ஒரு பக்கம் போலீசார்.. மறுபக்கம் ஆதரவாளர்கள்! நீதிமன்றத்தில் சரணடையும் டிரம்ப்! பரபரக்கும் நியூயார்க்
நியூயார்க்: அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்ப் இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகிறார். இதையொட்டி அங்கே நியூயார்க் நீதிமன்றத்தில் மிகக் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் ஒரு அசாதாரண தருணம் இன்று மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. 2020 தேர்தல் தொடர்பாக வழக்கு வழக்குகளை எதிர்கொண்டுள்ள டிரம்ப், ஆபாச நடிகைக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் இன்று சரணடைகிறார்.
டிரம்ப் இன்று சரணடையும் நிலையில், வழக்கமான நீதிமன்ற நடைமுறைகளே பின்பற்றப்பட இருக்கிறது. அரிதான இந்த வழக்கில், டிரம்ப் கைரேகை பெறப்படும். மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கப்படும்.

டிரம்ப்
அதேநேரம் டிரம்ப் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை இல்லை. அவர் அதிபராக இருக்கும் போது ஏகப்பட்ட சர்ச்சைகளில் வரிசையாக மாட்டியவர் தான் அவர். அவர் மீது அமெரிக்கச் சபையில் இரண்டு முறை பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இருமுறையும் குடியரசு கட்சி எம்பிக்கள் அளித்த ஆதரவால் அவர் தப்பித்துக் கொண்டார். இப்போது கிரிமினல் விசாரணையை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அதிபர் என்ற மோசமான பெயரையும் அவர் பெறுகிறார்.

நீதிமன்றம்
இந்த வழக்கிற்காக புளோரிடா மாகாணத்தில் இருந்து டிரம்ப் நியூயார்க் வந்துள்ளார். அங்கே அவர் டிரம்ப் டவரில் தங்கியுள்ள நிலையில், இன்று அவர் சீக்ரெட் சர்வீஸ் மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். அவர் முன்னாள் அதிபர் என்பதால் இப்போது அவருக்கு சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு இருக்கிறது. நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கமாகக் குற்றவாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, டிரம்பின் படங்கள் எடுக்கப்பட்டு கைரேகை சேமிக்கப்படும்.

பதற்றம்
இருப்பினும், டிரம்ப் தனது குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். அரசியல் காரணங்களுக்காகவே தன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அவர் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், 2024இல் தேர்தலில் வென்று, அமெரிக்காவை மீண்டும் சிறப்பான நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற தனது முயற்சியைப் பலவீனப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறும் அவர், மக்கள் பெரும் திரளாகப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அங்குப் பதற்றமான சூழலே நிலவுகிறது.

தடுப்புகள்
இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிரம்ப் ஆஜராகும், மன்ஹாட்டன் கிரிமினல் கோர்ட்டிற்கு அருகே உலோக தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், நீதிமன்றம் நீதிமன்றம் அமையும் சாலையும் மூடப்பட்டுள்ளது. ஆபாச நடிகைக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில், டிரம்ப் இன்று நீதிமன்றத்தில் சரணடைகிறார். உள்ளூர் நேரப்படி செவ்வாய் மதியம் (இந்திய நேரப்படி நள்ளிரவு) அவர் நீதிமன்றத்திற்குச் செல்கிறார்.

போலீசார்
அவரது வருகையின் போது போலீசார் அதிகளவில் குவிக்கப்பட உள்ளனர். அதேநேரம் டிரம்பிற்கு எதிராக விசாரணை நடத்தும் மன்ஹாட்டன் மாவட்ட நீதிபதி மற்றும் ஜூரியை கொல்ல வேண்டும் என்றும் கருத்துகளைக் கூறியுள்ளனர். இதை எல்லாம் கருத்தில் வைத்தே அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும், பெரியளவில் பாதுகாப்பு எதுவும் இல்லை என்று நியூயார்க் போலீசார் தெரிவித்துள்ளனர்.

என்ன காரணம்
அதேநேரம், கடந்த 2020 அதிபர் தேர்தலுக்குப் பிறகு, தேர்தலில் மிகப் பெரிய முறைகேடு நடந்ததாக டிரம்ப் தொடர்ந்து கூறிய பொய்யை நம்பி அங்கே மிகப் பெரியளவில் போராட்டங்கள் நடைபெற்றது. குறிப்பாக ஒரு கட்டத்தில் அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்திலேயே முற்றுகையிட்டு கலவரத்தை நடத்தினர். இதில் சிலர் உயிரையும் இழந்தனர்.இது அமெரிக்க ஜனநாயகத்தில் கருப்பு நாளாக அறியப்படுகிறது. இப்போது அதேபோல நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்லக் கூடாது என்பதற்காகவே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications