பீகாருக்கு அடித்த ஜாக்பாட்.. தேர்தல் நெருங்கும் நிலையில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய அரசு
பாட்னா: பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வர இருக்கிறது. இந்நிலையில், அம்மாநிலத்திற்கு மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக நாளை 6 வழி மேம்பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். மட்டுமல்லாது தீபாவளி பண்டிகைக்காக பீகாருக்கு 12,000 ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இதன் தலைவர் நிதிஷ்குமார் முதலமைச்சராக இருக்கிறார். இக்கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

நாளை பீகார் செல்லும் பிரதமர் மோடி கங்கையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆறுவழிப் பாலத்தைத் திறந்து வைக்கவுள்ளார். பீகாரில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்தத் திறப்பு விழா முக்கியத்துவம் பெறுகிறது. 1.86 கி.மீ நீளமுள்ள இந்த 6 வழி அவுண்டா-சிமரியா திட்டப்பாலம், பாட்னா மாவட்டத்திலுள்ள மோகாமா பகுதியையும் பெகுசராய் பகுதியையும் இணைக்கும். இது வடக்கு மற்றும் தெற்கு பீகாருக்கு இடையே தடையற்ற போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும்.
சுமார் ₹1,871 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம், தேசிய நெடுஞ்சாலை-31 இல் அமைந்துள்ளது. இந்த முக்கிய வழித்தடம் பீகாரை உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்துடன் இணைக்கிறது. புதிய பாலம் திறக்கப்படுவதன் மூலம் 100 கி.மீ வரை பயண தூரம் குறையும். மேலும், பாட்னா மற்றும் முசாபர்பூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் தவிர்க்கப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது.
அதேபோல, பீகாரின் நவீன ரயில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், பூர்ணியா மற்றும் பாட்னா இடையே ஒரு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மட்டுமல்லாது வரவிருக்கும் தீபாவளி மற்றும் சத் பண்டிகைகளுக்கு கூட்ட நெரிசலை குறைக்க 12,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
டெல்லியில், பீகார் என்.டி.ஏ தலைவர்கள் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவைச் சந்தித்தனர். வரவிருக்கும் தீபாவளி மற்றும் சத் பண்டிகைகளுக்கான ரயில்வே ஏற்பாடுகளை அவர்கள் ஆய்வு செய்தனர். இக்கூட்டத்திற்குப் பிறகு, பண்டிகை கால நெரிசலின்போது பயணிகளுக்கு எந்த சிரமமும் ஏற்படாதவாறு 12,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று வைஷ்ணவ் அறிவித்தார்.
அக்டோபர் 13 முதல் 26 வரை பயணம் செய்து, நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 வரை திரும்பும் பயணிகளுக்கு, பயணக் கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அமைச்சர் விளக்கினார்.
கூடுதலாக, கயா-டெல்லி, சஹர்சா-அமிர்தசரஸ், சாப்ரா-டெல்லி மற்றும் முசாபர்பூர்-ஹைதராபாத் ஆகிய நான்கு அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கும், பூர்ணியா-பாட்னா வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைக்கும் ரயில்வே அனுமதி அளித்துள்ளது என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.
இம்மாநிலத்தில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாலும், விரைவில் சட்டப்பேரவை நடைபெற இருப்பதாலும் இந்த அறிவிப்புகள் வெளியாகியிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.












Click it and Unblock the Notifications