கோடநாடு: ‘வளையத்திற்குள் வரும் அதிமுக மாஜிக்கள்’.. தெரியாம நடந்திருக்காது.. வழக்கறிஞர் பரபர தகவல்!
நீலகிரி : கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சிலரை சாட்சிகளாக சேர்க்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் விஜயன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் நடத்தி வரும் விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் நடந்தபோது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் தலையீடு நிச்சயமாக இருந்திருக்கும், அவர்களையும் சாட்சிகளாக சேர்க்கக் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோடநாடு கொலை கொள்ளை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அப்போது முக்கிய ஆவணங்களும், பொருட்களும் திருடுபோயின. மேலும், அப்போது பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய நபரான ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 2017 ஏப்ரல் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

கார் டிரைவர் பலி
அதேபோல் மற்றொரு டிரைவரான சயான் சென்ற கார் கேரளாவில் விபத்துக்குள்ளானது. இதில் சயானின் மனைவி, மகள் இறந்தனர். சயான் காயத்துடன் உயிர் தப்பினார். கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இப்படி கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கோடநாடு கொலை கொள்ளை குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சிபிசிஐடி விசாரணை
மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. தனிப்படை போலீசார் 316 பேரிடம் நடத்திய விசாரணையில் பெற்ற வாக்குமூலம் மற்றும் 3,600 பக்க குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் தற்போது சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. செல்போன் உரையாடல் ஆதாரங்களை அடிப்படையாக வைத்து மேலும் சிலரை சிபிசிஐடி அடையாளம் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியானது.

தீவிரம்
கோடநாடு வழக்கைப் பொறுத்தவரை சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். நீலகிரி, கோவை, சேலம் ஆகிய இடங்களில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தினமும் 2 முதல் 3 நபர்களை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் வழக்கை விரைந்து முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசி இருந்தார். கோடநாடு வழக்கு விசாரணையில் முன்னாள் அமைச்சர்கள் சிலரை சாட்சியாக சேர்க்க நீதிமன்றத்தில் மனு உள்ளதாக வழக்கறிஞர் விஜயன் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
இந்நிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சிலரை சாட்சிகளாக சேர்க்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் நடந்தபோது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் தலையீடு நிச்சயமாக இருந்திருக்கும், ஏற்கனவே சசிகலா, மேலாளர் நடராஜ், உள்ளிட்டோர் சாட்சிகளாக இருக்கும் நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சிலரை சாட்சிகளாக சேர்க்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், தற்போது நடைபெறும் விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருவதால் கோடநாடு வழக்கு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications