வடகொரியாவுக்குள் உளவு கருவி வைக்க சென்ற அமெரிக்க சீக்ரெட் டீம்! கரைக்கு போனதும் காத்திருந்த ட்விஸ்ட்
நியூயார்க்: வடகொரியாவுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பாக அந்த நாட்டின் ரகசிய தகவல்களை திரட்டும் நோக்கில் அமெரிக்காவின் ரகசிய படைப்பிரிவான சீல் குழு, வடகொரியாவிற்கு கடல் வழியாக சென்றுள்ளது. எல்லாம் சரியாக திட்டமிட்டபடி நடைபெற்ற நிலையில், கடைசி நேர குழப்பமாக வடகொரிய எல்லையை அடைந்ததும் அங்கு அந்நாட்டு மீனவர்களை திடீரென கண்டுள்ளனர். இதனால், அங்கு பெரிய பரபரப்பே ஏற்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
உலகிற்கு தெரியாத அளவுக்கு இரும்புத்திரை போட்டு ஆட்சி நடத்தி வருகிறார் கிம் ஜாங் உன். வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் கிம் ஜாங் உன் பற்றிய தகவல்களோ, அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்றோ யாருக்கும் தெரியாது. வெளி உலக தொடர்பு எதுவும் இன்றி முற்றிலும் திறந்தவெளி சிறை போல அங்குள்ள மக்கள் வசித்து வருகிறார்கள்.

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்
கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அந்த நாடு அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை உள்ளிட்டவற்றை மேற்கொண்டு உலக நாடுகளை அதிரவைத்து வருகிறது. அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் மட்டும் இன்றி அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் கிம் ஜாங் உன் அரிதாக வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம்.
அமெரிக்காவின் சீக்ரெட் படைப்பிரிவு
அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். வியட்நாமில் இந்த சந்திப்பு நடைபெற்றது. உலகம் முழுவதும் கவனிக்கப்பட்ட இந்த சந்திப்பின் முடிவில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.
இதற்கிடையே, அமெரிக்க அதிபரின் இந்த சந்திப்புக்கு முன்பாக அமெரிக்காவின் மிகவும் சீக்ரெட் படைப் பிரிவான SEAL Team, வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதை அறிய உளவு கருவியை வைக்க சென்றதும், ஆனால் இந்த திட்டம் கடைசி நொடியில் கைவிடப்பட்ட தகவலும் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாளேட்டில் இது குறித்து வெளியான செய்திகள் விவரம் வருமாறு:-
அமெரிக்க அதிபரின் நேரடி ஒப்புதலுடன்
2019ஆம் ஆண்டு டிரம்ப் - கிம் ஜாங் உன் இடையே சந்திப்பு நடைபெறும் முன்பாக, முக்கிய உளவு தகவல்களை திரட்டும் நோக்கத்துடன் அமெரிக்க குழுவினர் ரகசியமாக வடகொரியாவுக்குள் நுழைந்தனர். ஒசாமா பின் லேடனைக் கொன்ற அதே SEAL Team 6-ன் Red Squadron பிரிவினரால் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் ஆபத்தான இந்த பணி, அமெரிக்க அதிபரின் நேரடி ஒப்புதலுடன் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. பிப்ரவரி 2019-ல் வியட்நாமில் கிம்மைச் சந்திக்க டிரம்ப் தயாரானதும், இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
பல மாதங்களாக உறைபனி நீரில் ஒத்திகை பார்த்து, அணுசக்தி மூலம் இயங்கும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செல்லத் திட்டமிட்டனர். வடகொரியக் கடற்கரையை அடைய இரண்டு சிறிய நீர்மூழ்கிக் கப்பல்கள் அவர்களுக்கு உதவ இருந்தன. குழுவினர் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உறைபனி நீரில் பல மணி நேரம் பயணிக்க வேண்டியிருந்ததால் அதற்கான முன்னேற்பாடுகளுடன் சென்றனர். வெப்பத்தை ஏற்படுத்தும் சூட்கள் அணிந்து கொண்டிருந்தனர்.
எதிர்பார்த்தபடி நடக்கவில்லை
வடகொரிய கடற்கரையை அடைந்து, ரகசிய சாதனத்தை பொருத்திவிட்டு, இறுதியில் ட்ரோன்களில் சிக்காமல் தப்பிக்க வேண்டும் என்பதே SEAL ரகசிய குழுவின் திட்டமாக இருந்தது. ஆனால், இந்தத் திட்டம் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை.
வடகொரிய கடல்பகுதியை அடைந்ததும், திடீரென்று ஒரு மீனவப் படகு இருட்டில் எதிர்பாராதவிதமாக கண்ணில் பட்டது. SEAL குழுவினர் இதைப் பார்த்ததும், என்ன செய்வதென்று குழம்பினர். திட்டக் குழு தளபதியுடன் தொடர்பு கொள்ள வழியில்லை என்பதோடு, தாங்கள் கண்டுபிடிக்கப்படும் அபாயமும் இருப்பதால், சீனியர் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவர்கள் படகில் இருந்த அனைவரையும் கொன்று, உடல்களை தண்ணீரில் மூழ்கடித்துள்ளனர்.
எனக்கு எதுவும் தெரியாது என்ற டிரம்ப்
SEAL குழுவினரால் கொல்லப்பட்ட மூன்று பொதுமக்களும் நிராயுதபாணிகளாகவும், சிப்பிகளை தேடும் மீனவர்கள் ஆவார்கள். இதையடுத்து, உளவு சாதனம் வைக்கப்படவில்லை. திட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில், வடகொரிய ராணுவம் அந்த பகுதியில் அதிக அளவில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டது. ஆனால் அங்கு என்ன நடந்தது என்பதை அவர்கள் உணர்ந்தார்களா என்பது தெரியவில்லை.
இந்த திட்டம் குறித்து அமெரிக்கா பெரிதாக பொதுவெளியில் ஒப்புக்கொள்ளவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, "எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. இப்படியான ஒரு திட்டம் பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications