வீட்டுக்குள்ளேயே இருப்பது ஒரே போர்.. பீச்சுக்குப் போக அப்பா காரைத் திருடிய 2 சிறுமிகள்!
அமெரிக்காவில் சிறுமிகள் இருவர் பெற்றோரின் காரைத் திருடிக்கொண்டு சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
நியூயார்க்: அமெரிக்காவில் பள்ளி மாணவிகள் இருவர் தங்களுடைய பெற்றோரின் காரைத் திருடி கடற்கரைக்கு செல்ல முயன்று விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கொரோனாவின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்னும் அதன் தாக்கம் முழுமையாக தீர்ந்தபாடில்லை. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கக் கூடிய சூழல் நிலவுகிறது.
தினந்தோறும் வீட்டுக்குள்ளேயே பொழுதை கழித்து வருவதால் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். அப்படி மன உளைச்சலுக்கு ஆளான சிறுமிகள் இருவர் அதிலிருந்து விடுபட பெற்றோருக்கு தெரியாமல் ஊர் சுற்ற நினைத்து பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.

சிறுமிகள்
அமெரிக்காவின் உட்டா மாநிலத்தை சேர்ந்தவர்கள் அந்த இரண்டு சிறுமிகளும். பள்ளியில் பயின்று வரும் இருவரும் ஒரே வீட்டைச் சேர்ந்த சகோதரிகள் தான். அக்காவுக்கு 9 வயதும், தங்கைக்கு 4 வயதும் ஆகிறது. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்ததால், விரக்திக்கு ஆளான இருவரும், கலிபோர்னியாவில் உள்ள கடற்கரைக்கு சென்று கடலில் ஆட்டம் போட ஆசைப் பட்டனர்.

ஊர் சுற்றத் திட்டம்
நிச்சயம் இந்தத் திட்டத்திற்கு தங்களது பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால், அவர்களுக்குத் தெரியாமல் கடற்கரைக்குச் சென்று வர திட்டமிட்டனர். எனவே, தங்களுடைய பெற்றோரின் காரைத் திருட அவர்கள் முடிவு செய்தனர். லாவகமாக தந்தையின் பேண்ட் பையில் இருந்து காரின் சாவியை திருடிய சிறுமிகள், அதை பயன்படுத்தி வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை வெளியே எடுத்துவிட்டனர்.

தாறுமாறாக ஓடிய கார்
சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வரை அந்த காரை அச்சிறுமிகள் ஓட்டிச் சென்றனர். ஆனால் அவர்களால் முறையாக காரை ஓட்ட முடியவில்லை. இதனால் கார் சாலையில் தட்டுத்தடுமாறி சென்றது. இதை கவனித்த மற்ற வாகன ஓட்டிகள் அந்த காரை பின்தொடர்ந்து சென்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் எதிரே வந்த கன்டெய்னர் லாரி மீது அந்த கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

கண்டுபிடிப்பு
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரில் இருந்த சிறுமிகள் இருவரையும் மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் சிறுமிகள் இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தான் சிறுமிகள் காரை திருடி வந்தது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications