பாலஸ்தீனர்களை நாடு கடத்தும் அமெரிக்கா! ஆப்பிரிக்க நாடுகளுடன் இஸ்ரேல் பேச்சுவார்த்தை
நியூயார்க்: பாலஸ்தீன மக்களை காசாவிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்த பகுதியை ஒரு திறந்தவெளி கேளிக்கை விடுதியாக மாற்ற அமெரிக்கா யோசித்திருக்கிறது. இந்த திட்டத்திற்காக, கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் அரசுடன் அமெரிக்காவும், இஸ்ரேலும் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த திட்டத்திற்கு அரபு நாடுகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இருப்பினும் அமெரிக்கா இதை அவ்வளவு லேசில் விடுவதாக தெரியவில்லை.

தி இந்து ஆங்கில ஊடகத்தில் வெளியான தகவலின்படி, அமெரிக்காவும், இஸ்ரேலும் 3 ஆப்பிரிக்க நாடுகளிடம் பாலஸ்தீனர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பேசியிருப்பதாக தெரிய வருகிறது.
1. சூடான் (Sudan)
2. சோமாலியா (Somalia)
3. சோமாலிலாந்து (Somaliland - சோமாலியாவில் இருந்து பிரிந்த ஒரு பகுதி)
ஆகியவைதான் இந்த மூன்று நாடுகள். ஏற்கெனவே உள்நாட்டு போரிலும், வறுமையிலும் இந்த நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. அப்படி இருக்கும்போது, இந்த நாடுகளில் பாலஸ்தீனர்களை எப்படி குடியமர்த்த முடியும்? என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மட்டுமல்லாது பாலஸ்தீனர்களை அவர்கள் மண்ணிலிருந்து பிடுங்கி வேறு ஒரு மண்ணில் அகதிகளாக அனுப்புவது மனித உரிமை மீறல் என்றும் கூறியுள்ளனர்.
சூடானை பொறுத்தவரை, கடந்த 2020ம் ஆண்டிலிருந்து இஸ்ரேலை அங்கீகரிக்க தொடங்கியிருக்கிறது. ஆனால் அந்நாடு தற்போது உள்நாட்டு போரில் சிக்கியிருக்கிறது. அரசுக்கு எதிராக ராணுவம் கிளர்ச்சி செய்து வருகிறது. ராணுவத்தையும், அரசையும் இணைக்க வேண்டும் என்று அமெரிக்கா முயன்று பார்த்திருக்கிறது. இருப்பினும் எதுவும் வேலைக்கு ஆகவில்லை. இதன் காரணமாக 5 ஆண்டுகளாக இஸ்ரேலுடனான உறவில் சூடான் கொஞ்சம் கூட முன்னேறவில்லை.
என்னதான் சூடான் அரசு அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தாலும், கிளர்ச்சயில் ஈடுபடும் ராணுவம் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறது. சமீபத்தில் நடந்த அரபு நாடுகளின் உச்சி மாநாட்டில் பாலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து பேச்சுகள் அடிப்பட்டன. சூடான் ராணுவம் இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தது.
அதேபோல சோமாலியாவை எடுத்துக்கொண்டால், இந்த திட்டத்திற்கு அந்நாடு நிச்சயம் சம்மதிக்காது. அரபு நாடுகளின் உச்சி மாநாட்டில் இது குறித்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. சோமாலியா அரசுடன் அமெரிக்காவும், இஸ்ரேலும் பேசியதாக சொல்லப்பட்டாலும் அதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை.
மறுபுறம் சோமாலிலாந்தை பொறுத்த வரை, அந்தநாடு தற்போது தனது அங்கீகாரத்திற்காக முயன்று வருகிறது. இப்போது வரை தனி பிரதேசமாகத்தான் வெளியில் தெரிகிறது. சோமாலிலாந்துக்கு சொந்த நாடு ஆசை காட்டி, பாலஸ்தீனர்களை இங்கே அனுப்ப அமெரிக்கா முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் இதுவரை பாலஸ்தீன தரப்பில் 46,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் பெண்களும், குழந்தைகளும் சரிபாதி எண்ணிக்கையில் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. போர் உயிரிழப்புகளை தாண்டி இன்னும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. உயிர் பிழைத்த குழந்தைகளும், கர்ப்பிணி பெண்களும் வீடுகள் இல்லாமல் உறைபனியில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.
உயிருடன் இருக்கும் மக்களுக்கு குடிநீர், உணவு மின்சாரம் உள்ளிட்டவை போதுமான அளவுக்கு கிடைக்காமல் இருக்கிறது. பழைய காசாவை மீண்டும் கொண்டுவருவதற்கு குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்றும், கோடிக்கண்கான ரூபாய் இதற்கு தேவைப்படும் என்றும் ஐநா கணித்திருக்கிறது. இதற்கிடையில்தான் காசாவை திறந்தவெளி கேளிக்கை விடுதியாக மாற்ற அமெரிக்காவும், இஸ்ரேலும் திட்டமிட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications