கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? சட்டசபை.. மாநிலங்களவை! பீகார் அரசியலில் தனிப்பெருங் கட்சியாக பாஜக!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னப்பட்டு வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய சூழலில் பாஜக மட்டும் 90க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் நிலையில் பீகாரில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், சட்டசபை மட்டுமல்லாது இதன் மூலம் மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு அதிக எம்பிகள் கிடைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
243 இடங்களை கொண்ட பீகார் சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்தது. நவம்பர் 6ஆம் தேதி முதற்கட்ட தேர்தலும், நவம்பர் 11ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடந்தது. முதல் கட்ட தேர்தலில் 121 தொகுதிகளில் சுமார் 65 சதவீத வாக்குகள் பதிவாகின.

இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த 122 தொகுதிகளில் 67 சதவீத வாக்குகள் பரிவானது. இதுவரை பீகார் வரலாற்றில் பதிவாகாத வாக்கு எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 66.91% வாக்குகள் பதிவான நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
பீகார் தேர்தல் முடிவுகள்
பீகார் மாநிலம் முழுவதும் 46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தபால் ஓட்டுகளும் அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன. தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் பலி 243க்கும் தொகுதிகளிலும் முன்னிலை நிலவரம் வெளிவந்துள்ளது. அந்த முடிவுகளின் படி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் வகிக்கின்றன. 243 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வென்றாலே பீகாரில் ஆட்சியைப் பிடிக்க முடியும்.
என்.டி.ஏ முன்னிலை
ஆனால் அதனையும் தாண்டி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் உள்ள கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜக 90 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 80 தொகுதிகளிலும், எல்ஜெபி (ஆர்வி) 21 தொகுதிகளிலும், பிற கட்சிகள் இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்தியா கூட்டணி 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில், ஆர்ஜேடி 25க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், காங்கிரஸ் 4க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், சிபிஐ(எம்எல்) 6 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 1 தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.
தனிப்பெருங் கட்சியாக பாஜக
குறிப்பாக பிரசாந்த் கிஷீரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதில் கூட முன்னிலை வகிக்கவில்லை. சுயேட்சை மற்றும் பிற கட்சிகள் 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக் கோட்டை தாண்டி விட்டது என்று சொல்லலாம். கிட்டத்தட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை மெய் ஆக்குவது போலவே இந்த முடிவுகள் அமைந்துள்ளது. அதே நேரத்தில் கடும் போட்டி அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஜன்சுராஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கடும் பின்னடைவை சந்தித்துள்ளன.
இந்தியா கூட்டணி
அதே நேரத்தில் சில தொகுதிகளில் இந்தியா கூட்டணியின் வாக்கு வங்கியை இந்த சிறிய கட்சிகள் வெகுவாக பாதித்திருப்பதையும் கவனிக்க வேண்டும். இது ஒரு புறம் இருக்க பீகாரில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய தேர்தல் முன்னிலை விவரங்களின் படி பாஜக மட்டும் 90 தொகுதிகளுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மாநில கட்சிகளான ஜேடியு, ஆர்ஜேடி அதைவிட குறைந்த தொகுதிகளில் முன்னணி வகிப்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவை தாக்கம்
தற்போது பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மத்திய அரசுக்கு, நிதீஷ் குமார் ஆதரவளித்து வருகிறார். தற்போது பாஜக, நிதீஷ் குமாருக்கு பீகாரில் ஆதரவளித்தால் அது மத்தியில் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்கு பெரும் வாய்ப்பாக அமையும். மேலும் அடுத்து மாநிலங்களவை எம்பிக்கள் தேர்தல் நடைபெறும் போது, பாஜகவின் இந்த 90 எம்எல்ஏக்கள் மூலம் குறிப்பிடத்தகுந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளும் பாஜகவுக்கு கிடைக்கும். இதன் மூலம் சட்டமன்றம், நாடாளுமன்றம் என இரு பெரும் அவைகளில் பாஜக தனிப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications