"ஆதாரம் இருக்கு.. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உணவில் ஏதோ கலக்கப்படுகிறது.. " பரபர குற்றச்சாட்டு
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உணவில் விஷம் கலக்கப்படுவதாக ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் சில பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் இப்போது நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கே ஆர்ஜேடி, ஜேடியூ மற்றும் காங்கிரஸ் இணைந்து ஆட்சியைப் பிடித்துள்ளது. நிதிஷ்குமார் மாநில அரசியலைத் தாண்டிலும் தேசியளவிலும் ஆக்டிவாக இருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் கூட்டணியாக இந்தியாவை உருவாக்குவதிலும் கூட நிதிஷ்குமாருக்கு முக்கிய இடம் இருக்கிறது. இதற்கிடையே பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது சில பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நிதிஷ்குமார்: பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் உணவில் சில விஷம் பொருட்கள் கலக்கப்படுவதாகப் பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நிதிஷ்குமாரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கச் சதி நடப்பதாகவும், இதனால் அவரது உணவில் சிலர் விஷத்தைக் கலைப்பதாகவும் ஜிதன் ராம் தெரிவித்தார். நிதிஷ்குமாரின் சமீபத்திய செயல்பாடுகளும் அவரது உடல்நிலை குறித்த கவலையை ஏற்படுத்துகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய ஜிதன் ராம், "பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சமீபத்தில் அஞ்சலிக் கூட்டத்திற்குச் சென்றிருந்தார். அப்போது, அவர் அங்கிருந்த மகாவீர் சௌத்ரியின் போட்டோவுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்த வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக அவரது உயிருடன் இருந்த அவரது மகன் அசோக் சௌத்ரி மீது மலர்களை வீசி வாழ்த்துக் கூறினார். இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அவருக்கு ஏதோ பிரச்சினை இருப்பது போலவே தெரிகிறது" என்றார்.
அசோக் சவுத்ரி: சமீபத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் உயிரிழந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக அவரது மகன் அசோக் சவுத்ரிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அது பெரும் சர்ச்சையானது. மேலும், சமீபத்தில் பீகார் சட்டசபையில் நிதீஷ் குமார் கோபமடைந்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிதிஷ்குமார் மீது இப்போது பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஜிதன் ராம், இப்போது மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM-S) என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார். கடந்த 2014 லோக்சபா தேர்தலில் அவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்த போது, பீகார் முதல்வராக அவர் சில காலம் இருந்தார். அப்போது லோக் சபா தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று நிதிஷ்குமார் பதவி விலகிய நிலையில், அப்போது சில காலம் ஜிதன் ராம் முதல்வராக இருந்தார்.
சட்டசபை: சமீபத்தில் பீகார் சட்டசபையில் ஜிதன் ராம் குறித்து பேசும் போது டென்ஷன் ஆன நிதிஷ்குமார், "ஜிதன் திரும்பத் திரும்ப நானும் முதல்வராக இருந்துள்ளேன் என்று கூறி வருகிறார். என்னுடைய முட்டாள்தனத்தால் அவர் முதல்வர் ஆனார். அவருக்கு அறிவு இருக்கிறதா என்று தெரியவில்லை" என்று ஆவேசமாகப் பேசினார். அப்போது குறுக்கிட்ட பீகார் சபாநாயகர் அவத் பிஹாரி சவுத்ரி, "உங்கள் தயவால் தான் அவர் முதல்வரானார்" என்று கூறிய பின்னரே நிதிஷ் குமார் தனது இருக்கையில் அமர்ந்தார்.
பீகார் சமீபத்தில் தான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருந்தது. அதன் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர், ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்த தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது நடந்த விவாதத்தில் தான் நிதிஷ்குமார் இந்த கருத்துகளைத் தெரிவித்தார். இந்த தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications