பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்!
பாரிஸ்: ஜூன், ஜூலை மாதங்களில் மட்டுமே தீவிரமடையும் கோடை வெயிலின் தாக்கம், இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே ஐரோப்பிய நாடுகளை நிலைகுலையச் செய்துள்ளது. பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவுக்கு வெப்ப அலை வீசி வருவதால், பிரான்சில் மட்டும் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதியில் இருந்து வீசும் வெப்பக் காற்று, வளிமண்டலத்தின் உயர் அழுத்த வளையத்திற்குள் சிக்கிக் கொண்டதால் உருவாகியுள்ள 'ஹீட் டோம்' தான் இந்த அதீத வெப்பத்திற்கு காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தேசிய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மே 25-ஆம் தேதி பிரான்ஸ் வரலாற்றிலேயே மிக வெப்பமான நாளாக பதிவாகியுள்ளது.

அன்றைய தினம் நாட்டின் சராசரி வெப்பநிலை 24.4 டிகிரி செல்சியஸை கடந்தது. இது 1944ஆம் ஆண்டின் சாதனையை முறியடித்துள்ளது. தென்மேற்கு பிரான்சில் சில இடங்களில் வெப்பநிலை 37.1 டிகிரி செல்சியஸ் வரை எட்டியது. இந்த அதீத வெப்பத்தின் காரணமாக பிரான்சில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஏரிகள், ஆறுகள் மற்றும் கடற்கரைகளில் குளித்தவர்களில் 5 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். கோடைக்காலம் இன்னும் முழுமையாகத் தொடங்காததால் பெரும்பாலான கடற்கரைகளில் உயிர்காப்பாளர்கள் பணியில் இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
பாரிஸ் மற்றும் லியோன் நகரங்களில் நடைபெற்ற ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இருவர், அதீத உடல் வெப்பம் மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், மே மாதத்தில் இந்த அளவுக்கு வெயில் அடிப்பது சாதாரணமானது அல்ல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பருவநிலை மாற்றத்தின் காரணமாக இதுதான் இனி பிரான்சின் இயல்பான வானிலையாக மாறப்போகிறது என்று நினைத்தால் பயமாக இருக்கிறது என்று கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் பிரான்சின் மேற்கு மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதி வரை வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் இதயம், சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் மதிய நேரங்களில் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications