3ம் உலகப்போரை உருவாக்கும் அளவிற்கு போன உக்ரைன் - ரஷ்யா போர்.. குறுக்கே வந்த டிரம்ப்.. நடந்தது என்ன?
நியூயார்க்: உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்துவதற்கான அமைதி பேச்சு வார்த்தையில் அமெரிக்கா - ரஷ்யா களமிறங்கி உள்ளது. உக்ரைன் நேட்டோ படையில் இணைவதே ரஷ்யாவின் கோபத்திற்கு காரணம். இந்த போருக்கும் காரணம் என்பதால் நேட்டோ படையின் டாப் நாடாக கருதப்படும் அமெரிக்கா - ரஷ்யாவை சமாதானம் செய்ய களமிறங்கி பேச்சுவார்த்தை செய்து வருகிறது. இது என்ன போர்.. இது ஏன் நடக்கிறது? இந்த போரில் என்னவெல்லாம் நடந்தது? என்பதை இங்கே பார்க்கலாம்.
ரஷ்யா உக்ரைன் போர் தொடக்கம்

மோதலுக்கு காரணம் சிம்பிள் விஷயம்.. நிலமே எங்கள் உரிமை! ஆம் உக்ரைனை யார் கட்டுப்படுத்துவது என்பதே இந்த மோதலுக்கு காரணம். உக்ரைனும், ரஷ்யாவும் வரலாறுபடி பங்காளிகள். எல்லோரும் சோவியத் யூனியனுக்கு கீழ் ஒன்றாக இருந்தனர். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. ஆனால் அப்போதில் இருந்து உக்ரனை எப்படியாவது தனது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரஷ்யா முயன்று வருகிறது.
முதலில் உக்ரைன் பிரதமர்களை கட்டுப்படுத்தி ரஷ்யா நிழல் ராஜ்ஜியம் நடத்தியது. ஆனால் அதன்பின் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருக்கும் அரசியல் தலைவர்களை உக்ரைன் மக்கள் தூக்கி வீசினார்கள். இதனால் உக்ரைன் மீது ஆயுத போர் நடத்தி அந்த நாட்டை கைப்பற்ற ரஷ்யா முயன்று வருகிறது. ஏற்கனவே 2014ல் உக்ரைனின் கிரிமியாவை கைப்பற்றிய ரஷ்யா அதை தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்தது. கொஞ்சம் கொஞ்சமாக கிரிமியா போலவே உக்ரைனின் மற்ற பகுதிகளையும் ரஷ்யா கைப்பற்ற முயன்று வருகிறது.
அமெரிக்கா ஆடிய ஆட்டம்
சரி நல்லா இருக்கும் உக்ரைனை ஏன் ரஷ்யா கைப்பற்ற முயல்கிறது என்று நீங்கள் கேட்கலாம். இங்கே அமெரிக்கா மட்டும் சும்மா இல்லை. சோவியத் யூனியனில் இருந்த பல நாடுகளை அமெரிக்கா தனது நேட்டோ படையில் இணைத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா சேர்ந்து இப்படி நேட்டோ படைகளில் முன்னாள் சோவியத் நாடுகளை இணைத்து நேட்டோவை விரிவாக்கி உள்ளது. லத்திவியா. லித்துவானியா, ஈஸ்டானியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ஜார்ஜியா உள்ளிட்ட ரஷ்யாவிற்கு அருகே இருக்கும் எல்லைப்புற நாடுகள் எல்லாம் இப்போது நேட்டோ வசம்.
இரண்டாம் உலகப்போர் முடிந்து பல வருடம் ஆகிவிட்டது.. அமெரிக்கா - ரஷ்யா இடையிலான பனிப்போர் 1989லேயே முடிந்துவிட்டது. ஆனாலும் அமெரிக்கா ஐரோப்பா இந்த நேட்டோ படையை கலைக்காமல் அதை விரிவாக்கி வருகிறது. அதோடு நேட்டோ படைகளை விரிவாக்கி அதை ரஷ்ய எல்லை வரை அமெரிக்கா கொண்டு சென்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைனையும் அமெரிக்கா நேட்டோவில் சேர்க்க திட்டமிட்டு வந்தது. அப்படி நடந்தால் அவ்வளவுதான் ரஷ்யாவை பூகோள ரீதியாக அமெரிக்காவின் நேட்டோ ஆக்கிரமித்துவிடும்.
