பீகார்.. மண்டல வாரியாக எந்த கட்சி ஆதிக்கம்? இந்த அலையிலும், ஒரு மண்டலம் மட்டும் சரியாத ஆச்சரியம்!
பாட்னா: பீகாரில் நடைபெற்ற 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள், நவம்பர் 14, 2025 அன்று அறிவிக்கப்பட்டன. பாஜக, ஜேடியூ அடங்கிய NDA கூட்டணி 202 இடங்களை வென்று பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் பின்னணியில், 2020 தேர்தலை விட NDA அனைத்து 9 மண்டலங்களிலும் சமச்சீரான வலுவான முன்னேற்றம் காரணமாக அமைந்துள்ளது.
திருஹட் மண்டலம் (49 தொகுதிகள்) NDA-வின் மிகப்பெரிய வெற்றிக் களமாக அமைந்துள்ளது. 2020-ல் இங்கு 33 இடங்கள் மட்டுமே கிடைத்த NDA, 2025-ல் 45 இடங்கள் வரை பெற்றுள்ளது. மெகா கூட்டணியின் வலிமை 16-லிருந்து 4 இடங்களாக வீழ்ந்துள்ளது.

பாட்னா மண்டலம் (43 தொகுதிகள்) குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளது. 2020-ல் மெகா கூட்டணி இங்கு 29 இடங்கள் வென்ற நிலையில், 2025-ல் அதன் இடங்கள் வெறும் 5-ஆக குறைந்துள்ளன. NDA 37 இடங்கள் வரை கைப்பற்றியது.
லாலு ஏரியாவில் பாஜக கொடி
சரன் மண்டலம் (24 தொகுதிகள்), முன்னாள் முதலமைச்சர் லாலூ பிரசாத் யாதவின் சொந்த பகுதியாக இருந்த போதிலும், NDA-வின் ஆதிக்கம் தெளிவாக உள்ளது. 2020-ல் மெகா கூட்டணி 15 இடங்கள் வென்ற இந்த மண்டலத்தில், 2025-ல் NDA 20 இடங்கள் வரை பெற்றுள்ளது.
தர்பங்கா, பாகல்பூர், கோசி, முங்கேர் மண்டலங்களிலும் NDA தொடர்ந்து வலுவான செயல்பாட்டைக் காட்டியுள்ளது. குறிப்பாக, மிகச் சிறிய பாகல்பூர் மண்டலம் (12 தொகுதிகள்) NDA-வின் முழு ஆதிக்கம் - அனைத்து 12 இடங்களும் NDA வசம்.

மாற்றமில்லாத மண்டலம்
பூர்ணியா மண்டலம் (மொத்தம் 24 தொகுதிகள்) வித்தியாசமான வரைபடத்தை கொடுத்துள்ளது. இங்கு NDA 14, மெகா கூட்டணி 5, முஸ்லிம்கள் பெரும்பான்மையுள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் 5 இடங்களை பெற்றுள்ளது. கடந்த தேர்தலிலிருந்து இந்த மண்டலத்தில் மட்டும் இதில் பெரிய மாற்றம் இல்லை.கடந்த தேர்தலில் 12 தொகுதிகள் என்டியேவுக்கு என்றால் இந்த தேர்தலில் 14 அவ்வளவுதான். மெகா கூட்டணி கடந்த முறை 7 தொகுதிகளை வென்றிருந்தது. இது 4 மாவட்டங்கள் அடங்கிய மண்டலமாகும். இது பீகாரின் கிழக்கே, அதாவது மேற்கு வங்க மாநிலத்திற்கு அண்டை மண்டலமாகும்.
மகத் மண்டலம் (26 தொகுதிகள்) 2020-ல் மெகா கூட்டணிக்குச் சாதகமாக இருந்தது (20 இடங்கள்). ஆனால் 2025-ல் NDA 20 இடங்கள் வென்று, முழு மாற்றத்தையும் உருவாக்கியுள்ளது.
மொத்தத்தில், 2020-ல் NDA 125 இடங்கள், மெகா கூட்டணி 110 இடங்கள் மட்டுமே பெற்றிருந்த நிலையில், 2025-ல் NDA 202 இடங்கள் வரை வென்று, பீகாரில் தனது ஆட்சியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்களின் பின்னணியில், மக்களின் ஆசைகள், அரசின் சமீபத்திய மேம்பாட்டுத் திட்டங்களும், முக்கிய தலைவர்களின் (மோடி, அமித் ஷா) பிரச்சார வெற்றியும் முக்கிய பங்காற்றியுள்ளன.












Click it and Unblock the Notifications