"என் தலைவன் மழையில் நனையக் கூடாது!" கொடநாடு சாலையிலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு குடைபிடித்த மதுபோதை ஆசாமி
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் போதை ஆசாமி ஒருவர் செய்த செயல் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
Recommended Video
அதிமுகவில் இப்போது நடக்கும் உட்கட்சி விவகாரம் அனைவருக்கும் தெரியும். கடந்த இரு மாதங்களாகவே தமிழக அரசியலில் அதுதான் பேசுபொருளாக உள்ளது.
எடப்பாடி பழனிசாமியும் சரி, ஓ. பன்னீர்செல்வமும் சரி தாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறி தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றனர்.

எடப்பாடி
ஒரு புறம் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஓ.பன்னீர்செல்வம் அவரது மகன் ஓ.பி. ரவீந்திரநாத் உள்ளிட்டோரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ. பன்னீர்செல்வம் அத்துமீறி நுழைந்து பொருட்களைக் கொள்ளை அடித்ததாகவும் பரபர குற்றச்சாட்டுகளை முன் வைத்தது எடப்பாடி தரப்பு.

ஓபிஎஸ்
அதேநேரம் மறுபுறம் அதிமுக பொதுக்குழுக் கூட்டமே செல்லாது என்று வழக்கு தொடர்ந்து உள்ளார் ஓபிஎஸ்! மேலும், இவரும் எடப்பாடியையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அத்துடன் நில்லாமல் மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து அவர்கள் தான் உண்மையான அதிமுக நிர்வாகிகள் எனக் கூறி, அவர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தொண்டர்கள்
இப்படி கட்சி நிர்வாகிகளை நீக்குவது சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளில் இரு தலைவர்களும் ஈடுபட்டு உள்ளது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்றும் வலுவாக திமுகவை எதிர்த்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே அனைத்து அதிமுக தொண்டர்களின் ஒரே விருப்பமாக உள்ளது.

நீலகிரி
இந்தச் சூழலில் நிர்வாகிகள் எத்தனை அணி மாறினாலும், தொண்டர்கள் எப்போதும் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பக்கம் தான் என்பதைக் காட்டும் வகையிலான சம்பவம் ஒன்று நீலகிரியில் அரங்கேறி உள்ளது. பருவமழை தொடங்கியது முதலே தமிழகம் எங்கும் நல்ல மழை பெய்து வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாகவே நல்ல மழை பெய்து வருகிறது.

எம்ஜிஆர்
நேற்றைய தினம் கோத்தகிரி அருகிலுள்ள டானிங்டன் பலத்த மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது அங்குள்ள பேருந்து நிலையத்திற்கு இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் பேருந்திற்காகக் காத்திருந்த சமயத்தில் திடீரென மழை பெய்யத் தொடங்கிவிட்டது. அப்போது அங்கு கொடநாடு சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலை மழையில் நனைந்து கொண்டிருப்பதைக் கண்டு துடிதுடித்துப் போய்விட்டார்.

குடை பிடித்த நபர்
உடனே எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த சிலை அருகே சென்ற அவர், சுற்றி அமைக்கப்பட்டு இருந்த கேட்டை திறந்து உள்ளே சென்றார். விறுவிறுவென சிலை அமைக்கப்பட்டுள்ள தூண் மீது ஏறிய அந்த நபர், கையில் இருந்த குடையை விரித்து எம்.ஜி.ஆர் சிலை மழையில் நனையாதவாறு பிடித்துள்ளார். அதுவும் 5, 10 நிமிடங்கள் இல்லை. நீண்ட நேரம் எம்ஜிஆர் சிலை மழையில் நனையாமல் அவர் குடையை அப்படியே பிடித்துள்ளார்.

நெட்டிசன்கள்
இதனை அந்தப் பகுதியில் சென்றவர்கள் ஃபோட்டோ மற்றும் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்து உள்ளனர். எம்ஜிஆர் சிலை கொட்டும் மழையிலும் நனைந்துவிடக் கூடாது என்று குடை பிடித்த அந்த நபரின் படத்தை நெட்டிசன்கள் வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர். மது போதையில் இருந்தாலும் எம்.ஜி.ஆர் மீதான அன்பைக் காட்டிய அந்த நபரை வெறிகொண்டு தேடி வருகின்றனர் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications