அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை.. பைகளை திறந்து பார்த்த அதிகாரிகள்
நீலகிரி: நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ. ராசாவை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவரது பைகளை திறந்து பார்த்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ. ராசா போட்டியிடுகிறார். ஆ. ராசாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று உதகைக்கு ஹெலிகாப்டரில் வந்தார். உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டர் உதகை தீட்டுக்கல் பகுதிதியில் உள்ள ஹெலிபேடில் வந்திறங்கியது.

ஹெலிகாப்டரில் சோதனை: இதுபற்றிய தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள். ஹெலிபேடிற்கு சென்று உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டரில் பணம் அல்லது பரிசு பொருட்கள் எதுவும் கொண்டு வரப்பட்டுள்ளதா என தீவிர சோதனையை பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
ஹெலிகாப்டரில் இருந்த பைகள் அனைத்தையும் திறந்து பார்த்து அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சில நிமிடங்கள் இந்த சோதனை நீடித்தது. சோதனையில் முடிவில் எந்த பொருளும் ஹெலிகாப்டரில் இருந்து கிடைக்கவில்லை. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அமைசச்ர் உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மெற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியில் உதயநிதி: கடந்த சில நாட்களுக்கு முன்பு, தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் பிரசாரத்திற்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை மடக்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கரட்டு மலை சோதனைச்சாவடியில் உதயநிதி ஸ்டாலின் காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சில நிமிடங்கள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது உதயநிதி ஸ்டாலின் தனது காரிலேயே அமர்ந்து இருந்தார். சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்த உதயநிதி, சோதனை முடிந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லை. வெறும் 5 நாட்களே உள்ளது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதி கட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
900 பறக்கும் படைகள்: தேர்தலுக்கான முன்னேற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டுள்ளது.வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் அல்லது பரிசுப்பொருள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்தும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் முக்கிய இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க தமிழகத்தில் 900 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆவணங்களின்றி அதிக அளவு பணம், பரிசுபொருள்கள் உள்ளிட்டவை கொண்டு சென்றால் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும்.
இதுவரை யார் யாரிடம் சோதனை: அந்த வகையில் இதுவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் டி.ஆர். பி.ராஜா, எம்பி கனிமொழி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் எம்எல்ஏ கருணாஸ் உள்ளிட்டோரின் கார்களை பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர்.












Click it and Unblock the Notifications