சொல்ல சொல்ல கேட்காத இஸ்ரேல்.. வெடிகுண்டு சப்ளையை சட்டென ‛கட்’ செய்த அமெரிக்கா! ஆனா விஷயமே வேற
நியூயார்க்: ராஃபா தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா எச்சரித்திருந்ததை மீறி, இஸ்ரேல் போரை முன்னெடுத்துள்ள நிலையில், அந்நாட்டுக்கான வெடிகுண்டு சப்ளையை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

ஆனால், போர் தற்போதுவரை நிற்கவில்லை. 34,500க்கும் அதிகமானவர்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். மட்டுமல்லாது போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
இதற்கிடையில் போர் நிறுத்தம் கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்களை, அமெரிக்காவும், பிரிட்டனும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்து வருகிறது. எனவே இந்த போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயம் எழுந்திருக்கிறது.
மறுபுறம் இந்த போரை எதிர்த்தும், போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர்.
மாணவர் போராட்டம் லண்டன், பாரிஸ் என ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. சூழல் இப்படி இருக்கையில் 'சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால்' (ICC) போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
போருக்கு இவ்வளவு எதிர்ப்புகள் எழுந்த பின்னரும், இஸ்ரேல் இன்னமும் போரை நிறுத்தவில்லை. இப்படி இருக்கையில், இஸ்ரேலுக்கு வழங்கி வந்த ஆயுதங்களில் 907 கிலோ மற்றும் 226 கிலோ கொண்ட வெடி குண்டுகளை அமெரிக்கா நிறுத்தியிருக்கிறது.
எகிப்துக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே இருக்கும் எல்லை பகுதியான ராஃபாவில் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இந்த பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக அறிவித்திருக்கிறது. அப்படி தாக்குதல் நடத்தினால் உயிரிழப்புகள் லட்சக்கணக்கில் இருக்கும் என்று சர்வதேச நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் பைடன் கூட இது குறித்து எச்சரித்திருந்தார். ஆனால் இஸ்ரேல் கேட்கவில்லை.
இஸ்ரேலுக்கு ஆயுத உதவியை அமெரிக்காதான் கொடுக்கிறது என்று எல்லோருக்கும் தெரிந்ததுதான். கடந்த 76 ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் ஆயுதங்களை கொடுத்து வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக 3500 குண்டுகளை வழங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க அரசு முன்வந்திருந்தது. ஆனால் தற்போது அமெரிக்க மாணவர்களின் இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம், பைடனை நெருக்கடியில் தள்ளியிருக்கிறது.
எனவே வேறு வழியின்றி தற்போது 907 கிலோ மற்றும் 226 கிலோ கொண்ட 2 வகை குண்டுகளை இஸ்ரேலுக்கு விநியோகிப்பதை நிறுத்தியுள்ளது. இதனை பலரும் வரவேற்றிருக்கிறார்கள்.
ஆனால், சர்வதேச அரசியல் விமர்சகர்கள் இந்த விவகாரத்தை வேறு கோணத்தில் அணுகியுள்ளனர். அதாவது, போர் துவங்கிய பிறகு அமெரிக்க ஆயுதங்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒப்பந்தங்களின் எண்ணிக்கை மட்டுமே 100-க்கும் மேல். இப்படி இருக்கும் போது இரண்டே இரண்டு வகை குண்டுகளை மட்டும் அமெரிக்கா நிறுத்துவதால், பாலஸ்தீன மக்களை பாதுகாத்து விட்டதாக அர்த்தமாகிவிடாது என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications