பீட்சா மாஸ்டருக்கு பின் "பாட்ஷா" பிளாஷ்பேக்.. பலர் துடிக்க துடிக்க கொலை! எஸ்கேப் பிளானில் ட்விஸ்ட்
இத்தாலியை அலற வைத்த மாபியா கேங் தலைவர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரிஸ்: இத்தாலி நாட்டையே அலற வைத்த பிரபல மாபியா கேங் தலைவர் ஒருவர், பிரான்ஸ் நாட்டில் பீட்சா மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். 16 ஆண்டுகள் போலீசார் கண்ணில் மண்ணை தூவிய அவர், இப்போது சிக்கியுள்ளார்.
ரஜினி நடித்த பாட்ஷா திரைப்படத்தை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அதில் மும்பையில் அதிர வைத்த தாதா அனைத்தையும் விட்டுவிட்டு சாதாரண ஆட்டோ டிரைவராக வாழ்ந்து கொண்டிருப்பார்..
பாட்ஷா தொடங்கிப் பல படத்திலும் இதுபோன்ற காட்சிகள் இருக்கும். ரவுடிசத்தை விட்டுவிட்டு சாதாரண தொழில் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், இங்கு ரியல் வாழ்க்கையிலேயே இது போன்ற ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது.

இத்தாலி மாபியா
இத்தாலி நாட்டில் பல்வேறு கொடூர மாபியா குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அப்படி அங்குச் செயல்பட்டு வந்த மோசமான மாபியா குழு ஒன்றின் தலைவன் எட்கார்டோ கிரேக்கோ, 63 வயதான இந்த நபர் தெற்கு இத்தாலியின் கலாப்ரியாவில் உள்ள ஒரு சக்திவாய்ந்த மாபியா அமைப்பான நாங்க்கேட்ட என்ற அமைப்பில் இருந்துள்ளார். இத்தாலி நாட்டையே மிரள வைக்கும் வகையில் இவர் பல கொலைகளைச் செய்துள்ளார்.

கொடூர கொலை
இவர் இரண்டு சகோதரர்களை மீன் கிடங்கு ஒன்றில் இரும்பு கம்பியைக் கொண்டு அடித்தே கொலை செய்துள்ளார். மேலும், அவர்கள் உடலையும் ஆசிட் கலவையைக் கொண்டு கரைத்துள்ளார். இந்தக் கொடூர கொலை செய்த அவர் மீது 1990களில் நடந்த பல்வேறு கொலை முயற்சி சம்பவங்களிலும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கொடூர இரட்டை கொலை மற்றும் கொலை முயற்சி குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பிரான்ஸிற்கு எஸ்கேப்
இருப்பினும், இத்தாலி நாட்டில் இருந்து எஸ்கேப் ஆன அவர் எப்படியோ பிரான்ஸ் நாட்டிற்கு வந்துள்ளார். எப்படி நமது தமிழ் சினிமாவில் ஊர் விட்டு ஊர் வந்து சாதுவாக மாறிவிடுவார்களோ.. அதேபோல இவரும் பிரான்ஸ் வந்தவுடன் ரவுடித்தனத்தை தூக்கி குப்பையில் போட்டுவிட்டார். தனது பெயரைப் பாலோ டிமிட்ரியோ என்று மாற்றிக் கொண்டுள்ளார். மேலும், சமையல் கலைஞராகத் தன்னை மாற்றிக் கொண்ட எட்கார்டோ கிரேக்கோ, அங்குள்ள பல்வேறு ஹோட்டல்களில் சமையல் கலைஞராக வேலை செய்துள்ளார்.

தனி ஹோட்டல்
அதில் தொழிலை கற்றுக் கொண்டு நிதியையும் சேகரித்த அவர் கடந்த 2021 பிரான்ஸில் கஃபே ரோசினி ரிஸ்டோரண்டே என்ற ஹோட்டலை திறந்துள்ளார். அங்குள்ள உள்ளூர் செய்தித் தாள்களில் இது குறித்த செய்திகளும் வெளியாகி இருந்தன. "தனது கனவுகளை அடைய புதிய ஹோட்டலை தொடங்கிய பாலோ டிமிட்ரியோ" என்ற தலைப்பில் அவர்கள் இந்த கடை குறித்த செய்திகளையும் வெளியிட்டுள்ளனர்.

பீட்சா மாஸ்டர்
தனக்கென தனி ஹோட்டலை திறந்த போதிலும், மாலை நேரங்களில் அவர் மற்றொரு ஹோட்டலில் பீட்சா மாஸ்டராகவும் தொடர்ந்து வேலை செய்துள்ளார். ஒரு காலத்தில் இத்தாலியை அலறவிட்ட இந்த எட்கார்டோ கிரேக்கோ இன்டர்போல் சார்பில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாகும். அப்படியிருக்கும் போது அவர் இத்தாலியில் இருந்து எஸ்கேப் ஆகி பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் புகுந்தார் என்று யாருக்கும் தெரியவில்லை. இது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

16 ஆண்டுகள்
இரு நாடுகளுக்கு மட்டுமின்றி இன்டர்போல் கண்ணிலும் மண்ணை தூவிய அவர் சுமார் 16 ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டில் இருந்துள்ளார். இத்தாலியின் பலேர்மோவில் உள்ள ஒரு சுகாதார கிளினிக்கில் பதுங்கியிருந்து மற்றொரு முக்கிய மாபியா கேங் தலைவரான மேட்டியோ மெசினா டெனாரோ கைது செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில், எட்கார்டோ கிரேக்கோவையும் அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

சிக்கியது எப்படி
இவர் எப்படி போலீசாரிடம் சிக்கினார் என்பதும் கூட சுவாரசியமான தகவல் தான். இவர் கஷ்டப்பட்டு ஹோட்டலை தொடங்கினாரே.. அதே ஹோட்டலால் தான் இவர் போலீசிரிடமும் சிக்கியுள்ளார். இவரது படத்துடன் உள்ளூர் செய்தித்தாள் வெளியிட்ட செய்தியை இவரது ஹோட்டலின் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை வைத்தே போலீசார் இவரை மோப்பம் பிடித்து கைது செய்துள்ளனர். பிரெஞ்சு நகரமான செயிண்ட்-எட்டியெனில் கைது செய்யப்பட்டதாக இன்டர்போல் கூறியது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications