ஊட்டியில் காபியில் மருமகளை காலி செய்த மாமியார்.. ‘லவ் ஜிகாத்’ என்று அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி கைது
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மாமியாரான யாஸ்மினுக்கும்- மருமகளான ஆஷிகா பர்வீனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஒரு நாள் மாமியார், மருமகளை காபியில் சயனைடு கலந்து கொடுத்து கொன்றுவிட்டார். இந்நிலையில் அந்த பெண் கொலை வழக்கை லவ் ஜிகாத் என்று சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக பாஜக மாநில நிர்வாகி வெற்றிவேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே பென்னட் மார்க்கெட் பகுதியை சேர்ந்த 50 வயதாகும் ஜவஹருல்லா ஆட்டோ டிரைவர் ஆவார். இவருடைய மனைவி யாஸ்மின் (47). இவர்களுக்கு இம்ரான் (27), முக்தார் (24) என 2 மகன்கள் இருக்கிறார்கள். இதில் ஐவஹருல்லா யாஸ்மின் தம்பதியின் மூத்த மகனான இம்ரானும், ஊட்டி வண்டிச்சோலை பகுதியை சேர்ந்த அப்துல் சமது- நிலாபர் நிஷா தம்பதியின் மகளான ஆஷிகா பர்வீன் (22) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதற்கு முதலில் இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள். ஆனால் ஒருகட்டத்தில் இரு வீட்டாரும் சம்மத்தின்னர். அதன் பின்னர் இம்ரான் மற்றும் ஆஷிகா பர்வீன் ஆகியோருக்கு 2021-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் மாமியாரான யாஸ்மினுக்கும்- மருமகளான ஆஷிகா பர்வீனுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஆஷிகாவை மாமியாரும், கணவரும் சேர்ந்து துன்புறுத்துவதாக அவர் தனது பெற்றோரிடம் கூறி வந்திருக்கிறார். இந்த சூழலில் கடந்த ஜூன் 24ஆம் தேதி, ஆஷிகா பர்வீன் வலிப்பு ஏற்பட்டு சமையலறையில் கிடப்பதாக பெண்ணின் தாயாருக்கு தகவல் வந்துள்ளது. பின்பு அவரை ஊட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ஆஷிகா பர்வீன் இறந்ததாக மருத்துவர்கள் கூறிய நிலையில் சந்தேகம் அடைந்த பெண்ணின் பெற்றோர், அவரது உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என உதகை மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து உடற்கூறாய்வு செய்யப்பட்டு முடிவுகள் வந்தன. இதில் பெண்ணின் கழுத்து, தோள்பட்டை, விலா எலும்பு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து, யாஷிகா பர்வீனின் மாமியார் யாஸ்மின் (49), அவரது உறவினர் காளிப் (56), கணவர் இம்ரான் (30), கணவரின் தம்பி முக்தார் (23) ஆகிய நான்கு பேரை உதகை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் மாமியார் யாஸ்மின், தனது மருமகள் ஆஷிகா பர்வீனுக்கு காபியில் சயனைடு கலந்து கொடுத்து கொன்றது தெரியவந்தது. வரதட்சணையாக ரூ.20 லட்சம் கேட்டு தராததால் இந்தக் கொடூர செயலில் இளம் பெண்ணின் மாமியார் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் ஆஷிகா பர்வீன் ஒரு இந்து பெண் என்றும், அவரை லவ் ஜிகாத் மூலம் முஸ்லிமாக மாற்றி இம்ரான் திருமணம் செய்து கொண்டு வரதட்சணை கொடுமை செய்து கொன்றதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் ஒன்று வேகமாக பரவியது. சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த தகவலை மறுத்த ஊட்டி போலீசார், ஆஷிகா பர்வீன் குறித்து வதந்தி பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உடனடியாக எச்சரித்தனர். அதன் பின்னர் ஊட்டி பெண் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பியது யார்? என சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் தேடி வந்தார்கள்.
சைபர் கிரைம் போலீசார், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் என்பவர் இந்த தகவலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதை கண்டுபிடித்தனர்.இதையடுத்து வெற்றிவேல் மீது நேற்று முன்தினம் ஊட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அருப்புக்கோட்டைக்குச் சென்று வெற்றிவேலை கைது செய்து ஊட்டிக்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications