7 தலைமுறைக்குப் பின் பெண்குழந்தை.. பிறந்தநாளுக்கு நிலாவில் இடம் வாங்கி தந்த பெற்றோர்!
தனது மகளின் பத்தாவது பிறந்தநாளுக்கு நிலாவில் இடம் வாங்கிப் பரிசாகக் கொடுத்துள்ளனர் பீகார் பெற்றோர்.
பாட்னா: பீகாரில் ஏழு தலைமுறைக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு, பிறந்தநாள் பரிசாக அவரது பெற்றோர் நிலாவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளனர்.
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சுர்விந்தர் ஜா மற்றும் சுதா ஜா தம்பதி. மருத்துவர்களான இவர்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஆஸ்தா எனப் பெயரிடப்பட்ட அக்குழந்தை, அவர்களது வம்சத்தில் ஏழு தலைமுறைக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தையாம்.
எனவே அக்குழந்தை மீது அக்குடும்பத்தார் மிகுந்த பாசம் வைத்துள்ளனர். குடும்பமே கொண்டாடும் அக்குழந்தையின் இரண்டு இலக்க முதல் பிறந்தநாளை, அதாவது பத்தாவது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட அவர்கள் முடிவு செய்தனர். அந்த நாளில் ஆஸ்தாவுக்கு, அவரது வாழ்நாளில் மறக்க முடியாத வித்தியாசமான பரிசைத் தர வேண்டும் என ஜாவும் அவரது மனைவியும் விரும்பினர்.

பிறந்தநாள் பரிசு
அதன்படி, ஆஸ்தாவின் பத்தாவது பிறந்தநாளுக்கு நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி பரிசாகக் கொடுத்து அசத்தியுள்ளனர். சொந்தமாக மருத்துவமனை நடத்தி வரும் சுர்விந்தர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலம் வாங்கும் வேலையை ஆரம்பித்து விட்டாராம். கலிபோர்னியாவில் உள்ள லூனா சொசைட்டியின் இணையதளத்தில் விண்ணப்பித்து, உரிய ஆவணங்களையும் ஆன்லைன் வாயிலாகவே சமர்ப்பித்துள்ளார்.

நிலாவில் நிலம்
நிலத்துக்கான தொகையையும் இணையம் வாயிலாகவே செலுத்தியுள்ளார் ஜா. அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்த பின்னர், நிலத்தில் ஆஸ்தாவின் பெயரில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்துக்கான பத்திரத்தை தபால் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் ஜா தம்பதிக்கு அனுப்பியுள்ளது. அந்தப் பத்திரத்தைத்தான் தங்களது செல்ல மகளுக்கு பிறந்தநாள் பரிசாக அவர்கள் வழங்கியுள்ளனர்.

கொண்டாடப்பட வேண்டியவர்கள்
"பெண் குழந்தைகள் எப்போதுமே கொண்டாடப்பட வேண்டியவர்கள் தான். கடந்த ஏழு தலைமுறைகளாக எங்கள் குடும்பத்தில் பெண் குழந்தைகளே இல்லை. அதனால் ஆஸ்தா பிறந்தபோது, எங்கள் குடும்பமே மகிழ்ச்சிக் கடலில் நீந்தியது. அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவே அவரது பத்தாவது பிறந்தநாளில் அவருக்கு நிலாவில் இடம் வாங்கிப் பரிசளித்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார் சுர்விந்தர் ஜா.

ஆர்வம்
சமீபகாலமாக வித்தியாசமான பரிசாக இப்படி நிலாவில் நிலம் வாங்கி பரிசளிப்பது மக்களிடையே அதிகரித்துள்ளது. ஏற்கனவே கடந்தாண்டு ஒடிசாவில் புதிதாக பிறந்த தன் மகளுக்கு இதே போல் அவரது பெற்றோர் நிலாவில் இடம் வாங்கி பரிசளித்தனர். இதேபோல், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் தனது மகனுக்கும், பேத்திக்கும் நிலாவில் நிலம் வாங்கிப் பரிசாகக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications