உனக்கு 15 நாள்... எனக்கு 15 நாள்... கணவரை பங்குபோட்ட மனைவிகள்! பீகார் கவுன்சிலிங் மையம் ஆலோசனை!
பாட்னா: பீகார் மாநிலத்தில் ஒருவர் 2 திருமணங்கள் செய்த நிலையில் மனைவிகள் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனையை போலீஸ் நிலையத்தின் ஆலோசனை மையம் விசித்திரமான முறையில் தீர்த்துள்ளது. அதாவது மாதத்தின் முதல் 15 நாள் முதல் மனைவியுடனும், 2வது 15 நாட்கள் 2வது மனைவியுடன் வாழ அந்த நபருக்கு அறிவுறுத்தியது. இதற்கு இருமனைவிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டால் வீடு, நிலம், தங்க நகைகள் உள்பட பல்வேறு பொருட்களை உரிய முறையில் பங்கு பிரித்து கொடுப்பதை நாம் கேள்விபட்டு இருக்கிறோம். நேரிலும் பார்த்து இருக்கிறோம்.
ஆனால் பீகார் மாநிலத்தில் 2 திருமணம் செய்த நபரை மனைவிகள் இருவரும் பங்கு பிரித்து கொள்ளும்படி ஆலோசனை மையம் ஒன்று ஆலோசனை வழங்கி பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளது. இந்த விசித்திர சம்பவம் குறித்த விபரம் வருமாறு:

2 திருமணம் செய்த நபர்
பீகார் மாநிலம் பவானிபூர் அருகே உள்ள கோடியாரியை சேர்ந்த ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இந்த தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்த நபருக்கு இன்னொரு பெண் மீது விருப்பம் ஏற்பட்டது. இதையடுத்து தனக்கு திருமணம் நடக்கவில்லை எனக்கூறி அந்த பெண்ணை அவர் காதல் வலையில் வீழ்த்தினார். மேலும் முதல் மனைவிக்கு தெரியாமல் அவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். 2வது மனைவிக்கு ஒரு குழந்தை உள்ளது.

2 மனைவிகளுடன் வாழ்க்கை
ஒவ்வொரு நாளும் இருவர் வீட்டிலும் அந்த நபர் குடும்பம் நடத்தி வந்தார். மேலும் 2 திருமண விவகாரத்தை வெளியே கசியாமல் நேர்த்தியாக சமாளித்து வந்தார். இதற்கிடையே தான் 2வது மனைவிக்கு தனது கணவர் மீது சந்தேகம் எழுந்தது. இதுபற்றி அவர் விசாரித்தார். அப்போது தான் தனது கணவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து இருப்பதும், அவர் தன்னை ஏமாற்றி 2வதாக திருமணம் செய்து கொண்டதையும் புரிந்து கொண்டார். இதேபோல் அந்த நபரின் முதல் மனைவிக்கும் அவரது 2வது திருமணம் குறித்த விஷயம் தெரியவந்தது.

விட்டுக்கொடுக்காத மனைவிகள்
இதனால் அவரது 2 மனைவிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் கணவரை விட்டுத்தர மறுப்பு தெரிவித்தனர். இதனால் இந்த பிரச்சனை பூர்னியா போலீஸ் நிலையத்தின் படி ஏறியது. மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதும் மனைவிகள் இருவரும் கணவரை விட்டு கொடுக்க முன்வரவில்லை.

ஆலோசனை மையம்
இதையடுத்து மூவருக்கும் போலீஸ் நிலைய குடும்ப நல ஆலோசனை மையம் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அந்த நபர் இருமனைவிகளையும் பிரிய மறுப்பு தெரிவித்தது போல், மனைவிகளும் கணவரை பிரிய மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆலோசகர்களும் செய்வதறியாது திகைத்தனர். இறுதியில் இந்த பிரச்சனைக்கு ஆலோசனை மையம் சார்பில் முடிவு கூறப்பட்டது.

15-15 நாள்
அதன்படி கணவர் இரு மனைவிகளுடன் தலா 15 நாட்கள் வாழ வேண்டும். மாதத்தின் முதல் பதினைந்து நாட்கள் முதல் மனைவியுடனும், அடுத்த 15 நாட்கள் 2வது மனைவியுடனும் அவர் வாழ அறிவுறுத்தப்பட்டது. மேலும் இருமனைவிகளையும் தனித்தனி வீட்டில் வைத்து கொள்வதோடு, இருவரின் குடும்ப செலவுகளையும் அவர் ஏற்று கொள்ள வேண்டும் என ஆலோசனை மையம் கூறியுள்ளது. இதற்கு இருமனைவிகளும் ஒப்புக்கொண்டனர். இந்த முடிவு தொடர்பாக பத்திரத்தில் மூவரும் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications