தோல்வியை ஏற்கும் எண்ணமே இல்லை.. உறுதியாக நிற்கும் டிரம்ப்.. வெள்ளை மாளிகையில் நீடிக்கும் பரபரப்பு!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அதை எதிர்கொள்ளும் எண்ணம் கொஞ்சம் கூட டிரம்பிற்கு இல்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கிட்டத்தட்ட கிளைமேக்ஸை நெருங்கிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் முடிவுகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நிலவரப்படி குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பை வீழ்த்தி ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் வெற்றிபெறுவதற்கே வாய்ப்பு உள்ளது.
இதுவரை வெளியாகி உள்ள முடிவுகளின்படி 264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

முடிவு இல்லை
இந்த நிலையில் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அதை எதிர்கொள்ளும் எண்ணம் கொஞ்சம் கூட டிரம்பிற்கு இல்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது. வெள்ளை மாளிகையில் இருக்கும் நிர்வாகிகள், குடியரசு கட்சியினர் தெரிவித்த தகவல்களின்படி.. டிரம்ப் தோல்வி அடைந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள எந்த வாய்ப்பும் இல்லை என்று கூறுகிறார்கள்.

மோதல்
பெரிய அளவில் பிரச்சனை செய்யாமல் டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியே செல்ல மாட்டார். கடந்த சில நாட்களாக டிரம்ப் பொதுவிலும், வெள்ளை மாளிகைக்கு உள்ளேயும் பேசுவதை கவனித்து வரும் பலர் இதை உறுதி செய்துள்ளனர். டிரம்ப் பேசுவதை பார்த்தால் அவர் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் எண்ணத்தில் இல்லை என்பது உறுதியாகிறது.. அவர் சண்டை போடும் மனநிலையில் இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

சிஓஎஸ்
அதேபோல் அதிபர் டிரம்பின் முதன்மை செயலாளர் மார்க் மெடோஸும் டிரம்பை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார். அவரும் ஒரு வகையில் டிரம்ப்பிற்கு நம்பிக்கை ஊட்டி வருகிறார். அதாவது தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாக கூறி டிரம்பை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள். அதில் மார்க் மெடோஸும் ஒருவர் என்கிறார்கள். இதனால் தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டது என்று டிரம்ப் உறுதியாக நம்புகிறார் என்று கூறப்படுகிறது.

உறுதியாக இருக்கிறார்
முறைகேடு நடந்துவிட்டது, இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்று டிரம்ப் நம்புகிறார். இவருக்கு ஆலோசனை சொல்ல வேண்டிய துணை அதிபர் மைக் பென்சும் வெள்ளை மாளிகையில் இப்போது இல்லை. இதனால் டிரம்ப்பை கட்டுப்படுத்த யாருமே இல்லை. டிரம்பை இந்த சட்ட நடவடிக்கை, புகார்களில் இருந்து யாராவது தடுக்க வேண்டும். ஆனால் டிரம்பிடம் பேசுவதற்கு தகுந்த ஆட்கள் வெள்ளை மாளிகையில் இல்லை என்கிறார்கள். சட்ட போராட்டம் மூலம் தனது பெருமையை மீட்டு எடுக்க டிரம்ப் முயன்று வருகிறார்.

கோபம்
அதோடு டிரம்ப் தொலைக்காட்சி விவாதங்களை பார்த்தும் கோபத்தில் இருக்கிறார். தன்னுடைய பேச்சை தொலைக்காட்சி நிறுவனங்கள் பாதியில் நிறுத்திய கோபத்தில் டிரம்ப் இருக்கிறார். தனக்கு ஏன் குடியரசு கட்சியில் கூட போதுமான ஆதரவு இல்லை என்ற கோபத்தில் டிரம்ப் இருக்கிறார். இதனால்தான் சட்ட ரீதியான போராட்டங்களை செய்வதில் டிரம்ப் உறுதியாக இருக்கிறார் என்கிறார்கள். இன்னொரு பக்கம் கட்சியின் லீகல் டீம் தனக்கு உதவவில்லை என்ற விரக்தியும் அவருக்கு உள்ளது .

ஏன் சட்ட போராட்டம்
அதேபோல் சட்ட போராட்டம் மூலம் தனது ஆதாரவாளர்கள் மத்தியில்..தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டது என்று நிரூபிக்க டிரம்ப் முயற்சி செய்கிறார். தேர்தலில் தோல்வி அடைந்தாலும் .. முறைகேடு நடந்துவிட்டது என்ற பிம்பத்தை உருவாக்க டிரம்ப் முயற்சி செய்கிறார். தன்னை தோல்வியாளன் என்று காட்டுவதை விட ஏமாற்றப்பட்டவன் என்று காட்டி அனுதாபம் தேட முயல்கிறார். இதன் மூலம் தனது அரசியல் எதிர்காலத்தையும், ஆதரவாளர்களின் நம்பிக்கையையும் தக்க வைத்துக்கொள்ள டிரம்ப் திட்டமிடுகிறார் என்கிறார்கள்.

முடியாதது
இதனால்தான் ஜெயிக்க முடியாது என்று தெரிந்தும் கூட.. சட்ட போராட்டத்திற்கு பல கோடிகளை செலவு செய்ய டிரம்ப் உறுதியாக உள்ளார். இதெல்லாம் போக தான் பிரச்சாரம் செய்த நேரத்தில் பிடனை ஒரு முட்டாள் போல டிரம்ப் சித்தரித்து இருந்தார். அவரிடம் போய் தோல்வி அடைந்தால் அது டிரம்பிற்கு பெரிய வீழ்ச்சியாக இருக்கும். அவரின் அரசியல் வாழ்க்கையும், பிசினஸ் வாழ்க்கையும் பாதிக்கும்.

தேர்தலுக்கு பின்
அதிபர் வாழ்க்கைக்கு பின் டிரம்பின் பிஸ்னஸ் வாழ்க்கை இதனால் பெரிய அளவில் பாதிக்க போகிறது என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் எப்படியாவது என்னை ஏமாற்றி வீழ்த்திவிட்டனர் என்ற பிம்பத்தை உருவாக்க டிரம்ப் முயல்கிறார். இதனால் டிரம்ப் கண்டிப்பாக தோல்வியை ஏற்க மாட்டார்.. அவர் பெரிய அளவில் சண்டை போட்டு.. போராட்டத்திற்கு பின்புதான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவார் என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications