ஆளுநர் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு.. சபாநாயகர்கள் மாநாட்டில் இருந்து அப்பாவு வெளிநடப்பு
பாட்னா: பீகாரில் சட்டமன்ற தலைவர்களுக்கான (சபாநாயகர்கள்) மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் குறித்து விமர்சித்து பேசியிருந்தார்.
அவரது பேச்சில் குறிக்கிட்ட மாநிலங்களவை துணை தலைவர், தொடர்ந்து பேச அனுமதி மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அப்பாவு மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற சட்டமன்ற சபாநாயகர்களுக்கான மாநாட்டில் தமிழ்நாட்டின் சட்டமன்ற தலைவர் அப்பாவு பங்கேற்றிருந்தார். மாநாட்டில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எவ்வாறு வலுவாக்குவது என்பது குறித்து விவாதம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய அப்பாவு ஆளுநர் குறித்து விமர்சனங்களை அடுக்கினார்.
அதாவது, "அரசமைப்புக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்; அரசமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்படாத பல விஷயங்களில் ஆளுநர் தலையிடுகிறார் அரசமைப்பு விதிகளை தமிழக ஆளுநர் கேலிக்கூத்தாக்கி வருகிறார். தமிழக ஆளுநரின் தலையீடு கவலை அளிப்பதாக உள்ளது" என்று பேசியிருந்தார். இவர் பேசும்போது மாநிலங்களவை துணை தலைவர் தலையீடு செய்து தொடர்ந்து பேச அனுமதி மறுத்திருக்கிறார். இதனையடுத்து அப்பாவு மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்.
அப்பாவுவின் கருத்துக்கள் அனைத்தும் அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது அரசியல் களத்தில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் என்ன பஞ்சாயத்து?:
தமிழ்நாடு அரசு திராவிட மாடல் வழியில் செயல்பட்டு வருகிறது. ஆனால், ஆளுநர் திராவிட மாடல் என்கிற கருத்தியலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் தன்னார்வலர்களைச் சிறப்பிக்கும் நிகழ்ச்சிக்கு ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்திருந்தது. அதில் பேசிய ஆளுநர் ரவி, "திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்" என்று விமர்சித்திருந்தார். அதனை தொடர்ந்து ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், "திராவிட மாடல் என்ற ஒன்று இல்லை. அது காலாவதியான கொள்கை" என்றும் கூறியிருந்தார்.
மேலும், "திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டது தவறு" என்றும், "திராவிட இயக்கம், இந்திய சுதந்திர இயக்கத்திற்கு எதிரானது" என்றும் பேசியிருந்தார். இப்படி திராவிடம் குறித்து தொடர்ந்து விமர்சன கருத்துகளை தெரிவித்து வந்த அவர், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக சுமார் 12 மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன. மறுபுறம் வெள்ளை உடையில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருவள்ளுவரை, காவி உடையில் ஆளுநர் மாளிகையே வெளியிட்டு விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கெல்லாம் உச்சமாக, ஆண்டுதோறும் நடத்தப்படும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை வாசிக்காமலும், திராவிடம் உள்ளிட்ட வார்த்தைகளை விடுத்து வாசித்து வந்ததும் ஆளுநர் மீதான விமர்சனங்களை அதிகரித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications