நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. ப்ளீஸ் இதையெல்லாம் செய்யாதீங்க! ஆட்சியர் அட்வைஸ்
ஊட்டி: நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், எதையெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.
கன மழையை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியதாவது,

"ஊட்டி உட்பட நீலகிரி முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் இருக்கிறது. ஊட்டி, பந்தலூர், குந்தா, கூடலூர் உள்ளிட்ட இடங்களில் மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடங்களில் முன்னெச்சரிக்கையாக குழுக்களை நிலை நிறுத்தியுள்ளோம். துணை ஆட்சியர் அளவிலான அதிகாரிகள் இந்த 4 தாலுக்காக்களில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். வெள்ள பாதிப்பு அபாயம் இருக்கும் இடங்களிலிருந்து மக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக தங்க வைக்கப்பட இடங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.
அதேபோல உள்ளூர் மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றன. கனமழை காரணமாக மரங்கள் அதிக அளவில் சரியும். இதனால் மின்சார வயர்கள் அறுந்து விழும். எனவே மரங்கள் விழுந்துள்ள பகுதிகளுக்கு போக வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. நாங்கள் விடுக்கும் ஒரே கோரிக்கை, நிலைமை கையை மீறும்போது உள்ளூர் மக்கள் முகாம்களுக்கு வர வேண்டும் என்பதுதான். இதற்கான அறிவிப்பை தேவைப்படும்போது மாவட்ட நிர்வாகம் வழங்கும்.
ஊட்டியில் படகு சவாரி முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கும் இது நிறுத்தப்பட்டிருக்கும். நாளை மழையின் அளவை பொறுத்து அடுத்த கட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும். மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்த வேண்டாம், நிற்க வேண்டாம், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் செல்ஃபி எடுக்க முயல்வதை தடுக்க வெண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு மழைக்காலங்களில் ஊட்டி எப்படி இருக்கும் என்று தெரியும்.
ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு நிலைமையின் வீரியம் தெரியாது. மலையேற்றத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சில சுற்றுலா பயணிகள் யாருக்கும் தெரியாமல் மலையேற முயற்சிப்பார்கள். அப்படி எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று கூறியுள்ளார்.
முன்னதாக விடுக்கப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில், "தென்மேற்கு பருவமழை, கேரளாவில் இன்று (24-05-2025) துவங்கிஉள்ளது. தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை இன்று அநேக பகுதிகளில் பரவியுள்ளது.
நேற்று (23-05-2025) தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி,இன்று காலை (24-05-2025) 0530 மணி அளவில், மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காலை 08.30 மணி அளவில், அதே பகுதிகளில், ரத்னகிரிக்கு வடக்கு-வடமேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிலவுகிறது. இது மெதுவாக கிழக்கு திசையில் நகர்ந்து, தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில், இன்று நண்பகல் ரத்னகிரி மற்றும் தபோலிக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும்.
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். எனவே நாளை மற்றும் நாளை மறுநாள்(மே.25,26) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மே.27ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மே.28 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே.29 மற்றும் 30ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications