பீகாரில் பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெறும்.. காங்கிரஸால் தோற்கும் தேஜஸ்வி! Matrize எக்ஸிட் போல்
பாட்னா: பீகார் மாநிலத்தில் இந்த முறை இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. பீகார் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இப்போது எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இதற்கிடையே அங்கு என்டிஏ கூட்டணியே வெல்ல வாய்ப்பு இருப்பதாக Matrize எக்ஸிட் போல் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே பீகாரில் சட்டசபைத் தேர்தல் ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது.. அங்கு முதற்கட்டத்தில் 121 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டத்தில் 122 தொகுதிகளிலும் தேர்தல் நடந்து முடிந்தது. இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரியளவுக்கு அங்கு வாக்குப்பதிவு அங்குப் பதிவாகியுள்ளது. மக்கள் காலை முதல் மாலை வரையிலும் ஆர்வமாக வாக்களித்தனர்.

பீகார் தேர்தல்
பீகார் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 243 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதனால் பீகார் சட்டசபையில் ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சியை அமைக்கக் குறைந்தபட்சம் 122 இடங்களில் வெல்ல வேண்டும். இரு தரப்பிற்கும் இடையே போட்டி கடுமையாக இருப்பதால் பல தொகுதிகளில் சில நூறு வாக்குகளே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எக்ஸிட் போல்
இதற்கிடையே வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், அங்கு எக்ஸிட் போல் முடிவுகள் இன்று மாலை முதல் வெளியானது. இதற்கிடையே அங்கு 147 முதல் 167 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு என்று Matrize எக்ஸிட் போல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாஜக 65 முதல் 73 இடங்களிலும், நிதிஷ் கட்சி 67-75 இடங்களிலும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை பீகார் தேர்தலில் பாஜகவும், நிதிஷ் குமார் கட்சியும் சம அளவிலேயே தேர்தலில் போட்டியிட்டன. இரு கட்சிகளுமே தலா 101 இடங்களில் போட்டியிட்டன. அதில் 4ல் 3 பங்கு இடங்களில் இரு கட்சியுமே வெல்லும் என எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. இதனால் இரு கட்சிகளில் எது தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்பதிலும் சஸ்பென்ஸ் இருக்கிறது. அந்தளவுக்கு மக்கள் ஆதரவு இரு கட்சிகளுக்கும் கிடைக்கும் என Matrize எக்ஸிட் போல் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி
அதேபோல இந்த முறையும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 70 முதல் 90 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்று Matrize எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது. தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி 53 முதல் 58 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் 10 முதல் 12 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் அதிக சீட்களை கேட்டுப் பெற்றது. சுமார் 60 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும் காங்கிரஸால் வெறும் 12 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடியும் என Matrize எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. ராகுல் காந்தி வாக்கு திருட்டை முன்வைத்து பிரச்சாரம் செய்தாலும் கூட பீகார் மக்களிடையே அது ஒர்க் அவுட் ஆகவில்லை என்றே தெரிகிறது.
202 பீகார் தேர்தல் முடிவுகள்
கடந்த 2020 பீகார் தேர்தலைப் பொறுத்தவரை அங்கு என்டிஏ கூட்டணியே பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வென்றது. அங்கு பாஜக கூட்டணி 125 இடங்களில் வென்றிருந்தது. பாஜக 74 இடங்களில் வென்ற நிலையில், ஜேடியு கடந்த முறை 43 இடங்களில் மட்டுமே வென்றது. விஐபி கட்சி மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலா 4 இடங்களில் வென்றிருந்தது.
இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை அவர்கள் கடந்த முறை 110 இடங்களில் வென்றன. தேஜஸ்வியின் ஆர்ஜேடி அதிகபட்சமாக 75 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 19 இடங்களிலும், சிபிஐ (எம்-எல்) 12 இடங்களிலும் வென்றது. சிபிஐ மற்றும் சிபிஐ (எம்) தலா இரு டங்களில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications