாற வேண்டும். வீட்டோ உரிமையை பயன்படுத்துவதில் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகளை முழுமையாக திரும்பப் பெறுவதும், சோவியத் யூனியன் வீழ்ச்சியைத் தொடர்ந்து 1991 எல்லைகளுக்குள் கீவின் கட்டுப்பாட்டை மீட்பதும்தான் நிலையான அமைதிக்கு ஒரே வழி." என்று அவர் தெரிவித்தார்.
இதற்கு மத்தியில், உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள டோரெட்ஸ் நகரம் மீது நேற்று ரஷ்யப் படைகள் குண்டு வீசி தாக்கியதில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகளை வெளியேற்றும் உக்ரைன் ராணுவ பிரச்சாரத்தின் ஒரு முக்கிய அம்சமாக அதிபர் ஜெலன்ஸ்கியின் ஐநா பயணம் அமைந்து உள்ளது.
எந்த நேட்டோவுக்காக இந்த போர் தொடங்கியதோ, அந்த நேட்டோ உறுப்பு நாடுகள் பலவற்றில் போர் முயற்சிக்கான ஆர்வம் குறைந்து வருகிறது. முன்னதாக பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர் "புவிசார் அரசியல் பதட்டங்களையும் பிளவுகளையும் ஏற்படுத்துகிறது.
பிராந்திய அளவிலான உறுதித்தன்மையை அது அச்சுறுத்துகிறது. மிக முக்கியமாக அணுசக்தி அச்சுறுத்தலை அதிகரிக்கிறது. பெரிய அளவிலான பிளவுகளை ஏற்படுத்துகிறது." என்றார். இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஐநாவுக்கான ரஷிய தூதரர் வஸ்ஸிலி நெபென்ஜியா, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐநா பாதுகாப்பு சபை கூட்டத்தில் உரையாற்ற எதிர்ப்பு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications