ஈரான் மீது சனிக்கிழமை வீசப்படும் வெடிகுண்டு? டிரம்ப் கொடுத்த கடும் வார்னிங்.. தயாரான அமெரிக்க டீம்
நியூயார்க்: அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சனிக்கிழமை அமெரிக்கா அதிகாரிகள் ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகின்றன. இந்த பேச்சுவார்த்தை ஓமனில் நடைபெற உள்ளது. இப்படியான சூழலில் தான் சனிக்கிழமை நடக்கும் பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டும். இல்லாவிட்டால் ஈரானுக்கு அந்த நாள் மிகவும் மோசமானதாக அமையும் என்று டொனால்ட் டிரம்ப் கடும் வார்னிங் செய்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் என்பது அதிகரித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. இதனால் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் விரும்புகிறார்.

இதுதொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்துக்கு அழைப்பு விடுத்து டொனால்ட் டிரம்ப், ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனிக்கு கடிதம் எழுதினார். ஆனால் ஈரான் கடிதத்தை ஏற்கவில்லை. அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்போவது இல்லை என்று அறிவித்து விட்டது.
ஈரான் - அமெரிக்கா பிரச்சனை
இது டொனால்ட் டிரம்பை கோபப்படுத்தி உள்ளது. அதோடு ஈரானை தாக்கும் வகையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தங்களின் படை தளங்களில் அமெரிக்க வீரர்களையும், போர் விமானங்களையும் குவிக்கிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் படை தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை தயாராக வைத்துள்ளது. இந்நிலையில் தான் ஈரான் - அமெரிக்கா இடையேயான விவகாரம் பற்றி டொனால்ட் டிரம்பிடம் நேற்று கேள்வி கேட்கப்பட்டது.
அதாவது நேற்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் 2வது முறையாக சந்தித்து பேசினர். அதன்பிறகு அவர்கள் இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தான் ஈரான் குறித்த கேள்விக்கு டொனால்ட் டிரம்ப் காட்டமாக பதிலளித்தார். ஈரானிடம் நேரடியாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் அந்த நாடு மோசமான விளைவுகளை சந்திக்கும் என்று வார்னிங் செய்துள்ளார்.
டிரம்ப் மீண்டும் வார்னிங்
அதாவது டொனால்ட் டிரம்பிடம் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது அமெரிக்கா படைகள் தாக்குதல் நடத்துமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டொனால்ட் டிரம்ப் கூறியதாவது: ஈரானிடம் தற்போது அணுஆயுதம் இல்லை. ஈரானிடம் நேரடியாக அமெரிக்கா பேச உள்ளது. இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டும்.
இல்லாவிட்டால் ஈரானுக்கு அந்த நாள் மிகவும் மோசமான தினமாக மாறிவிடும். ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய முடியுமா? ஒன்றாக அனைவரும் வாழ முடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் சனிக்கிழமை நடக்கும் பேச்சுவார்த்தை தோல்வியடையும் பட்சத்தில் அன்றைய தினமே டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது வெடிகுண்டுகளை வீச உள்ளாரா? என்ற கேள்வி என்பது எழுந்துள்ளது.
ஓமனில் நடக்கும் பேச்சுவார்த்தை
இருப்பினும் இப்போதும் ஈரான், நேரடியாக அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. மாறாக ஓமன் மூலம் அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தைக்கு ஈரான் முயற்சித்தது. அதன்படி வரும் சனிக்கிழமை அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதனை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும் உறுதி செய்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று அதிகாலையில் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், ‛‛ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஓமனில் வரும் சனிக்கிழமை மறைமுகமாக உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இது சோதனை முயற்சிக்கான வாய்ப்பாக அமைய உள்ளது. இனி இந்த விஷயத்தில் அமெரிக்கா தான் முடிவு எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
தூதரக உறவு இல்லாத சூழலில் பேச்சு
முன்னதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் கூறுகையில்,‛‛அமெரிக்காவுடன் மறைமுக பேச்சுவார்த்தைக்கு ஈரான் காத்திருக்க உள்ளது. இதற்கு தாராளமான, சுதந்திரமான பொறுப்பான ஆஃபர் என்பது வழங்கப்பட உள்ளது'' என்று கூறியிருந்தார். மூத்த ஈரான் முக்கிய அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், ‛‛ஈரான் மறைமுகமாக ஓமன் மூலம் அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது'' என்று கூறியிருந்தார். அதன்படி சனிக்கிழமை ஓமனில் வைத்து ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அதனை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார்.
அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் நிலையில் ஈரான் அதற்கு உடன்படாமல் மறைமுக பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதன் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது. ஏனென்றால் அமெரிக்கா - ஈரான் இடையே இப்போது நேரடியான தூதரக உறவு என்பது இல்லை. இதனால் இதற்கு முன்பு இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு மற்ற நாடுகள் தான் மத்தியஸ்தம் செய்தன. கடைசியாக அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த 2015ம் ஆண்டில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இருந்தார். அப்போது தான் இருநாடுகள் இடையே அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு 10 ஆண்டுகளாக இருநாடுகளும் நேரடியாக பேசி கொள்ளவில்லை. ஈரானை அமெரிக்காவை முற்றிலுமாக புறக்கணித்தது. இதனால் அமெரிக்கா இழுத்த இழுப்புக்கெல்லாம் வரமுடியாது என்பதில் ஈரான் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளது.
ஓமன் தேர்வு ஏன்?
இதனால் தான் வெள்ளை மாளிகைக்கு ஈரான் தலைவரை வரவழைத்து டிரம்ப் பேச நினைத்தார். இதற்காக தான் ஈரான் உயர்மட்ட தலைவர் காமேனிக்கு கடிதமும் எழுதினார். ஆனால் அதனை ஈரான் ஏற்காமல் ஓமன் வழியாக பேச்சுவார்த்தைக்கு தயாராகி உள்ளது. மேலும் ஓமன் என்பது ஈரான் மற்றும் அமெரிக்காவுடன் நல்ல உறவில் உள்ளது. இதனால் தான் இந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய ஓமனை தேர்வு செய்தது ஈரான். இதன்மூலம் அமெரிக்காவின் உத்தரவுக்கு அடிபணியாமல் ஈரான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
ஆனாலும் ஈரானை அணுஆயுதம் தயாரிக்க விடாமல் தடுக்க வேண்டியது தான் முக்கிய நோக்கம் என்பதால் அமெரிக்காவும் ஓமனில் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு ஓகே சொல்லி உள்ளது. இருப்பினும் இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா - ஈரான் தரப்பில் யார் யார் பங்கேற்கிறார்கள். பேச்சுவார்த்தை எப்படி நடக்கும்? என்பது பற்றிய விபரம் இன்னும் வெளியாகவில்லை.
மோதல் வருமா?
அமெரிக்கா இப்படி இறக்கி வந்தாலும் கூட அந்த பேச்சுவார்த்தையில் ஈரான் உடன்பாடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் கூறியுள்ளார். அதன்படி அமெரிக்கா ஈரான் மீது வெடிகுண்டுகளை வீசலாம். அதோடு ஈரானின் அணுசக்தி திட்டங்களின் கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா தாக்கலாம்.
இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கலாம் . இருப்பினும் பேச்சுவார்த்தை நடத்த இருநாடுகளும் முடிவு செய்துள்ளதால் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் என்பது அந்த பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவை பொறுத்து தான் அமையும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications