நிதிஷ் உடனான பகை.. சட்டசபைத் தேர்தலில் தொடர்ந்து சரியும் செல்வாக்கு.. சாதிக்குமா லோக் ஜனசக்தி கட்சி?
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவடைந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவையாக உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் என்டிஏ கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் என்டிஏ கூட்டணி பெரும்பான்மை பெற சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் ஆதரவு கட்டாயமாக உள்ளது.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக சரி பாதியாக தலா 101 தொகுதிகளிலும், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 29 தொகுதிகளிலும் களமிறங்கியுள்ளன. லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வானுக்கும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமாருக்கும் உள்ளுக்குள் எப்போது ஒரு பகை இருந்து கொண்டே இருக்கிறது.

இந்த பகையை அறிந்து கொள்ள பீகார் அரசியலில் பின்னோக்கி சென்று பார்க்க வேண்டும். லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனர் ராம் விலாஸ் பாஸ்வான். 1969ஆம் ஆண்டு சம்யுக்தா சோஷலிச கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் ராம் விலாஸ் பாஸ்வான். அதன்பின் லோக் தளம், மதசார்பற்ற ஐக்கிய கட்சி உள்ளிட்டவற்றில் இருந்தார்.
லோக் ஜனசக்தி கட்சி உருவானது எப்படி?
இதனையடுத்து 2000ஆம் ஆண்டு ஜனதா தளம் கட்சி பிளவுபட்ட போது, லோக் ஜனசக்தி என்ற பெயரில் தனிக் கட்சியை ராம் விலாஸ் பாஸ்வான் தொடங்கினார். எப்படி பீகாரில் பிற்படுத்தப்பட்ட மக்களின் அடையாளமாக லாலுபிரசாத் யாதவ் மாறினாரோ, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் அடையாளமான நிதிஷ் குமார் மாறினாரோ, அதுபோல் பட்டியலின மக்களின் அடையாளமான இருந்தவர் ராம் விலாஸ் பாஸ்வான்.
கன்ஷிராம், மாயாவதி உள்ளிட்டோர் மிகப்பெரிய அளவில் உயர்வதற்கு முன்பாகவே ராம் விலாஸ் பாஸ்வான் இந்தி பேசும் மாநிலங்களில் பட்டியலின மக்களின் அடையாளமாக மாறி இருந்தார். பீகாரை ஆட்சி செய்த லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் ஆகியோருடன் சில முரண்பாடுகள் இருந்தாலும், நிதிஷ் குமார் உடனான முரண்பாடு ஒரு கட்டத்தில் நேரடி பகையாகவே மாறியது என்று சொல்லலாம்.
முதல் தேர்தல்
2004 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து லோக் ஜனசக்தி கட்சி போட்டியிட்டது. 4 தொகுதிகளில் போட்டியிட்ட லோக் ஜனசக்தி கட்சி 4 தொகுதிகளில் வென்றது. அதன் வாக்கு சதவிகிதம் 8.2 ஆக இருந்தது. இதன்பின் 2005ல் பீகாரில் நடந்த சட்டசபைத் தேர்தல் தான் லோக் ஜனசக்தி கட்சிக்கு மிகப்பெரிய சோதனையாக அமைந்தது.
மீண்டும் அதே கூட்டணியில் இருந்த லோக் ஜனசக்தி கட்சி 29 தொகுதிகளில் வென்றது. அந்த தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது இஸ்லாமியர் ஒருவர் முன்மொழியப்பட்டால், அவருக்கு ஆதரவு கொடுப்பேன் என்று அறிவித்தார். ஆனால் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த 22 எம்எல்ஏக்களை நிதிஷ் குமார் தன்பக்கம் இழுத்தார்.
நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட பகை
இதனால் சட்டசபை கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டது. மீண்டும் நடந்த தேர்தலில் நிதிஷ் குமார் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்க, லோக் ஜனசக்தி கட்சி 10 தொகுதிகளை மட்டுமே வென்றது. இதன்பின் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஆர்ஜேடி, லோக் ஜனசக்தி கட்சி மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. ஆனால் அது லோக் ஜனசக்தி கட்சிக்கு மிகப்பெரிய சோகமாக அமைந்தது.
அந்தத் தேர்தலில் 12 தொகுதிகளில் போட்டியிட்ட லோக் ஜனசக்தி கட்சி ஒன்றில் கூட வெல்லவில்லை. இதன்பின் 2010 சட்டசபைத் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி ஆர்ஜேடி கட்சியுடன் கூட்டணி அமைத்து 75 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதையடுத்து 2014ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்து லோக் ஜனசக்தி கட்சி போட்டியிட்டது.
சரிந்த லோக் ஜனசக்தி கட்சி செல்வாக்கு
அந்த தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி 7 தொகுதிகளில் போட்டியிட்டு 6ல் வென்றது. அதேபோல் 2015ஆம் ஆண்டு பீகார் சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் லோக் ஜனசக்தி கட்சி போட்டியிட்டு 40 தொகுதிகளில் 2ல் மட்டுமே வென்றது. என்னதான் என்டிஏ கூட்டணியில் இருந்தாலும், நிதிஷ் குமார் - ராம் விலாஸ் பாஸ்வான் இடையிலான பகை மட்டும் குறையவே இல்லை.
இதன்பின் ராம் விலாஸ் பாஸ்வான் மறைந்த சூழலில், புதிய தலைவராக சிராக் பாஸ்வான் வந்தார். அவர் பாஜக கூட்டணியில் இருந்தாலும், நிதிஷ் குமார் தலைமையின் கீழ் போட்டியிட விரும்பவில்லை. இதனால் 2020 சட்டசபைத் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி தனித்துப் போட்டியிட்டது. பாஜக போட்டியிட்ட 110 தொகுதிகளை தவிர்த்து, 133 தொகுதிகளில் லோக் ஜனசக்தி கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது.
பாஜக கூட்டணி
அந்த அளவிற்கு பாஜகவுக்கு விஸ்வாசமான இருந்து வருகிறார். ஆனால் அந்த தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி 1 தொகுதியில் மட்டுமே வென்றது. அந்த தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி வாக்கு சதவிகிதம் 5.66ஆக இருந்தது. இதனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 34 தொகுதிகளில் தோல்விக்கு லோக் ஜனசக்தி கட்சி காரணமாக அமைந்தது.
இதன்பின் பாஜக அறிவுரையின் பெயரில் நிதிஷ் குமார் தலைமையில் போட்டியிட சிராக் பாஸ்வான் இறங்கி வந்தார். இதனால் 5 தொகுதிகளில் போட்டியிட்டு 5ல் வென்றது. இதே ஃபார்முலாவை சட்டசபைத் தேர்தலுக்கும் பாஜக கொண்டு வந்துள்ளது. ஆனால் களத்தில் லோக் ஜனசக்தி கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையில் ஏராளமான மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்டுள்ள 101 தொகுதிகளில் லோக் ஜனசக்தி கட்சி ஆதரவு இருக்குமா என்ற கேள்விக்கு பாஜகவிற்கு பலமாக உள்ளது. அதேபோல் லோக் ஜனசக்தி கட்சி போட்டியிட்டுள்ள 29 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு இருக்குமா என்ற சந்தேகமும் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை லோக் ஜனசக்தி கட்சி பெற்றாலும், சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரிய சோதனைகளை சந்தித்து வருகிறது. இம்முறை அது மாறுமா என்பதை இதனை இன்னும் சற்று நேரத்தில் அறியலாம்.












Click it and Unblock the Notifications