Bihar Election: இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியிலும் என்டிஏ ஆதிக்கம்! சீமாஞ்சலில் கோட்டைவிட்ட ஆர்ஜேடி
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் இஸ்லாமியர்கள், யாதவ் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் மண்டலத்தில் என்டிஏ கூட்டணி முன்னிலை பெற்றிருப்பது இந்தியா கூட்டணி ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீமாஞ்சல் மண்டலத்தில் உள்ள 24 தொகுதிகளில் 10 தொகுதிகளிலும் என்டிஏ கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது.
பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பீகாரில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்த நிலையில், மொத்தமாக 66.91 சதவிகிதம் பேர் வாக்களித்தனர். 51 ஆண்டுகளுக்கு பின் பீகார் தேர்தல் வரலாற்றில் இவ்வளவு அதிக வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பீகார் மாநிலத்தைப் பொறுத்தவரை 6 மண்டலங்களாக பிரித்து பார்க்க முடியும். மிதிலாஞ்சல், கோசி, சரன், சீமாஞ்சல், ஷகாபத் ஆகிய மண்டலங்கள் இருக்கின்றன. இதில் சீமாஞ்சல் மண்டலத்தில் மொத்தமாக 24 தொகுதிகள் இருக்கின்றன. பூர்னியா, கதிகர், அராரியா, கிருஷ்ணாகன்ஜ் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் இஸ்லாமியர்கள், யாதவ் சமூக மக்கள் அதிகளவில் உள்ளனர்.
அதேபோல் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களும் அதிகளவில் வசிக்கின்றனர். இதே பகுதியில் தான் கடந்த தேர்தலில் அசாதுதீன் ஓவைசி 5 தொகுதிகளில் வென்றிருந்தார். ஆனால் இந்த தேர்தலில் ஓவைசிக்கு அதிகளவில் ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை விடவும் என்டிஏ கூட்டணி வேட்பாளர்கள் அதிகளவு முன்னிலை பெற்றுள்ளனர்.
சீமாஞ்சல் மண்டலத்தில் மொத்தமாக உள்ள 24 தொகுதிகளில் 10 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். 9 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இதன் மூலமாக மகளிர் வாக்குகள் அதிகளவில் என்டிஏ கூட்டணி பக்கம் சென்றிருப்பதாக கருதப்படுகிறது. இந்த பகுதிகளில் ஜன்சுராஜ் கட்சிக்கும் அதிக ஆதரவு இருப்பது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக மாறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications