ஊட்டிக்கு டூர் போறீங்களா? பந்தலூர் மலைப்பக்கம் மட்டும் போயிடாதீங்க! தண்ணி காட்டும் சிறுத்தை!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதிக்குட்பட்ட பந்தலூர் மலைப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து காணப்படுகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளை அந்தச் சிறுத்தை தாக்கிய நிலையில், ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்கள் பந்தலூர் மலைபகுதிக்கு செல்வதை தவிர்த்தால் நன்று. இதனிடையே சிறுத்தையை வனத்துறையினர் விரைந்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, இது குறித்து விடுத்துள்ள பதிவு வருமாறு;

''நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதிக்குட்பட்ட பந்தலூர் மலைப்பகுதியில் திரியும் சிறுத்தை அப்பகுதி பொதுமக்களை தாக்கி வருவது தொடர் நிகழ்வாகிவிட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளை சிறுத்தை தாக்கியதால் மக்கள் பெரும் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர். இதனால் இப்பகுதியில் தொடர்ந்து உயிர்ப்பலிகள் அதிகரிப்பதால் மக்களிடம் மரண பீதி உருவாகியுள்ளது.''
''சிறுத்தையை பிடிக்கச்சொல்லி வனத்துறையிடம் பலமுறை புகாரளித்தும் இதுவரை ஆட்கொல்லி சிறுத்தையை பிடிக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காதது மக்களிடம் கோபத்தையும், அதிருப்தியையும் உருவாக்கியிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மூன்று பெண்களை சிறுத்தை தாக்கியதில் சரிதா என்ற சகோதரி பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். ''
''மேலும், கடந்த 04.01.2024 அன்று வீட்டிற்கு வெளியில் விளையாடி கொண்டிருந்த 4 வயது கீர்த்தனா என்ற குழந்தையை சிறுத்தை தாக்கியதில் பலத்த காயம் அடைந்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அதனை தொடர்ந்து நேற்று 06.04.2024 மீண்டும் மூன்று வயது குழந்தை நான்சியை சிறுத்தை கடுமையாக தாக்கியதில் குழந்தையின் உயிர் பறிபோயுள்ள செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.''
''உயிரிழந்த இருவருக்கு தலா 10 லட்சத்தை ஆறுதல் நிதியாக தமிழக அரசு வழங்கியுள்ளதை வரவேற்கும் நிலையில், தமிழ்நாடு அரசு பொதுமக்களைத் தாக்கி கொன்றுவரும் ஆட்கொல்லி சிறுத்தையை வனத்துறை மூலம் விரைந்து பிடிக்க துரித நடவடிக்கையை எடுத்து, கூடலூர் பகுதி மக்களைப் பாதுகாக்க வேண்டுமென மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.''












Click it and Unblock the Notifications