நிதிஷ்குமாருக்கு இதுதான் கடைசி எலெக்ஷன்! பீகார் தேர்தலில் நடக்கும்.. 5 முக்கிய மாற்றங்கள்!
பாட்னா: பீகாரின் முதலமைச்சராக 20 ஆண்டுகளாக நிதிஷ்குமார் தொடர்கிறார். இந்த தேர்தலிலும் அவர் முதல்வர் வேட்பாளராகத்தான் களமிறங்கியிருக்கிறார். ஆனால், இந்த தேர்தலுடன் அவர் அரசியலிலிருந்து விலகலாம் என்று பேசப்படுகிறது. மட்டுமல்லாது பீகாரில் 5 முக்கியமான மாற்றங்கள் நடக்க இருக்கின்றன.
ராஷ்டிரிய ஜனதா தள (RJD) தலைவர் லாலு பிரசாத் ஏற்கனவே தனது மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவிடம் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார். 2020 தேர்தலில் தனது கட்சியின் ஆச்சரியமிக்கச் செயல்திறனை மேம்படுத்தி, முதல்வர் பதவியைக் கைப்பற்ற தேஜஸ்வி தீவிரமாக முயன்றார்.

நிதிஷ்குமாரின் உடல்நிலை
74 வயதான நிதிஷ்குமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், நிர்வாகம் அவர் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், ஏழு முதல் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் குழுதான் மாநிலத்தை ஆட்சி செய்கிறது என்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைமையிலான மகாபந்தன் குற்றம் சாட்டி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி, முதலமைச்சர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு தனது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி வருகிறார்.
மகாபந்தன் கூட்டணியில் உள்ள விகாஷீல் இன்சான் கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி, இந்த விவகாரம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "நிதிஷ் குமார் ஓய்வெடுக்க வேண்டும். அவர் தனது பணியை முடித்துவிட்டார்" என்று கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை ஐக்கிய ஜனதா தளம் தொடர்ந்து மறுத்து வருகிறது. தேர்தல் நிதிஷின் தலைமையில் எதிர்கொண்டு வருகிறோம் என்று பாஜக கூறினாலும், தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து மௌனம் காக்கிறது.
அள்ளி வீசப்பட்ட சலுகைகள்
தொடர்ந்து இரண்டு முறை முதல்வராக இருந்தாலே, அந்த முதல்வருக்கு எதிரான மனநிலை இயல்பாக மக்களிடம் உருவாகியிருக்கும். அப்படி பார்த்தால் நிதிஷ்குமார் 19 ஆண்டுகளுக்கும் மேல் பீகார் முதல்வராக தொடர்கிறார். எனவே ஆட்சிக்கு எதிரான மனநிலையைச் சமாளிக்க, வாக்காளர்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி வழங்கியுள்ளது. இதுவரை, 1.21 கோடி பெண்களுக்கு தொழில் தொடங்க தலா ₹10,000 வழங்கப்பட்டுள்ளது. மேலும், நடத்தை விதிகள் ஏற்கனவே உள்ள திட்டங்களுக்குப் பொருந்தாததால், முதலமைச்சர் மஹிளா ரோஜ்கர் திட்டத்தின் கீழ் மேலும் பல நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளன.
மாநிலம் முழுவதும் 1.89 கோடி குடும்பங்களுக்கு 125 மெகாவாட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. மேலும், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் மாதம் ₹400-லிருந்து ₹1,100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜீவிகா, அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கான கெளரவ ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 18 முதல் 25 வயதுக்குட்பட்ட வேலையில்லாத இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ₹1,000 உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் ஆட்சியை காப்பாற்றும் என்று சொல்லப்படுகிறது.
வாக்குத் திருட்டா அல்லது ஊடுருவலா?
மறுபுறம் தேர்தலின் இறுதி கட்டத்தில் அறிவிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்த இயக்கத்தை, மோடி அரசின் வாக்குத் திருட்டு என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி தலைமையிலான வாக்காளர் உரிமை யாத்திரை பீகாரில் பரவலான ஆதரவை பெற்றிருந்தது. இந்த ஆதரவு மகாபந்தன் கூட்டணிக்கு வாக்குகளாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஊடுருவல்காரர்கள் எனும் விமர்சனத்தை பாஜக முன்னெடுத்துள்ளது. அதாவது பீகார் மாநிலம், வங்கதேசத்துடன் எல்லையை பகிர்ந்துக்கொண்டிருக்கிறது. இந்த எல்லை பகிர்வு காரணமாக, அந்நாட்டிலிருந்து பலரும் பீகாருக்கு ஊடுருவியுள்ளார்கள், அவர்களை அப்புறப்படுத்தவே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறி வருகிறது.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் இரண்டு விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஒன்று, நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மகாபந்தன் கூட்டணி கூறியது போல் பரவலாகவோ அல்லது சிறுபான்மையினருக்கு எதிராகவோ இல்லை. இரண்டாவது, தேர்தல் ஆணையம் எத்தனை ஊடுருவல்காரர்களை நீக்கியது என்பதையும் வெளியிடவில்லை. உண்மையில், பெரும்பாலான நீக்கங்களுக்கான காரணங்கள் மரணம், நகல் பதிவு அல்லது வேறு இடத்திற்கு மாறியது ஆகியவைதான்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முகமாக மோடி
எனவே வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை பற்றி பேச இரு தரப்புக்கும் வலுவான பாயிண்ட்கள் இல்லை. எனவே வெற்றிக்கா பாஜக, பிரதமர் மோடியின் முகத்தை முன்னிறுத்தியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரச்சாரத்தின் அறிவிக்கப்பட்ட முகம் நிதிஷ் குமார் என்றாலும், முதலமைச்சரின் பலவீனமான உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியின் பிரபலத்தன்மையைத்தான் கூட்டணி நம்பியுள்ளது. ராகுல் காந்தி காங்கிரஸ் பிரச்சாரப் பொறுப்பை ஏற்றிருப்பதால், நிதிஷ்குமாரை நிறுத்துவதற்கு பதில், மோடியை பாஜக முன்னிறுத்தியுள்ளது.
புதியதாக எண்ட்ரி கொடுக்கும் பிரசாந்த் கிஷோர்
அரசியல் வியூக நிபுணராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள பிரசாந்த் கிஷோர், தனது ஜன சுராஜ் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடும் என்றும், தானும் போட்டியிடுவதாகவும் கூறியிருக்கிறார். கடந்த சில நாட்களாக, பா.ஜ.க-வின் உயர்மட்டத் தலைவர்களுக்கு எதிராக அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள், மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.
பீகாரின் ஜாதி அடிப்படையிலான அரசியலால் சலிப்படைந்த பலருக்கு, இடம்பெயர்வு மற்றும் வேலையின்மை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன், கல்வி உட்பட நல்லாட்சியையும் வழங்கும் ஒரு அரசாங்கத்தை தனது கட்சி வழிநடத்தும் என்ற கிஷோரின் செய்தி புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அள்ளி வீசும் சலுகைகளுக்கு காரணம், பீகாரின் ஆளும் கட்சிகள் அதன் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதுதான். ஆனால் நாங்கள் எல்லாவற்றையும் மாற்றுவோம் என கிஷோர் முழங்கி வருகிறார்.
இந்த விஷயங்கள் எல்லாம் பீகார் தேர்தலில் கவனம் பெற்றிருக்கின்றன. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது நவ.14ம் தேதி தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications