முக்கியமான பணியில் இருக்கும் போலீசார் செல்போன் பயன்படுத்த அதிரடி தடை.. எங்க தெரியுமா?
பாட்னா: பீகார் மாநிலத்தில் முக்கியமான பணியில் ஈடுபட்டு இருக்கும் போலீசார் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் முக்கியமான பணியில் ஈடுபட்டு இருக்கும் போலீசார் செல்போனில் கேம் விளையாடுவது, வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாக உயர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

பீகார் அதிரடி
இந்த நிலையில் முக்கியமான பணியில் இருக்கும் போலீசார் செல்போன்கள், சமூக வலைத்தளங்களை பயன்படுத்த கூடாது என்று பீகார் அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த மாநில போலீஸ் டிஜிபி எஸ்.கே.சிங்கால் மாநிலத்தின் அனைத்து மூத்த போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவு கடிதம் அனுப்பி உள்ளார்.

தொடர் புகார்கள்
டிஜிபி எஸ்.கே.சிங்கால் அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது;- காவல்துறையினர் எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கி இருப்பது அல்லது சமூக ஊடகங்களில் பிஸியாக இருப்பது கடமையை பாதிக்கிறது. குறிப்பாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருக்கும் காவலர்கள், வி.ஐ.பி வருகையின்போது பணியில் இருக்கும் காவலர்கள் பலர் ஸ்மார்ட்போன்களில் விளையாடுவதாகவும் அல்லது ஒருவருக்கொருவர் சாட் செய்வதையும் முதற்கடமையாக கொண்டுள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்துளளன.

செல்போன் பயன்படுத்தக் கூடாது
எனவே இனிமேல் போக்குவரத்து அல்லது வி.ஐ.பி / வி.வி.ஐ.பி வருகையின்போது பணியில் இருக்கும் காவலர்கள் செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது. மின்னணு சாதனங்களை பயன்படுத்துதல், சமூக ஊடகங்களை பயன்படுத்த கூடாது. இந்த உத்தரவை மீறியதாகக் கண்டறியப்பட்ட போலீஸ் அதிகாரிகள் அல்லது பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்
காவல்துறையினர் கடமையில் இருக்கும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் மக்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று டிஜிபி எஸ்.கே.சிங்கால் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து பணி அல்லது வி.ஐ.பி வருகையின்போது கூட்டத்தை சமாளிக்க நிறுத்தப்பட்டுள்ள காவல்துறையினர் தங்கள் செல்போன்களை கடமையில் இருக்கும் மூத்த அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று 2019-ல் ராஜஸ்தான் அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications