"அந்த ஜாதி பையனுடன் காதல் கேட்குதா?" மகளை கொன்று பாத்ரூமில் போட்ட தந்தை! பீகாரில் பகீர்
பாட்னா: பீகார் மாநிலத்தில் காதலித்த நபருடன் மகள் வீட்டை விட்டு ஓடியதால் ஆத்திரமடைந்த தந்தை அவரை கொலை செய்து பாத்ரூமில் அடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்க்கு சந்தேகம் எழுந்து போலீஸில் புகார் அளித்ததால் தந்தை கைது செய்யப்பட்டார்.

பீகார் மாநிலம், சமாஸ்திபூரில் வசித்து வருபவர் முகேஷ் சிங். இவரது மகள் சாக்ஷி (25). முகேஷ் சிங்கின் வீட்டருகே வசித்து வந்த இளைஞரும், சாக்ஷியும் ஒன்றாக கல்லூரியில் படித்து வந்தனர்.
இந்த நிலையில் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த மாதம் 4 ஆம் தேதி சாக்ஷி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் டெல்லிக்கு சென்றதாக தெரிகிறது.
வீடு எடுத்து வசித்தவர்கள்
அங்கு இருவரும் தனியே வசித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தனது மகள் டெல்லியில் இருக்கும் விவரம் தந்தை முகேஷ் சிங்கிற்கு தெரியவந்தது. இதையடுத்து கடும் ஆத்திரத்துடன் மகளை தேடி சென்றார்.
பாசமழை
அங்கு தனது மகளை பார்த்ததும் பாச மழை பொழிந்தார். மேலும் மகளே நம்பும் அளவுக்கு அத்தனை நடிப்பு நடித்தார். தன்னுடன் வீட்டிற்கு வந்துவிட்டால் சொந்த பந்தங்களிடம் பேசி திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை கூறினாராம்.
கோர முகம்
இதை நம்பிய அந்த பெண் தனது தந்தையுடன் வீட்டிற்கு சென்றார். அங்கு போனதும்தான் அவருடைய கோர முகம் மகளுக்கு தெரிந்தது. வீட்டில் மகள் காலை எடுத்து வைத்ததுமே ருத்ரதாண்டவம் ஆடினார் முகேஷ் சிங்.
மாற்று ஜாதி
"மாற்று சாதிக்கார பையனுடன் காதலா, அவனுடன் ஓடி போவியா" என கேட்டு அந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அந்த பையனை மறந்துவிடுமாறு மகளை மிரட்டினார். இதற்கு மகள் மறுப்பு தெரிவித்து, டெல்லியில் தன்னிடம் பாசமாக பேசிவிட்டு இங்கு வந்து இப்படி செய்கிறாரே என நியாயம் கேட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த தந்தை
இதனால் மேலும் ஆத்திரமடைந்த முகேஷ் சிங், மகள் என்றும் பாராமல் அவரை கடந்த 7ஆம் தேதி கொலை செய்தாராம். இதையடுத்து மகளின் உடலை பாத்ரூமில் பூட்டி வைத்ததாக தெரிகிறது. பிறகு எதுவும் தெரியாதவர் போல இருந்தார்.
பொய் சொன்ன தந்தை
முகேஷின் மனைவி வீட்டுக்கு வந்ததும் மகள் எங்கே என கேட்ட போது, "நான் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் என் பேச்சை கேட்காமல் அந்த நபருடன் மீண்டும் ஓடி போய்விட்டாள்" என நா கூசாமல் பொய் பேசினாராம்.
மனைவிக்கு சந்தேகம்
ஆனாலும் முகேஷின் மனைவிக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் பாத்ரூமில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து போலீஸார் அந்த பாத்ரூமுக்கு சென்ற போது எலி செத்த நாற்றம் சார், அது இது என முகேஷ் சிங் சமாதானம் செய்துள்ளார்.
போலீஸுக்கு அதிர்ச்சி
ஆனாலும் அதை போலீஸார் நம்பவில்லை, "நீங்கள் சாவியை கொடுங்கள், அது எலியா என்ன என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என கேட்டு சாவியை வாங்கி கதவை திறந்த போதுதான் சாக்ஷி அங்கு சடலமாக கிடந்தது தெரியவந்தது.
மகளை கொன்ற தந்தை
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், தனது மகளை தானே கொலை செய்ததை முகேஷ் சிங் ஒப்புக் கொண்டார். மேலும் மகளை கொன்றுவிட்டு தனது மகளின் காதலனையும் கொல்ல அவரை தேடி சென்றாராம். அங்கு அவர் இல்லாததால் திரும்பி வந்துள்ளார். இதையடுத்து முகேஷ் சிங்கை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications