வீணான தேர்தல் வியூகம்.. பீகாரில் வேகாத ’பிகே’ பருப்பு! ஜெயித்த குதிரை மேல் தான் சவாரியா? எதிர்காலம்?
பாட்னா: பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை விட, இந்தியாவில் 'மாஸ்டர் ஸ்ட்ராட்டஜிஸ்ட்" என காட்டிக்கொண்ட பிரசாந்த் கிஷோரின் படுதோல்வி தான் பேசுபொருளாக மாறி இருக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சி அமைக்க தான் உதவியதாக பிம்பத்தை ஏற்படுத்திய பிரசாந்த் கிஷோர், தனது சொந்த மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெற முடியாமல் போனது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. மொத்தமுள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை நிலவரங்கள் தெரியவந்துள்ளது. ஆளும் என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உள்ளது.

ஆட்சியமைக்க தேவையான 122 தொகுதிகளுக்கும் மேலாக அதாவது 190 தொகுதிகளில் பாஜக ஜேடியூ கூட்டணி முன்னணி வகிக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்தித்திருக்கிறது. கிட்டத்தட்ட 40 தொகுதிகளுக்கும் மேல்தான் அந்த கூட்டணி முன்னணியில் உள்ளது.
பீகார் தேர்தல் முடிவு
ஆனால் இந்திய அளவில் கவனிக்கப்பட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறாதது மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் கட்சி ஆரம்பத்தில் மூன்று தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது கவனிக்க வைத்தது. ஆனால் நேரம் செல்லச் செல்ல பாஜக கூட்டணியே முன்னணியில் இருந்தது. இந்தியாவின் நம்பர் ஒன் தேர்தல் வியூக நிபுணர் என தன்னை உருவகப்படுத்திக் கொண்ட பிரசாந்த் கிஷோருக்கு இது மிகப் பெரிய பின்னடைவு தான்.
பிரசாந்த் கிஷோர் தோல்வி
2014 காலகட்டத்தில் தான் பிரசாந்த் கிஷோரின் பெயர் அதிகமாக வெளிவர தொடங்கியது. 2014ல் குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்ட போது, பிரசாந்த் கிஷோரின் பிரச்சார வியூகங்கள் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. Modi's "Chai Pe Charcha" (மோடியுடன் தேனீர் விருந்து), 3டி மோடி பிரச்சாரம், மிஷன் 272+, உள்ளிட்டவை பிரசாந்த் கிஷோரை தேர்தல் சாணக்கியன் என அழைக்க வைத்தது. அந்த தேர்தலில் மோடியும் ஜெயித்த பின்னர் இந்திய அளவில் பேசுபொருளானார் பிரசாந்த் கிஷோர்.
ஜன் சுராஜ் தோல்வி
அதற்குப் பிறகு அவர் வேலை செய்த அனைத்து கட்சிகளும் வெற்றியை சந்தித்தது. 2015இல் பீகாரில் ஆர்ஜேடி-ஜேடியூ கூட்டணிக்காக வேலை பார்த்தார் பிரசாந்த் கிஷோர். அந்த தேர்தலில் லாலு பிரசாத் நிதீஷ்குமார் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கு பிறகு 2017ல் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் கேப்டன் அம்ரீந்தர் சிங், 2021 இல் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, 2019ல் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட கட்சிகளுக்காக வேலை பார்த்தார். 2021ல் திமுகவுக்காக பிரசாத் கிஷோர் வேலை பார்த்த நிலையில் அக்கட்சியும் வெற்றி பெற்றது.
பிகே அரசியல் பின்னடைவு
அந்த வகையில் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஜேடியூ, ஆர்ஜேடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளுக்கு வேலை பார்த்தார். அதே நேரத்தில் ஜெயிக்கிற குதிரை மேல் மட்டுமே சவாரி செய்கிறவர் பிரசாந்த் கிஷோர் என்ற விமர்சனமும் எழுந்தது. தற்போது பீகார் தேர்தலில் அது உண்மையாக இருக்கிறது. அடிப்படை கள அரசியலுக்கும், வியூக அரசியலுக்கும் இடையே பெரும் வேறுபாடு இருப்பதை இது உணர்த்தியுள்ளது.
பிரசாந்த் கிஷோர் விமர்சனம்
பீகாரைப் பொருத்தவரை ஜாதி அரசியல், மத அரசியல், அடிப்படை கட்டமைப்பு, சமூக ஆதரவு, பணபலம், வாக்கு வங்கி என பல காரணிகள் இருக்கிறது. ஆனால் ஆர்ஜேடி, ஜேடியூ, பாஜக போன்ற கட்சிகளுக்கு இணையான கட்டமைப்பு பிகேவின் கட்சிக்கு இல்லை. இதன் மூலம் எந்த கட்சியோடு சேர்ந்தாலும் என்னால் வெற்றி பெற வைக்க முடியும் என்ற பிகேவின் கூற்று முற்றிலும் பொய்யாகி இருக்கிறது. பிகே நல்ல வியூக நிபுணர் தான். ஆனால் மக்களை கவரும் தலைவராக அவரால் உருவெடுக்க முடியவில்லை.
தேர்தல் வியூகமா? அரசியலா?
இது ஒரு புறம் இருக்க பிகேவை தேர்தல் வியூக நிபுணரவாகவது யாராவது ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்வியும் இழந்திருக்கிறது. அதே நேரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பீகார் முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்ததன் மூலம் பி.கேவுக்கு இளம் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. மேலும் வருங்காலத்தில் கூடுதலாக பணியாற்றினால் நகர்ப்புற இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட ஒரு வாக்கு வங்கி அவருக்கு உருவாகும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications