செவ்வாய் கிரகத்தில் ஓட்டை.. ஓடு பிரித்து உள்ளே இறங்க தயாராகும் நாசா! எல்லாம் இதுக்குதான்
நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் நாசா விஞ்ஞானிகள் மிகப்பெரிய துளை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த துளைகளில் எதிர்காலத்தில் மனிதர்கள் வசிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சூரிய குடும்பத்தில் உள்ள 8 கோள்களில் பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் இருக்கின்றன. இருப்பினும் மற்ற கிரகங்களில் உயிர்கள் இருக்கிறதா? என்கிற ஆய்வை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். அதிலும் குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வை தீவிரப்படுத்தி வருகிறோம். ஏனெனில் செவ்வாய் கிரகம் ஏறத்தாழ பூமியை போன்றே இருக்கிறது. ஆனால் அங்கு வளிமண்டலம் கிடையாது. இதனால் நீர் இல்லை.

நீர் இல்லாததால் அங்கு உயிரினங்கள் இல்லை என்கிற முடிவுக்கு நாம் வந்திருக்கிறோம். ஆனால், நீர் இல்லாமலேயே வாழக்கூடிய நுண்ணுயிர்கள் செவ்வாயில் இருக்கலாம், அல்லது நீர் இருந்த காலத்தில் இங்கு எந்த மாதிரியான உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும்? என்கிற கேள்வியுடன் நாம் ஆய்வை தொடர்ந்து வருகிறோம். எதிர் காலத்தில் இந்த ஆய்வுகள் இன்னும் தீவிரமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அதாவது, இனி வரும் நாட்களில் செவ்வாய் கிரகத்திலேயே தங்கி அங்கிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் காலம் விரைவில் வரும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இப்படியாக நமது ஆய்வுக்கு உதவும் வகையில் செவ்வாய் கிரகத்தில் சிறப்பான இடத்தை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசாவால் அனுப்பப்பட்ட மார்ஸ் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டர் மர்ம துளை ஒன்றை கண்டுபிடித்திருக்கிறது. இந்த துளையில் தங்கியிருந்து எதிர்காலத்தில் மனிதர்கள் ஆய்வை மேற்கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த துளை செவ்வாயில் உள்ள எரிமலையான ஆர்சியா மோன்ஸின் சரிவில் அமைந்திருக்கிறது. இதே போன்று பல குழிகளை விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
இருப்பினும் இந்த துளை அளவில் பெரியதாகவும், ஆழமானதாகவும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். செவ்வாய் கிரகத்தில் காந்த புலன்கள் கிடையாது. எனவே வளி மண்டலமும் கிடையாது. இதனால் சூரியனிலிருந்து வெளி வரும் புறஊதா கதிர்கள் நேரடியாக செவ்வாய் கிரகத்தை தாக்கும். இது மனிதர்களின் தோல்களில் பட்டால் புற்றுநோய் ஏற்படும். மட்டுமல்லாது வெப்பநிலையும் அதிகமாக இருக்கும். இது தவிர அவ்வப்போது கிளம்பும் புழுதி புயல் பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
இதிலிருந்து தப்பிக்க இந்த துளை உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும் இதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதாவது, "இந்த துளை குறித்து நமக்கு முழுமையாக தெரியாது. இன்னும் சரியாக சொல்வதெனில் இந்த துளையின் மிகச்சரியான புகைப்படம் கூட நமக்கு கிடைக்கப்படவில்லை. நிலவில் இதே போன்ற துளையை கண்டுபிடித்திருக்கிறோம். இந்த துளையில் அதிக வெப்பநிலை இருக்கிறது.
அதேபோல செவ்வாய் கிரகத்தில் உள்ள துளையிலும் அதிக வெப்பநிலை இருப்பின் அது நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஏனெனில் நாம் குறிப்பிடும் துளையானது எரிமலை சரிவில் அமைந்திருக்கிறது. எனவே தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் துளையில் ரோவர்களை அனுப்பி ஆய்வு செய்தால் மட்டுமே இது குறித்து நாம் முழுமையாக புரிந்துக்கொள்ள முடியும்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications