தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம்.. சலுகைகள் என்ன? எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?
சென்னை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாரயணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லிக்கும் தமிழக அரசுக்கும் பாலமாக இருக்க கூடிய மிக முக்கியமான இந்த பொறுப்பில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் நியமிப்பதா? என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஆனால் இதனை அலங்கார பதவிதான் என்று தவெக கூறி வருகிறது. டெல்லி சிறப்பு பிரதிநிதியின் பணிகள் என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
* தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி கேபினட் அந்தஸ்து கொண்ட மிக உயரிய பொறுப்பு.
* மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீடுகள், புதிய திட்டங்களுக்கான அனுமதிகள் ஆகியவற்றை தொய்வின்றி பெற டெல்லியில் செயல்படும் ஒரு தொடர்பு பாலம் தான் இந்த டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி.

அமைச்சரவைக்கு இணையான சலுகைகள்
* சிறப்பு பிரதிநிதியின் பதவிக்காலம் ஓராண்டு ஆகும். அதற்கு பிறகு மாநில அரசு விரும்பினால் பதவியை நீட்டித்து வழங்க முடியும்.
* சென்னை தலைமைச் செயலகத்தில் தனி அறையோடு அமைச்சரவைக்கு இணையான சலுகைகள் வழங்கப்படும். தமிழகத்திலும், டெல்லியிலும் பயன்படுத்துவதற்காக தனி அரசு கார்கள் வழங்கப்படும்.
* வழக்கமாக முந்தைய திமுக, அதிமுக ஆட்சிக் காலத்தில் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளுக்கு இந்த பதவியானது வழங்கப்பட்டது.
* திமுக ஆட்சியில் ஏகேஎஸ் விஜயனும், அதிமுக ஆட்சியில் தம்பிதுரை, மைத்ரேயன், தளவாய் சுந்தரம், ஜக்கையன் போன்ற மூத்த தலைவர்களே டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்துள்ளனர்.
பேரிடர் நிவாரணக் கோரிக்கைகள்
* ஆனால் வரலாற்றிலேயே முதல் முறையாக அரசியல்வாதியாக அல்லாத, பிரெஸ்டிஜ் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓவும், ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளருமான கே வெங்கட நாராயணாவை தவெக அரசு நியமனம் செய்துள்ளது.
* அமைச்சருக்கு நிகரான பதவியில், தமிழர் அல்லாத கர்நாடகாவை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
* நேரடியாக முதல்வரின் கீழ் செயல்படும் அதிகாரம் கொண்ட இந்த பதவியின் மூலம் மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை நேரடியாக சந்திக்க முடியும்.
டெல்லியில் உள்ள இந்த அலுவலகம், தமிழ்நாடு தொடர்பான விவகாரங்களில் மத்திய அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. மேலும், நாடாளுமன்றத்தில் நடைபெறும் நடவடிக்கைகள் மற்றும் கொள்கை மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து, அவற்றுக்கு மாநில அரசு உரிய நேரத்தில் பதிலளிப்பதை உறுதி செய்கிறது.
நிதிக் குழு (Finance Commission) நிதி ஒதுக்கீடுகள், பேரிடர் நிவாரணக் கோரிக்கைகள், தொழில் திட்டங்களுக்கான அனுமதிகள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் நலன் சார்ந்த அனைத்து முக்கிய விவகாரங்களிலும், மத்திய அரசுடனான தொடர்புக்கான முதல் அதிகாரப்பூர்வ மையமாகவும் டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அலுவலகமே செயல்படுகிறது.
சர்ச்சை ஏன்?
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரான வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. வெங்கட நாராயணா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் இரு மாநிலங்களுக்கு இடையே நதி நீர் பிரச்சினை இருக்கும் நேரத்தில் கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு நெருக்கமாக அறியப்படுபவரான வெங்கட நாராயணாவை நியமிப்பது ஏற்கதக்கது இல்லை என எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டுகின்றன.
ஆனால், வெங்கட நாராயணா ஆந்திராவை சேர்ந்தவர் என்றும், அவர் கர்நாடகாவில் தொழில் செய்கிறார். டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி என்பது அலங்கார பதவிதான். பெரிய அளவில் கொள்கை முடிவு எடுக்கும் அதிகார பதவி இல்லை என்று தவெக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்து வருகிறார். இருந்தாலும் வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டதில் இருந்தே இந்த விவகாரம் ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பவன் ரெய்னாவை ஆலோசகராக நியமித்து வேகம் காட்டியது போல, இப்போது மத்திய அரசின் திட்டங்களையும், நிதியையும் தமிழ்நாட்டுக்கு விரைந்து கொண்டு வர முதல்வர் விஜய் இந்த யுக்தியை மேற்கொண்டுள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்..















Click it and Unblock the Notifications