மேல்மலையனூரில் 8ஆம் நூற்றாண்டின் பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு
திருவண்ணாமலை: மேல்மலையனூர் அருகே 8 ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் காலத்திய சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மேல்மலையனூர் பகுதியில் உள்ள ஊர்களில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது கிழவம்பூண்டி கிராமத்தில் உள்ள மல்லியம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.
அவ்வூரின் வடக்கு எல்லையில் பெரிய பாறையின் கீழ் அமைந்துள்ள இக்கோவிலைச் சமீபத்தில் சீரமைத்துப் புனரமைப்பு செய்து சிறப்பாக வழிபாடு செய்து வருவதாக அவ்வூர் மக்கள் தெரிவித்தனர். சுமார் 5 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட பலகை கல்லில் மல்லியம்மன் என்ற பெயரில் உள்ள மூலவர் சிற்பம் எட்டு கரங்களுடன் புடைப்பு சிற்பமாகக் காட்சி தருகிறது.

மகுடம் அலங்கரிக்க
தலையை கரண்ட மகுடம் அலங்கரிக்க , வட்ட முகத்தில், இருகாதுகளிலும் மகர குண்டலமும், கழுத்தில் புலிப் பல் தாலியும் மார்பு கச்சையும் அணிந்து அனைத்து தோள் மற்றும் கைகளிலும் வளைகள் அணிந்து இடை ஆடை தொடைவரை நீண்டு காட்சி தருகிறது.

மேல் வலது கரம்
தனது மேல் வலது கரத்தில் பிரயோக சக்கரமும் முறையே மற்ற வலது கரங்களில் வாள் , மான் கொம்பு , மணி ஏந்தியபடி உள்ளது. மேல் இடது கரம் சங்கு தாங்கியும் முறையே மற்ற கைகள் வில் , கேடயமும் ஏந்தி கீழ் இடது கரம் இடையின் மீது ஊரு முத்திரையிலும் காட்சி தருகிறது.

கால்களில் சிலம்பு
கால்களில் சிலம்பு அணிந்து எருமை தலையின் மீது நின்றவாரு காட்சி தரும் இக்கொற்றவையின் வலது புறம் நவகண்டம் தரும் நிலையிலும் , இடது புறம் வணங்கிய நிலையிலும் வீரர்களும் , கலைமானும் காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் தலைமீது கொடை காட்டப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.

சிற்ப அமைதி
அணிகலன்கள் மற்றும் சிற்ப அமைதியை வைத்து இச்சிற்பம் 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால கொற்றவையாகக் கருதலாம். மேலும் இவ்வூரை அடுத்து உள்ள மேல்நெமிலியில் அம்மச்சார் அம்மன் கோவிலில் பலகை கல்லில் புடைப்பு சிற்பமாகத் தவ்வையும் அதன் அருகே வயல்வெளியில் சிவலிங்கம் மற்றும் முருகர் சிற்பமும் காணப்படுவது குறிப்பிடத்தகுந்தது.

பருத்த இடை
தலையில் கரண்ட மகுடம் தரித்துப் பருத்த இடையுடன் அமர்ந்த கோலத்தில், வலது கை அருள்பாலிக்கும் அபய முத்திரையிலும் இடது கை தொங்கவிடப்பட்ட நிலையிலும் அழகுறத் தவ்வை வடிக்கப்பட்டுள்ளது. தவ்வையின் தலையருகே வலது புறம் காக்கை கொடியும் , இடது புறம் துடைப்பமும் காட்டப்பட்டுள்ள நிலையில் தனது மகன் மாந்தன் மற்றும் மகள் மாந்தியுடன் காட்சி தருகிறது. பல்லவர் கலைபாணியில் உள்ள இச்சிற்பம் 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இதவ்வையின் அருகே 2 அடி பலகை கல்லில் 8 பேர் வரிசையாக நின்ற கோலத்தில் ஒரு சிற்பம் உள்ளது. நடுவில் ஆணும் இருபுறம் பெண்களும் உள்ள இச்சிற்பம் என்ன சிற்பம் என்று அறிய முடியவில்லை.

வயல்வெளி
இக்கோவிலுக்கு அருகே உள்ள வயல்வெளியில் 3 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட பலகை கல்லில் தாமரை மலர் மீது பத்மாசன கோலத்தில் அமர்ந்த நிலையில் முருகர் சிற்பம் காணப்படுகிறது. தலையைத் தடித்த ஜடாபாரம் அலங்கரிக்க , வட்ட முகத்தில் தடித்த உதடுகளும் , பெரிய விழிகளுடன் இருகாதுகளிலும் பத்ர குண்டலமும் கழுத்தில் சவடி போன்ற ஆபரணமும் தரித்து வலது கையை நெஞ்சருகே வைத்து அக்கமாலையை பிடித்தவாறு தனது இடது கையை தொடை மீது வைத்து கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

முருகர் சிற்பம்
இது போன்ற முருகர் சிற்பம் காண்பது மிக அரிது. இச்சிலை அமைப்பு மற்றும் அணிகலன்கள் வைத்து இம்முருகர் 8 ம் நூற்றாண்டு சிற்பமாகக் கருதலாம். இதன் மூலம் கி.பி 8ம் நூற்றாண்டு வாக்கில் பல்லவர் ஆட்சியின் கீழ் இப்பகுதி செழிப்புற்று இருந்தமையை அறிய முடிகிறது.












Click it and Unblock the Notifications