ரஷ்யாவின் கோபத்திற்கு காரணம்
இது ரஷ்யாவை நிர்மூலமாக்கும். இதை ரஷ்யா பொறுக்க முடியாமல்தான் தொடக்கத்தில் வார்னிங் கொடுத்தது. ஆனால் அமெரிக்கா நேட்டோ விரிவாக்கத்தை நிறுத்தவில்லை. விளைவு தற்போது ரஷ்யா உக்ரைன் உள்ளே புகுந்துள்ளது... ஆனால் இது உக்ரைனோடு முடியாது. நேட்டோவில் இருக்கும் மற்ற சோவியத் நாடுகள், மற்ற ரஷ்யாவின் அண்டை நாடுகளை இதே போரின் மூலம் ரஷ்யா கைப்பற்றும் அபாயம் உள்ளது. அதாவது இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் நாடுகளை கைப்பற்ற துடித்தது போல இது மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் அபாயம் உண்டாகி உள்ளது. இதையடுத்தே ரஷ்யா உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு இறங்கியது.
கைப்பற்றப்பட்ட உக்ரைனின் பெரும் பகுதிகள்
இந்த போரில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளில் உக்ரைனில் 10 சதவிகிதம் பகுதிகளை ரஷ்யா கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இந்த போரின் ஒரு கட்டமாக அணு சக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி உக்ரைன் உள்ளிட்ட அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும்.. என்று புடின் ஒப்புதல் அளித்தார்.
போகிற நேரத்தில் வேலையை காட்டிய பிடன்
நீண்ட தூர எல்லைகளுக்கு சென்று தாக்கும் அமெரிக்காவின் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பிடன் அனுமதி வழங்கி பிரச்னையை பெரிதாக்கினார். ரஷ்யா மீது தாக்குதல் நடத்த வசதியாக இந்த உத்தரவை பிடன் பிறப்பித்துள்ளார். இத்தனை காலமாக.. அமெரிக்காவின் நீண்ட தூர எல்லைகளுக்கு சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. இதை மாற்றி பிடன் உக்ரைனுக்கு அனுமதி வழங்கி பிரச்னையை பெரிதாக்கினார்.
இந்த நிலையில்தான் அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதும் பிரச்னையை குறைக்கும் வகையில் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளார்.
புடினுக்கு போன் செய்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் சமீபத்தில் தொலைபேசியில் உரையாடினர். இதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். டிரம்ப் செய்தது பெரிய தவறு.. அவர் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ரஷ்யாவிற்கு புதிய பலத்தை கொடுக்கும். ரஷ்யா இதனால் நம்பிக்கையாக இருக்கும். இதனால் உக்ரைனுக்கும், நேட்டோ நாடுகளுக்கும்தான் ஆபத்து காத்திருக்கு.
ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே என்னிடம் பேசும் முன் டிரம்ப் புடினிடம் பேசியது தவறு. இப்போது என்னை சந்திக்கும் முன்பாக புடினை டிரம்ப் சந்திப்பது பெரிய தவறு, என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சனம் செய்து எச்சரித்துள்ளார்.
இந்த போன் கால் சிறப்பாக இருந்தது.. நீண்ட நேரம் பேசினோம்.. பயனுள்ளதாக இருந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த போன் கால் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நீடித்ததாகவும், "இருவரும் ஒன்றாக வேலை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று புடினும் டிரம்பும் ஒப்புக்கொண்டதாகவும் ரஷ்யா அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இருவரும் ரஷ்ய - உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் பேசியது இதில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
ரஷ்யா அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா - ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடந்து உள்ளது. இந்த பேச்சுவார்த்தை உக்ரைனை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. உக்ரைன் இந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை. ஆம் உக்ரைன் போரை நிறுத்துவதற்கு உக்ரைன் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையிலான சந்திப்பு இந்திய நேரப்படி இன்று அதிகாலை சவூதி அரேபியாவில் முடிவடைந்தது. ரஷ்யா - அமெரிக்க அதிகாரிகள் இடையே நடந்த இந்த சந்திப்பில் உக்ரைன் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் உயர்மட்ட சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்தனர். இந்த போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான முதல்படி இது.. இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது உள்ளது, என்று தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications