Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடாமுயற்சி+ கட்சி பலம்.. கூடவே சேர்ந்த மோடி மேஜிக்.. பீகாரில் பாஜக படிப்படியாக வளர்ந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பாஜகவை பொறுத்தவரை பீகார் அதற்கு ஒரு முக்கிய மாநிலமாகவே இருந்து வருகிறது. கடந்த காலங்களில் பாஜகவின் செயல்பாடுகள் பீகாரில் எப்படி இருந்தது. அதன் எழுச்சி அங்கு எப்படி அமைந்தது என்பது குறித்துக் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

பீகார் மாநிலத்தைப் பொறுத்தவரை இப்போது அங்கு பாஜக அசைக்க முடியாத ஒரு முக்கிய சக்தியாக இருக்கிறது. தனிப்பெரும்பான்மை பெறும் அளவுக்கு பலம் இல்லையென்றாலும் கூட கூட்டணியில் கிங் மேக்கராக இருக்கும் அளவுக்கு உருவாகியுள்ளது. இந்த வளர்ச்சி சட்டென வந்தது இல்லை.. மெல்ல மெல்ல பாஜக வளர்ந்து இந்த நிலைக்கு வந்துள்ளது.

Bihar Election 2025 BJP Bihar Election Results 2025 2025 2025

இந்தி ஹார்ட்லேண்ட்

பீகார் என்பது இந்தி ஹார்ட்லேண்டில் முக்கிய மாநிலமாக இருப்பதால்.. பாஜக தொடக்கம் முதலே அங்குக் கவனம் செலுத்தி வந்தது. பாஜக 1980ல் தொடங்கப்பட்ட நிலையில், அந்தாண்டு நடந்த பீகார் தேர்தலில் மட்டும் பாஜக போட்டியிடவில்லை. 1985ல் நடந்த தேர்தலில் பாஜக முதல்முறையாக பீகாரில் களமிறங்கியது. அப்போது பீகாரும் ஜார்க்கண்டும் ஒரு மாநிலமாக இருந்ததால் மொத்தத் தொகுதிகள் 324ஆக இருந்தது. அப்போது காங்கிரஸ் வலிமையாக இருந்த நிலையில், பாஜகவுக்குப் பெரியளவில் பலம் இல்லை. அந்தத் தேர்தலில் பாஜக வெறும் 16 இடங்களில் மட்டுமே வென்றது.

1990ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 237ல் போட்டியிட்டு 39 இடங்களைக் கைப்பற்றியது. அதாவது வெறும் ஐந்தே ஆண்டுகளில் அது முந்தைய தேர்தலை விட வென்ற இடங்களை விட இருமடங்கு அதிக இடங்களில் வென்றது. இந்தத் தேர்தல் தான் பீகாரில் காங்கிரஸின் வீழ்ச்சியைத் தொடங்கி வைத்தது. அதேபோல ஜனதா தளம் கட்சிக்கு (122 இடங்கள்) ஒரு எழுச்சியையும் கொடுத்தது. அதுவரை பீகாரில் காங்கிரஸ் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய நிலையில், அரசியல் போட்டி அதிகரித்தது.

எதிர்க்கட்சி

1995 தேர்தலிலும் பாஜகவின் வளர்ச்சி தொடர்ந்து, 41 இடங்களை வென்றது. அந்தத் தேர்தலில் 315 தொகுதிகளில் போட்டியிட்டு பாஜக 41ல் வென்றது. லாலு பிரசாத் யாதவின் ஜனதா தளம் ஆட்சியை அமைத்தது. காங்கிரஸ் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில், பீகாரில் பாஜக முதல்முறையாக ஒரு வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

2000ம் ஆண்டு தான் ஒருங்கிணைந்த பீகாராக நடந்த கடைசி தேர்தலாகும். அந்தத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் நிதிஷும் வந்து சேர்ந்திருந்தார். பாஜக அந்தத் தேர்தலில் 67 இடங்களைக் கைப்பற்றிக் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்தது. இது பாஜகவுக்குக் கட்சிக்கு ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்தத் தேர்தலுக்குப் பிறகு தான் யார் ஆட்சியை அமைப்பது என்பதிலும் பீகாரில் பெரும் குழப்பம் நடந்தது. அந்தக் குழப்பத்தின் விளைவாக பீகார் மாநிலத்தில் இருந்து ஜார்கண்ட் தனியாகப் பிரிக்கப்பட்டது. இதனால் பீகாரின் மொத்த இடங்கள் 243ஆக குறைந்தது.

முதல்முறையாக ஆட்சி

2005ல் ஒரே ஆண்டில் பீகாரில் இரு முறை தேர்தல் நடந்தது. முதலில் 2005 பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் 103 இடங்களில் போட்டியிட்ட பாஜக 37 இடங்களில் வென்றது. நிதிஷ் கட்சி முதல்முறையாக பாஜகவை விட கூடுதல் இடங்களை வென்றது இதுவே முதல்முறை. பாஜக, நிதிஷ் கட்சி ஒரே கூட்டணியில் போட்டியிட்ட போதிலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆர்ஜேடி கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதையடுத்து அதே ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் தேர்தல் நடந்தது. அதில் பாஜக- நிதிஷ் கட்சி மிக பெரிய வெற்றியைப் பெற்றது. பெரும்பான்மைக்குத் தேவையான வெற்றியைப் பெற்று என்டிஏ ஆட்சியைப் பிடித்தது. பாஜக மட்டும் இந்தத் தேர்தலில் 102 இடங்களில் போட்டியிட்டு 55 இடங்களில் வென்றது.

மெகா வெற்றி

பீகாரில் என்டிஏ அரசு முதல்முறை 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட 2010 தேர்தல் நிதிஷ் குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலாக அமைந்தது. சட்ட ஒழுங்கு, வளர்ச்சி சிறப்பாக இருந்ததால் அதிகப்படியான மக்கள் என்டிஏவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அப்போது அங்கு மாநிலம் முழுக்க என்டிஏ அலை அடித்தது என்றே சொல்லலாம். நிதிஷ் செயல்பாடுகளால் பாஜகவும் பலன் பெற்றது. 102 இடங்களில் போட்டியிட்ட பாஜக 91 இடங்களில் வென்றது. இதுநாள் வரை பாஜக அங்குப் பெற்ற அதிகபட்ச சீட்கள் இதுவாகும்.

அடுத்த ட்விஸ்ட்

அடுத்த 5 ஆண்டுகளில் பீகார் அரசியல் பல மாற்றங்களைச் சந்தித்தது. 2013ல் மோடியின் எழுச்சியால் நிதீஷ் குமார் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகியிருந்தார். இதனால் பாஜக சிறு கட்சிகளை இணைத்துக் கொண்டு போட்டியிட்டது. 2014 லோக்சபா தேர்தலில் மோடி அலை வீசிய போதிலும், 2015ல் நடந்த பீகார் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதிகபட்ச வாக்குகளைப் பெற்றிருந்தாலும், பாஜகவால் 53 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.

ஆதிக்கம் ஆரம்பம்

நிதிஷ் குமார் 2017ல் மீண்டும் என்டிஏ கூட்டணியில் ஐக்கியமானார். 2020ல் நிதிஷ்-பாஜக இணைந்து மீண்டும் என்டிஏ கூட்டணியில் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் தான் நீண்ட நாட்களாக பாஜக எதிர்பார்த்த ஒரு பூஸ்ட் கிடைத்தது. ஜேடியு 43 இடங்களை மட்டும் வென்ற நிலையில், பிரதமர் மோடியின் செல்வாக்கு மற்றும் பாஜகவின் கட்டமைப்பால் பாஜக 74 இடங்களைக் கைப்பற்றியது. இந்த கூட்டணி தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, நிதிஷ் கட்சியை விட பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியது. நிதிஷ் குமார் முதலமைச்சராகத் தொடர்ந்தாலும் அமைச்சரவையில் என்டிஏ கை ஓங்கியிருந்தது.

பாஜக

அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் காங்கிரஸ் வீழ்ச்சியைச் சந்திக்க ஆரம்பித்தபோது பீகாரில் பாஜக உள்ளே நுழைந்தது. நிதிஷின் எழுச்சி ஆரம்பித்தவுடன் பாஜகவால் வளர்ச்சியைத் தக்கவைக்க முடியவில்லை. சிறிய கூட்டணிக் கட்சியாகவே இருந்த பாஜக, 2020ல் மோடியின் செல்வாக்கு மற்றும் கட்சி கட்டமைப்பால் கூட்டணியில் பிரதானக் கட்சியாக உருவெடுத்தது. இந்தச் சூழலில் தான் சம அளவு இடங்களில் நிதிஷ் கட்சியும் பாஜகவும் இந்த முறை போட்டியிட்டது. இதில் யார் பிரதானக் கட்சியாக மாறப் போகிறார்கள் என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+