பெயர் புதுசு.. கூட்டணி பழசு! புதிய பெயரில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதாக அமித்ஷா விமர்சனம்
பாட்னா: எதிர்க்கட்சிகள் இந்துக்களின் சனாதன தர்மத்தை எதிர்க்கிறார்கள் என்றும், அவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்கிற பெயரில் வராமல் புதிய பெயரில் மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் மிகுந்த சவாலானதாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்த அளவில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வாழ்வா சாவா போராட்டமாகும். காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத இந்த 10 ஆண்டுகளில் ஏராளமான மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர்.

சிலர் பாஜவிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர். அதேபோல பஞ்சாப், டெல்லி உள்ளாட்சி உள்ளிட்ட இடங்களில் தனது வாக்கு வங்கியை காங்கிரஸ் இழந்திருக்கிறது. இதற்கு எதிராக சண்டை செய்வது அவசியம். எனவே இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 26 கட்சிகளை இணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது.
இதே பாஜவை பொறுத்த அளவில் இந்த முறையும் பிரதமராக நரேந்திர மோடிதான் போட்டியிடுகிறார். இதில் அவர் வெற்றி பெற்றால் நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் எனும் பெருமையை பெறுவார். மேலும் 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா வருகிறது. எனவே இதை சிறப்பாக கொண்டாட பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருப்பது அவசியம். மட்டுமல்லாது பாஜக பலவீனமாக உள்ள தென் மாநிலங்களில் கட்சியை மேலும் வலுப்படுத்த பாஜகவுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
எனவே பாஜக, 'லோக் சபா பிரவஸ்' எனும் திட்டத்தின் கீழ் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று பீகாரின் மதுபானி மாவட்டத்தில் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அமித்ஷா, எதிர்க்கட்சிகள் இந்துக்களின் சனாதன தர்மத்தை எதிர்க்கிறார்கள் என்றும், அவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்கிற பெயரில் வராமல் புதிய பெயரில் மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள் எனவும் விமர்சித்துள்ளார். மேலும் அவர் பேசியதாவது,
"எதிர்க்கட்சியினர் இந்துக்களின் பண்டிகைக்கான விடுமுறையை ரத்து செய்தனர். அவர்கள் இந்து சனாதன தர்மத்தை வியாதிகளோடு ஒப்பிடுகிறார்கள். ஆனால் வேறு சிலரோடு சனாதன அணுகுமுறையை கடைபிடிக்கிறார்கள். சுருக்கமாக சொல்வதெனில் எதிர்க்கட்சியினர் ஒரு புதிய பெயரில் பழைய கூட்டணியை உருவாக்கியுள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி எனும் பெயரில் ஒரு கூட்டணி அமைத்து ஆட்சியிலிருந்த போது ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் செய்தார்கள்.
இந்த ஊழலுக்கு அப்போதைய ரயில்வே அமைச்சராக இருந்த பீகாரின் லல்லு பிரசாத் யாதவ் உதாரணம். அவர் பலகோடியில் ஊழல் செய்தார். எனவே பழைய பெயரில் வாக்கு கேட்டு வரமுடியாது என்பதால் அவர்கள் 'இந்தியா கூட்டணி' எனும் புதிய பெயரில் வாக்கு கேட்டு வருகின்றனர். இவர்கள் இந்துக்களின் புனித ராம்சரிதமானசை அவமானப்படுத்தியவர்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications